மனிதர்களால் முடியாத பல காரியங்களை தங்கள் மாபெரும் ஞான சக்தி கொண்ட சித்துகளால் நிறைவேற்றிக் காட்டி மக்களுக்கு வழிகாட்டியாக இன்றும் வாழ்ந்து வருபவர்கள் சித்தர்கள். அந்த சித்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தவமிருந்த திருத்தலம் என்ற பெருமையுடன் திகழ்கிறது திருச்சியில் பிரசித்தி பெற்ற வெள்ளூர் திருக்காமேஸ்வரர் ஆலயம்.
இந்த சிவாலயத்தின் மூலவர் திருக்காமேசுவரர் எனவும், அம்பாள் சிவகாம சுந்தரி எனவும் திருநாமம கொண்டு அருள்பாலிக்கிறார்கள். இந்த ஆலயத்தை கி.பி. 6ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. தம்பதியர் ஒற்றுமை, மாங்கல்ய பலம், திருமணத் தடை நீக்குதல், செல்வ வளம் போன்றவற்றை அருளும் பரிகாரத் தலமாக இக்கோயில் திகழ்கிறது.
பல்வேறு ஆன்மிக சிறப்புகளைக் கொண்டுள்ளது இந்த சிவாலயம். வேறெங்கும் இல்லாத சிறப்பாக வில்வ மர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி காட்சியளிப்பது, சிவனை வழிபட்டு போகத்துக்கு சுக்ரன் அதிபதியானது, ராவணனுக்கு உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டத்தைச் சூட்டியது மற்றும் குபேரன் திருக்காமேசுவரரை வழிபட்டு தனாதிபதியாக மாறியது என பல சிறப்புகள் இருந்தாலும், இக்கோயிலில் குறிப்பிடத்தக்க சிறப்பாகக் கருதப்படுவது சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சிவபோகச் சக்கரம் ஆகும்.
போகர் ‘ஏழாயிரம்’ என்ற நூலில், சித்தர்கள் எங்கு சென்று தவம் செய்தாலும் சித்தியாகாத காரியங்கள், திருச்சி வெள்ளூர் திருக்காமேசுவரர் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தியாகும் என்பதால் போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் இந்த ஆலயத்தை சூழ்ந்து தவம் செய்வதாகவும், இங்கு போகர் சிவபோகச் சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, பழநியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இன்றும் திருக்காமேசுவரர் திருக்கோயிலிலின் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தைத் தரிசனம் செய்யலாம் என்கின்றனர். மேலும், ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கம்பீரமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற சித்தர்கள் இங்கு தவம் செய்வதாக அகஸ்தியர் நாடியிலும், வசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்புக்குரியது.
சித்தர்களுக்கே சித்தி தரும் சிறப்பு மிகுந்த இத்தலத்தின் ஈஸ்வரரையும் அம்பாளையும் வாய்ப்பு கிடைத்தால் வழிபட்டு ஈஸ்வர அருளோடு சித்தர்களின் ஆசிகளையும் பெற்று நலம் பெறுவோம்.