‘ராம நாமம் சொன்னாலும், ஸ்ரீராம ஜெயம் எழுதினாலும் துன்பங்கள் விலகும்’ என பலரும் பல காலமாகக் கூறி வருகிறார்கள். இதை சொல்வதாலும், கேட்பதாலும் என்ன பலன் என்ற சந்தேகம் ஒரு சமயம் தேவ ரிஷி நாரதருக்கு வந்தது. இதற்கு அவர் பலரிடமும் விளக்கம் கேட்க, யார் சொன்ன பதிலும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இறுதியாக, வைகுண்டம் சென்று, "ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை? அதைச் சொன்னால் என்ன பலன் என்பதை எனக்கு விளக்கமாகச் சொல்லி எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சுவாமி" என பரந்தாமனிடமே கேட்டார்.
உடனே மகாவிஷ்ணு, "அதோ பூமியில் ஒரு புழு நெளிகிறதே? அதன் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றார். நாரதரும் சென்று அந்தப் புழுவின் காதில் ராம நாமத்தைச் சொல்ல , உடனே அந்தப் புழு இறந்து விட்டது. பதறிப்போன நாரதர், மகாவிஷ்ணுவிடம் வந்து இந்த விபரத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பெருமாள், “சரி போகட்டும், அதோ பறந்து செல்லும் அந்தப் பட்டாம்பூச்சியின் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றார்.
நாரதரும் அப்படியே சொல்ல, அந்தப் பட்டாம்பூச்சியும் இறந்து விட்டது. மீண்டும் பெருமாளிடம் இதைக் கூற பெருமானும், “சரி, அதே அந்தக் குடிசை வீட்டில் உள்ள ஒரு பசு கன்று ஈனப் போகிறது. அந்தக் கன்றின் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றார்.
சற்றே தயக்கத்துடன் சென்று, பிறந்த அந்தக் கன்றுக்குட்டியின் காதிலும் ராம நாமத்தைச் சொல்ல அதுவும் உடனே இறந்து விட்டது. திரும்பி வந்த நாரதர், மகாவிஷ்ணுவிடம் “ராம நாமத்தின் மகிமையை கேட்க வந்தால், ஒவ்வொரு உயிர்களின் காதிலும் சொல்ல அவை இறந்து விடுகின்றன. இதுவா ராம நாமத்தின் மகிமை?” என்றார்.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, “குழப்பம் வேண்டாம் நாரதா, இந்த நாட்டின் மன்னனுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது அதன் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றவுடன், நாரதர் நடுங்கிப் போனார்.
“ஏற்கெனவே நடந்தது போல நடந்து விட்டால் என்ன செய்வது? யாருடைய கண்ணிற்கும் தெரியமாட்டேன் என்பதால் தப்பித்தேன். மன்னர் என்னைக் கண்டுபிடித்து விட்டால் என் நிலை என்ன ஆகும்?” எனப் புலம்பினார். அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினார் மகாவிஷ்ணு.
நாரதர், அரண்மனைக்கு வந்தபோது மன்னனுக்கு குழந்தை பிறந்திருந்தது. அந்தக் குழந்தையின் காதில் ராம நாமத்தைச் சொல்லச் சென்றபோது, ஆச்சரியமாக அந்தக் குழந்தை பேசியது, "என்ன நாரதரே நலமா?” என விசாரித்தது.
நாரதருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘பிறந்த குழந்தை பேசுகிறது? எப்படி நான்தான் நாரதர் என இதற்குத் தெரியும்?’ என மனதில் கேள்வி எழ, உடனே, அந்தக் குழந்தை, “என்னைத் தெரியவில்லையா? என்னுடைய இந்த நிலைக்கு நீங்கள்தானே காரணம்” என்றது. அதைத் தொடர்ந்து, “மண்ணில் புழுவாக நான் நெளிந்தபோது ராம ராமத்தை நீங்கள் எனது காதில் சொன்னவுடன் புனிதம் அடைந்து, மறு பிறவியில் பட்டாம் பூச்சியாகப் பிறந்தேன். அப்போதும் எனது காதில் ராம நாமத்தைச் சொல்லி, புனிதம் அடைந்து கன்று குட்டியாகப் பிறந்தபோதும் ராம நாமத்தைச் சொல்லி எனது நிலைமையை மேலும் உயர்த்தினீர்கள். இப்படி, எனது காதில் சொன்ன ராம நாமத்தின் பலனாக இப்போது இந்த நாட்டின் மன்னனுக்கு குழந்தையாக பிறந்து மனிதப் பிறவியைப் பெற்றுள்ளேன். நீங்கள் சொன்ன ராம நாமத்தை நான் ஒரு முறை காதில் கேட்டதற்கே இத்தனை உயர்வு கிடைத்துள்ளதே?” என்றது அந்தக் குழந்தை.
இதன் மூலம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்பவர்களுக்கு எத்தனை பெரிய உயர்வான இடம் கிடைக்கும் என்பதை மகாவிஷ்ணுவிடம் கேட்டு தெரிந்துகொண்டார் நாரத மகரிஷி.