Sri Krishna and the flute 
ஆன்மிகம்

கண்ணனும் புல்லாங்குழலும்!

மாலதி சந்திரசேகரன்

ண்ணன் என்கிற பெயரைக் கேட்ட உடனே நம் எல்லோருக்கும், மயிற்பீலியும் புல்லாங்குழலும்தான் ஞாபகத்திற்கு வரும். சிரசில் மயிற்பீலியோடும், இடுப்பில்  புல்லாங்குழலோடும் இல்லாத கண்ணனைப் பார்ப்பதே மிக மிக அபூர்வமாகும்.

துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதாரம் செய்தார். அவர் யமுனா நதியில் சகாக்களுடன் குளிப்பது, நதி தீரத்தில் அடிக்கடி விளையாடுவது, உணவு உண்பது, ஆசுவாசப்படுத்திக்கொள்வது போன்ற எல்லாவற்றையுமே நிகழ்த்தி வந்தார்.

கண்ணனிடம் புல்லாங்குழலைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஒரே புல்லாங்குழலைத்தான் எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்தியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம் அல்லவா? உண்மை அதுவல்ல. ஸ்ரீ கிருஷ்ண பகவான் எட்டு விதமான புல்லாங்குழல்களை வைத்திருந்தார். ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி பெயர் உண்டு.

அவரிடம் இருந்த புல்லாங்குழல்களிலேயே மிகவும் சிறியது ‘வேணு’ என்கிற பெயர் கொண்ட புல்லாங்குழல்தான். இது ஆறு அங்குல நீளமும், ஆறு துளைகளையும் கொண்டது.

இரண்டாவதாக, முரளி என்னும் புல்லாங்குழல். இது பதினெட்டு அங்குல நீளத்தையும், ஐந்து துளைகளையும் கொண்டது.

மூன்றாவதாக, வம்சி என்னும் பெயர் கொண்ட புல்லாங்குழல். இது பதினைந்து அங்குல நீளத்தையும், ஒன்பது துளைகளையும் கொண்டது.

வம்சி என்னும் புல்லாங்குழலே சற்று நீளமாகவும், நிறைய ஆபரண வேலைப்பாடுகளுடனும் இருந்தால், அதற்கு மகாநந்தா அல்லது சம்மோஹினி என்று பெயர். இதன் ஒரு பக்கத்தில் வளைந்து கொக்கி போன்ற ஒரு  அமைப்பு காணப்படும். இது எதற்கு என்றால் தனது பக்தர்களை அந்த கொக்கியின் மூலம் தன் வசம் இழுப்பதற்காக அவ்வாறு வைத்திருந்தாராம்.

இதே மகாநந்தா புல்லாங்குழல் சற்று நீளமாக இருந்தால் அதற்குப் பெயர் ஆகார்ஷினி. இந்தப் புழங்குழல் முழுவதும் தங்கத் தங்கத்தாலேயே உருவாக்கப்பட்டிருந்தது.

சற்று நீளமான ஆகர்ஷினி புல்லாங்குழலுக்கு ஆனந்தினி என்று பெயர். இந்தக் குழலை அவர் இசைத்தால் இடையர் குலமே, அதாவது கோபர்கள், கோபியர்கள் அனைவருமே போட்டது போட்டபடி குழல் நாதம் வரும் திசையை நோக்கி சென்று விடுவார்களாம்.

ஏழாவது மற்றும் எட்டாவது புல்லாங்குழல்கள் ஸ்ரீ ராதைக்காகவே பிரத்தியேகமாக இசைக்கப்படுமாம். ஒன்றின் பெயர், மதனஜங்க்ருதி, மற்றொன்றின் பெயர் சரளா. இந்த சரளாவை இசைத்தால் ஸ்ரீ ராதையை லீலைகள் புரிய  அழைப்பு விடுப்பதாக அர்த்தமாம்.

சரி, இந்தப் புல்லாங்குழலை எதற்காக கண்ணன் எப்பொழுதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார் தெரியுமா?

ஒரு நாள் கண்ணன் உணவு உண்ட பின் தனது சகாக்களுடன் பேசிக்கொண்டே ஒரு வனத்தில் படுத்து இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மூங்கில் மரமானது வளைந்து தரையைத் தொடும் அளவிற்கு வணங்குவது போல் அருகில் அமைந்திருந்தது. அந்த மூங்கில் மரத்தை பார்த்தவுடன் கண்ணனுக்கு, ‘ஆஹா இது எத்தனை ஒரு பணிவான மரமாக இருக்கிறது. தலை வணங்கி நிற்கிறதே’ என்று மனதுக்குள் மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அந்த மரத்திடம், “மரமே உன்னை நான் உபயோகப்படுத்திக் கொள்ளட்டுமா?” என்று கேட்டார்.

கண்ணன் அவ்வாறு கேட்டதும், அந்த மரமும், “கண்ணா உங்களிடம் சரணாகதி அடைந்து விட்டேன். உங்களுக்கு நான் உபயோகப்படுவேன் என்றால் அதைவிட என்ன பாக்கியம் இருக்க முடியும்? என்னை தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியது. கண்ணனும் அந்த மூங்கிலை எடுத்து உடைத்தார். துளைகளை உண்டாக்கினார். அழகான ஒரு புல்லாங்குழலைச் செய்து கொண்டார்.

“மரமே உன்னை நான் உடைத்தேன். துளைகள் இட்டேன். உனக்கு வலிக்கிறதா? கூறு” என்றார்.

“பகவானே நீங்கள் அருகில் இருக்கும்பொழுது எனக்கு எந்த வலியுமே ஏற்படவில்லை. நீங்கள் தாராளமாக எப்படி வேண்டுமானாலும் என்னை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றது.

அதைக்கேட்டு பகவான் சிரித்துக் கொண்டார். புல்லாங்குழலை ஆசையாக எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டார். ஆம். ஸ்ரீ கிருஷ்ண பகவானை முழுவதுமாக நம்பி, சரணாகதி அடைந்து விட்டால், வாழ்வில் சோதனைகள் நமக்கு அதிக துக்கத்தைத் தராது. அதுவுமல்லாது, அவர் நம்மை எப்பொழுதுமே தனது கூடவே வைத்திருப்பார் என்று புரிகிறது அல்லவா?

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

SCROLL FOR NEXT