Picasa
ஆன்மிகம்

சம்சார சிக்கல்களைத் தீர்க்கும் சம்மோஹன கிருஷ்ணர்!

ரேவதி பாலு

சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர வடிவம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணரின் அர்த்தநாரீஸ்வர வடிவம் எங்கிருக்கிறது தெரியுமா? நாமக்கல் அருகே மோகனூர் என்னும் ஊரில் குடிகொண்டுள்ளார் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர்.  அவரது பாதி உடலை ராதைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வர கிருஷ்ணராக கொள்ளை அழகோடு காட்சியளிக்கிறார் கோபாலன். இந்த சன்னிதி மோகனூரில் ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் காணப்படுகிறது. இதைத் தவிர, ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கும் ஒரு சன்னிதி இங்கு உள்ளது.

இந்தக் கோயிலில் நடைபெறும் சத்யநாராயணா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜை மாதாமாதம் பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் வேண்டுதல் பொருட்டு மட்டைத் தேங்காயை வாங்கிக் கொடுத்து கலந்து கொள்கிறார்கள். பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை வீட்டுக்குக் கொண்டு வந்து தங்கள் பூஜை அறையில் வைத்துக்கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மட்டைத் தேங்காயை திருவோண நட்சத்திரத்தன்று கோயிலுக்குக் கொண்டு சென்று அர்ச்சனை செய்து நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.

இந்தத் தலத்திலுள்ள சிவனுக்கு அச்சாலதீபேஸ்வரர் என்று திருநாமம். ஸ்ரீ கல்யாண பிரஸன்ன வெங்கடரமண ஸ்வாமியே மோஹன ஸ்ரீனிவாசன் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களை மோஹனமாக வசீகரித்து கவர்ந்திழுப்பதால் பெருமாளுக்கு இப்படி ஒரு திருநாமம். இவரது திருப்பெயராலேயே இந்த ஊர் மோகனூர் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர் விக்ரஹத்தின் வலது பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் சிரத்தில் மயிலிறகு காணப்படுகிறது. இடது பக்கத்தில் ராதையின் சிரத்தில் கொண்டையுடன் கூடிய நீளப்பின்னல் காணப்படுகிறது. வழக்கமாகக் காணப்படும் சங்கு சக்கரத்தைத் தவிர, ஸ்ரீகிருஷ்ணரின் திருக்கரங்களில் ஒரு அங்குசமும் காணப்படுகிறது. யானைப் பாகன் எப்படி ஒரு அங்குசத்தால் யானையை அடக்குவாரோ, அதேபோல ஸ்ரீ கிருஷ்ணர் தனது திருக்கரத்தில் உள்ள அங்குசத்தால் தம்பதியருக்கிடையே உள்ள பிணக்கு, அதனால் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதாகச் சொல்லப்படுகிறது. தம்பதியரிடையே பரஸ்பர அன்பு நீடித்து சுமுக உறவு ஏற்பட இந்தக் கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் கீழ் கரங்களில் புஷ்ப பாணமும் கரும்பு வில்லும் காணப்படுகிறது காமன் கைகளில் இருப்பதைப் போல.  இதைக்கொண்டு தம்பதியரிடையே அன்பையும் காதலையும் நேசத்தையும் தூண்டி வளர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்:

‘ஸ்ரீ கிருஷ்ணம் கமல பத்ராக்ஷம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதி சுந்தர மோஹனம்

பாகம் தக்ஷிணம் புருஷம் அந்ய ஸ்த்ரீ ரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோகனம் ஸ்ரீ கிருஷ்ணமாஸ்ரயே!’

திருமணமான தம்பதியரிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு 16 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த ஸ்லோகம் சொல்லி சம்மோஹன கிருஷ்ணரை பிரார்த்தனை செய்துகொள்ள 16வது வாரத்துக்குள் அவர்கள் கோரிக்கை நிறைவேறிவிடுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவமாக இருக்கிறது. 16ம் வாரம் இங்கே வந்து கல்கண்டு விநியோகம் செய்து தங்கள் பிரார்த்தனையை முடித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள். 16 வாரங்களும் நேரில் வர முடியாதவர்களுக்கு கோயிலிலேயே அவர்கள் சார்பில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அதேபோல, குழந்தை பாக்கியம் வேண்டுவோர் 16 வியாழக்கிழமைகள் இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். அப்படிப் பிரார்த்தன செய்துகொள்ளும் தம்பதியருக்கு ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்த வெண்ணெய் பிரசாதமாக உண்ணத் தரப்படுகிறது.

இக்கோயிலில் தன்வந்திரி பகவானுக்கும் ஒரு சன்னிதி இருக்கிறது. இங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சூரணம் மருந்தாகத் தரப்படுகிறது. இதைத் தவிரவும் லட்சுமி ஹயக்ரீவர், மேதா சரஸ்வதி, லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஹனுமன் ஆகிய கடவுளருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

தம்பதியருக்கிடையே சுமுகத்தை ஏற்படுத்தி திருமண உறவை உறுதிப்படுத்தும் வல்லமை பெற்ற ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர் ஆலயத்துக்கு திருமணமான தம்பதிகள் அனைவரும் சென்று அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணரை தரிசித்து அருளைப் பெற வேண்டும்.

நெற்றிக்கண் கொண்ட நரசிம்மர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலக சிறுவர் கதைகள்: 3 - முட்டாள் என அறியப்படுகிறவன் (துருக்கி நாட்டுப்புறக் கதை)!

தமிழர்களுக்காக உயிரைவிட்ட 'ஆங்கிலேய பாண்டியன்' யார் தெரியுமா? Done mam

உதிர்ந்த தலைமுடியையும் மீண்டும் முளைக்கவைக்கும் ஆரோக்கிய எண்ணெய்!

கலக்கலான தேங்காய்ப் பால் சாதமும், கவுனி தோசையும்!

SCROLL FOR NEXT