குரு தட்சணை என்பது மிகவும் முக்கியமானதுதான். ஆனாலும், குருவின் சொல் கேளாமல், பிடிவாதமாக இருந்தால் எவ்வளவு துன்பப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது இந்த ஆன்மிகக் கதை. ராஜ ரிஷியான விஸ்வாமித்திரரிடம் கல்வி பயில அநேக முனிவர்களின் வாரிசுகள் போட்டி போடுவர். அவரது சீடர் என்று சொல்லிக்கொள்வதிலும், அறிவில் சிறந்த அவரிடம் கல்வி கற்பதிலும் அவ்வளவு பெருமை. இந்த நிலையில் வறிய குடும்பத்தினைச் சேர்ந்த காலவர் எனும் பெயர் கொண்ட முனிகுமாரர் ஒருவர் தனது நற்பண்புகளின் காரணமாக விஸ்வாமித்திரரிடம் சீடராகச் சேர்ந்தார்.
காலவர் வெகு காலம் விஸ்வாமித்திரர் உடன் இருந்து கல்வி கற்றும், அவரது மனம் மகிழும் வகையில் பணிவிடைகள் செய்தும் வந்தார். காலவரின் ஒழுக்கமும் பண்பும் முனிவருக்கு மிகுந்த திருப்தியை கொடுக்க, காலமும் கணிந்ததால் விஸ்வாமித்திரர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காலவரை அழைத்து, இனி அவர் இல்லற வாழ்வை மேற்கொள்ளும்படி உத்தரவு அளித்தார். காலவர் கல்வி பயில சேரும்போதே குருவுக்கு தட்சணை தர வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆகவே, அதற்கான தருணம் வந்தது என மகிழ்ந்து குருவிடம், “குருவே தங்களுக்கு காணிக்கையாக ஏதேனும் தர வேண்டும் என ஆசைப்படுகிறேன். தாங்கள் விரும்புவதைத் தெரிவித்தால் மகிழ்வேன்” என்றார்.
காலவரின் ஏழ்மை நிலை அறிந்த விஸ்வாமித்திரர், “அப்பா, என்னிடம் இவ்வளவு காலம் ஒழுங்காக நடந்து கொண்டதே குரு தட்சணைக்கு சமானம். தவிர, நீயோ வறியவன். வீணாக பேராவல் கொண்டு வருந்தாதே. எனக்கு யாதொரு தட்சணையும் வேண்டியதில்லை” என்று பலவாறாக புத்திமதி சொல்லி காலவரை திசை திருப்ப முயன்றார். ஆனால், குரு என்ன சொல்லியும் காலவர் கேட்கவில்லை. கடைசியில், ‘எல்லாம் விதி… பட்டால்தான் இவன் பிடிவாதம் அகலும்’ என்று மனதில் நினைத்த விஸ்வாமித்திரர், “தேகமெல்லாம் வெளுத்தும் ஒரு காது மாத்திரமுள்ள எண்ணூறு குதிரைகள் எனக்கு வேண்டும். கொண்டு வா பார்க்கலாம்” என்றார்.
உடனே காலவர் அவற்றைப் பெற்று வரப் புறப்பட்டார். கல்லும் முள்ளும் கால்களில் ஏற, வனங்கள், நாடுகள் என எங்கும் அவர் தேடிய இடங்களில் இவை அகப்படாமல் போக, களைத்து வீழ்ந்தவர், இறைவனை வேண்ட அவரது தவப்பயனால் கருடன் மூலம் கிடைத்த உதவியால் இந்த உலகமெங்கும் சுற்றிப் பார்த்தார். எப்படியும் குரு கேட்ட தட்சணையுடன்தான் திரும்ப வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு சுற்றி வருகையில், அரசன் யயாதியிடம் வந்து சேர்ந்தான்.
அவரிடம் தனது தேவையைச் சொல்ல, அவரும் தன்னிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை எனக் கூறி, அவற்றை அடையும் உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தார். அதன் பின்பும் காலவர் மிகவும் அல்லல் பட வேண்டி வந்தது. யயாதியின் ஆலோசனைப்படி என்ன முயற்சி செய்தும் அவருக்கு 600 குதிரைகளுக்கு மேல் கிடைக்கவில்லை. இனி என்ன செய்வது? குருவிடம் எப்படி செல்வது? என்று புரியாமல் நின்ற காலவரிடம் கருடன், “நீர் விஸ்வாமித்திரரின் காலிலேயே விழுந்து உமது கஷ்டத்தை சொல்லி, அவர் சொன்னபடி இன்னும் 200 குதிரைகள் கிடைக்கவே இல்லை. அதனால் இவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று புத்திமதி கூறினார்.
அதன்படியே காலவரும் விஸ்வாமித்திரரிடம் சென்று, “மன்னியுங்கள் குருவே. நீங்கள் சொன்னதைக் கேட்காமல் எனது தகுதிக்கு மீறி உங்களுக்கு குரு தட்சணை தர பிடிவாதம் செய்தேன். என்னால் எவ்வளவு கஷ்டப்பட்டும் இவ்வளவுதான் கொண்டு வர முடிந்தது” என்று தலை குனிந்தார். அதைக்கேட்ட விஸ்வாமித்திரர், “நீ பட்டுத் திருந்த வேண்டும் என்பதாலேயே இந்த காணிக்கையைக் கேட்டேன். இனி எப்போதும் உன்னால் முடிந்ததை மட்டும் செய்து வா. அதிகப்படியான பாரத்தை ஏற்றிக்கொண்டால் சுமை உனக்குத்தான். சென்று வா” என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
காலவர் குருவுக்கு தட்சணை தர வேண்டும் என்று ஆசைபட்டதெல்லாம் சரிதான். ஆனால், அதற்கு முன் தன்னால் தர முடியுமா என்று யோசித்திருந்தாலும், குருவை மீறாமல் இருந்திருந்தாலும் காலவருக்கு இத்தனை சிரமங்கள் இருந்திருக்காதே. காலவர் செய்தது நன்மையாயினும் குருவின் சொல்லுக்கு விரோதம் பிடித்தமையால் இவ்வளவு துக்கத்திற்கு ஆளாக வேண்டி வந்தது. சன்மார்க்கத்திலும் வீண் பிடிவாதம் ஆகாது என்பதை உணர்த்துகிறது இந்த குரு சிஷ்யர் கதை.