சிவலிங்கம் 
ஆன்மிகம்

தலையெழுத்தையே மாற்றி அற்புதம் செய்யும் சிவாலய கைங்கர்யம்!

சேலம் சுபா

‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்று சொல்வார்கள். மனதில் எண்ணும் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் ஒருவரது வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிந்தனைகள் பொதுநலமாக இருந்தால் அதனால் விளையும் பலன்களும் ஒருவருக்கு நன்மையே தரும் என்பதை விளக்கும் ஒரு ஆன்மிகக் கதையை இந்தப் பதிவில் காண்போம்.

விவசாயி ஒருவர் தனது ஜாதகத்தைக் காட்டி பலன் பெறுவதற்காக ஜோதிடர் ஒருவரிடம் சென்றார். அந்த ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அன்று இரவுக்குள் அந்த விவசாயின் உயிர் அவர் உடலைவிட்டுப் போய் அவருக்கு மரணம் நிகழும் என விதி இருந்தது. இதை அந்த விவசாயியிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிய ஜோதிடர், அவரிடம் “இன்று என்னால் ஜோதிடம் சொல்ல முடியாது. நாளை காலை வாருங்கள், அதுவரை என்னிடம் இந்த ஜாதகம் என்னிடம் இருக்கட்டும். போய் நாளை காலை வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்.

ஏமாற்றத்துடன் ஜாதகத்தை ஜோதிடரிம் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார் அந்த விவசாயி. அப்போது திடீரென மேகம் திரண்டு பெரு மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனையாமல் இருக்க அந்த விவசாயி அருகில் தென்பட்ட ஒரு பாழடைந்த கோயில் மண்டபத்தில் போய் நின்றார். மழையில் இருந்து தப்பிக்க கோயில் மண்டபத்தில் ஒதுங்கியவரின் பார்வை அந்தப் பாழடைந்த சிவன் கோயிலையும் அந்த மண்டபத்தின் அழகையும் ரசிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவரது மனதில், ‘தம்மிடம் மட்டும்  பெரும் செல்வம் இருந்தால் இந்த சிவன் கோயிலையும், மண்டபத்தையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாமே’ என்று நினைத்தார். அவரது இந்த எண்ணவோட்டம் அதோடு நின்று விடாமல், தாம் புதிதாக நிர்மாணிக்கும் இந்த சிவன் கோயில் எத்தனை எழிலோடு இருக்கும் என்பதையும் அக்கோயில் கும்பாபிஷேகத்தையும் கற்பனையிலேயே கண் மூடி ரசிக்கத் தொடங்கினார்.

கற்பனை கலைந்த அந்த விவசாயி சட்டென கண்களைத் திறந்து பார்த்தபோது அவரது முகத்துக்கு நேராக ஒரு கருநாகம் படமெடுத்தபடி நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கரு நாகத்தைக் கண்ட அடுத்த நொடி அந்த விவசாயி அலறியடித்துக்கொண்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியே அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்.

கோயில் கும்பாபிஷேகம்

அவர் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறிய அடுத்த நொடி மழையின் வேகத்தால் அந்த மண்டபம் தரை மட்டமாக இடிந்து விழுந்து நொறுங்கியது. அதைக் கண்டு பேரதிர்ச்சியுற்ற அந்த விவசாயி, அந்தக் கோயில் சிவபெருமானுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது வீடுநோக்கிச் சென்றார்.

அடுத்த நாள் காலை அந்த விவசாயி நேற்று ஜாதகத்தைக் கொடுத்த ஜோதிடரைக் காணச் சென்றார். அந்த விவசாயியைக் கண்ட ஜோதிடருக்கு பெரும் வியப்பு. காரணம், தமது ஜோதிடக் கணிப்பின்படி அவர் இப்போது உயிரோடு இருக்க முடியாதே என்பதுதான். அது எப்படி என்பதை அறிந்துகொள்ள நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து அந்த விவசாயியிடம் கேட்டார் ஜோதிடர்.

விவசாயியும் நேற்று மழை ஆரம்பித்ததிலிருந்து தனக்கு நடந்தவற்றை ஜோதிடரிடம் ஒன்று விடாமல் கூறினார். அதைக்கேட்டு வியந்த ஜோதிடர் ஜோதிட நூலை ஆராய்ந்தபோது, ‘பாழடைந்த ஒரு சிவன் கோயிலை யார் ஒருவர் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றாரோ அவரது தலைவிதி சிவபெருமானால் மாற்றி எழுதப்படும். மரணத்தையும் வெல்லும் சிவன் கோயில் புனரமைப்பு’ என்றிருந்தது. ‘பாழடைந்த ஒரு சிவன் கோயிலை கற்பனையிலேயே புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தியதற்கே அந்த விவசாயியின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டது என்றால் நிஜ வாழ்வில் சிவன் கோயிலுக்குச் செய்யப்படும் கைங்கர்யம் எத்தனை பெரிய பலன்களைப் பெற்றுத் தரும்’ என எண்ணி வியந்தார் அந்த ஜோதிடர். அதோடு, அந்த விவசாயியின் ஜாதகத்தை பார்க்காமலேயே, ‘உனக்கு தீர்க்க ஆயுசு. கோடி புண்ணியம் செய்த பலன் உனக்கு உண்டு’ என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் அந்த ஜோதிடர்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT