நவகிரகங்களில் ஒருவராக விளங்கும் சனி பகவானை சனிக்கிழமைகளில் ஒன்பது முறை வலம் வருவதும் மற்றும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதும் சனி பகவானின் தாக்கத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில்,
‘நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸ்னைச்சரம்’
எனும் சனி பகவானுக்கு உரிய மந்திரத்தை சொல்லி வழிபடுவது பல்வேறு நலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
அதுபோலவே, அனுமனை வழிபடுபவர்களை சனி பகவான் தொந்தரவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுவது உண்டு.
ஒரு சமயம் அனுமன், சூரிய பகவானிடம் தனது கல்வியைக் கற்றுக் கொண்டாராம். ‘குரு தட்சணையாக தனக்கு எதுவும் வேண்டாம்’ என்று சூரிய பகவான் கூறவே, அனுமன் தாம் ஏதாவது குரு தட்சணை தந்தே தீர வேண்டும் என்று வற்புறுத்த, தனது மகன் சனி பகவானின் அகந்தையை அழிக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
அதன்படியே அனுமனும் சனி பகவானிடம் சென்று அவரது அகந்தையை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாராம். இதனால் கோபம் கொண்ட சனி பகவான், அனுமனின் தோள் மீது தாவி ஏறி உட்கார்ந்து கொண்டாராம்.
அனுமனோ, தனது உருவத்தை பெரிதாக்கிக்கொண்டே போக, அனுமனின் தோள் மீது அமர்ந்திருந்த சனி பகவான், வலி தாங்க முடியாமல் கதறினார். அப்போது அனுமன், சனி பகவானிடம் ஒரு வரம் கேட்டாராம். அதன்படி, ‘அனுமனின் பக்தர்களுக்கு தான் எந்த கெடுதலையும் தொந்தரவையும் தர மாட்டேன்’ என்று சனி பகவான் வரம் கொடுத்தாராம். அதனால் அனுமனை வழிபட்டு வந்தால் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
காகத்திற்கு தினமும் சாதம் வைப்பதும், சனிக்கிழமைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தாக்கத்தை குறைக்கும்.
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
எனும் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லியும் சனி பகவானின் தாக்கத்தைக் குறைத்து நல்லருளைப் பெறலாம்.