ஷீர்டி சாயிபாபாவின் புகழ், செல்வந்தர் ஒருவரின் செவிகளுக்கு எட்டியது. அவர், ‘தனக்கு எந்த விதமான பொருளும் தேவையில்லை. பிரம்ம ஞானம் ஒன்று மட்டுமே வேண்டும் என்றும், அதனால் ஷீர்டிக்கு சென்று பாபாவிடம் பிரம்ம ஞானத்தை அருளும்படி வேண்டப்போகிறேன்’ என தனது நண்பரிடம் கூறினார்.
ஆனால் நண்பரோ, அவரது கருத்தை மாற்ற முயன்றார். “பிரம்மத்தை அறிவது எளிதல்ல. அதிலும் குறிப்பாக, மனைவி, மக்கள், செல்வம் போன்ற கவனங்களிலேயே முழுவதுமாக கவரப்பட்டு இருக்கும் உங்களைப் போன்ற பணக்காரருக்கு அது எளிதே அல்ல. தருமமாக ஒரு பைசாவையும் செலவழிக்காத உமக்கு பிரம்ம ஞானத்தை அளித்து யாராலும் திருப்தி செய்ய முடியாது” என்று கூறினார். ஆனால், அந்த செல்வந்தரோ, தனது நண்பரின் கருத்தை அலட்சியப்படுத்திவிட்டு ஷீர்டிக்கு வந்து சேர்ந்தார்.
பாபாவை தரிசித்த அந்த செல்வந்தர், அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, “பாபா, இங்கு வருபவர்களுக்கு தாங்கள் பிரம்ம ஞானத்தை அருளுவதாகக் கேள்விப்பட்டு நானும் தொலைவில் இருந்து வந்துள்ளேன். எனக்கும் தாங்கள் பிரம்ம ஞானத்தை அருள வேண்டும்” என்று இறைஞ்சினார்.
அதைக்கேட்ட பாபா, “எனதருமை நண்பனே, கவலைப்படாதே. நான் உனக்கு பிரம்மத்தை காண்பிக்கிறேன். பலர் என்னிடம் செல்வம், தேக ஆரோக்கியம், புகழ், பதவி, நோய் தீர்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர். ஆனால், உம்மைப் போன்ற ஒருவர் என்னிடம் பிரம்ம ஞானம் வேண்டுவதை எனது அதிர்ஷ்டமும் புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன். எனவே, நான் மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தை அடைவதில் உள்ள சூட்சுமத்தை தெரிவிப்பேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து, செல்வம் அடிப்படையிலான பல சோதனைகளை அந்த செல்வந்தரிடம் நிகழ்த்தினார் பாபா. ஆனால், அந்த சோதனைகளில் அந்த செல்வந்தர் தேறவில்லை. ஆனாலும், அந்தப் பணக்காரர் விடாமல், “பாபா தயவு செய்து எனக்கு பிரம்மத்தை காண்பியுங்கள்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
அதைக்கேட்ட பாபா, “பிரம்மத்தினை ஒருவன் கண்டுணர ஐந்து பொருட்களை சமர்ப்பிக்க வேண்டும். அவை: ஐந்து பிராணங்கள், ஐந்து உணர்வுகள், மனது, புத்தி, அகங்காரம் ஆகும். பிரம்ம ஞானம் அல்லது ஆத்மானுபூதி என்பது கத்தி முனையில் நடப்பதற்கு ஒப்பானதாகும்” என்று ஆரம்பித்து, அந்தப் பணக்காரருக்கு மட்டுமல்ல, உலகிலுள்ளோர் அனைவரும் உணரும்படி பிரம்ம ஞானத்துக்கான வழியைக் கூறினார்.
1. முமுக்ஷு அல்லது விடுதலை அடையச் செறிந்த விருப்பம், 2. இவ்வுலகம் மறு உலகப் பொருட்களின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி, 3. அந்தர் முகத்தா (உள்முக சிந்தனை), 4. தீவினைகள் கசடற கழிபடுதல், 5. ஒழுங்கான நடத்தை, 6. விருப்பங்களை விலக்குதல், 7. மனதை மற்றும் உணர்வுகளை அடக்கி ஆளுதல், 8. மனத்தூய்மை, 9. குருவின் இன்றியமையாமை, 10. இறுதியாக, கடவுளின் அனுக்கிரஹம் என பிரம்ம ஞானத்தை அடைவது குறித்தான பத்து வழிமுறைகளை தனது அருளுரையாக அந்தப் பணக்காரருக்கு அருளினார் பாபா.
இதனைக் கேட்ட அந்த செல்வந்தர் பிரம்ம ஞானம் அறிந்திருப்பாரோ இல்லையோ, அதன் பின் சுகபோகத்திலிருந்து விலகி ஆன்மிகத்தை நாடியிருப்பார் என்பது மட்டும் உறுதி.