Thaipoosam Festival at Perumal Temple: Do you know where?
Thaipoosam Festival at Perumal Temple: Do you know where? https://in.pinterest.com
ஆன்மிகம்

பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழா: எங்கு தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தைப்பூசம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முருகப்பெருமான்தான். இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் வெகு விமரிசையாக பல்வேறு வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறும். இப்படியிருக்க, திவ்யதேச பெருமாள் கோயில் ஒன்றில் தைப்பூசம் வைபவம் ஒன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகே உள்ள திருச்சேறை திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. இத்தல பெருமாளின் திருநாமம் ஸ்ரீ சாரநாத பெருமாள். தாயார் சார நாயகி.

இக்கோயில் மூலவர் சாரநாத பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என ஐந்து தேவியர்களுடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கு வலது புறம் மார்க்கண்டேரும், இடதுபுறம் காவிரி தாயும் அமர்ந்துள்ளனர். மார்கண்டேயர் முக்தி அடைந்த தலம் இது.

ஒரு சமயம் கங்கைக்கு இணையாக தனக்கும் பெருமை வேண்டும் எனக் கேட்டு காவிரித்தாய், சார புஷ்கரணியின் மேற்குக்கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்தை மெச்சிய பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பிறகு கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரித்தாய், ‘எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும்’ என வேண்டிக்கொள்ள பெருமாளும் அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்தார். கருவறையில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதைக் காணலாம்.

இத்தலத்தில் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும். பெருமாள் ஐந்து தேவியர்களுடன் காவிரி தாய்க்கு காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால் இவ்விழா மிகவும் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

இத்தலம், ‘பஞ்ச சார க்ஷேத்ரம்’ என அழைக்கப்படுகிறது. காரணம், பெருமாளின் திருநாமம் சாரநாத பெருமாள், தாயார் சாரநாயகி, விமானம் சார விமானம், தீர்த்தம் சார புஷ்கரணி, தலம் திருச்சாரம் என்பதால் இப்பெயர் உண்டானதாகக் கூறப்படுகிறது.

காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோளத்தில் இருக்கும் கோயில் சார புஷ்கரணியின் மேற்குக் கரையில் அரச மரத்தடியில் அமைந்துள்ளது. இந்த புஷ்கரணியில் நீராடி காவிரித்தாய் மற்றும் சாரநாத பெருமாளை வலம் வந்து தீபம் ஏற்றி வழிபட, குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT