Sabarimalai Iyappa Swamy 
ஆன்மிகம்

சபரிமலையில் உள்ள அழுதா நதி உருவான வரலாறு!

நான்சி மலர்

பரிமலைக்குச் செல்லும் கன்னி சாமிகள் கடுமையான காட்டு வழிப்பாதையிலேயே நடந்து சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும். இந்தக் காட்டில் வனவிலங்குகள் இருக்கும் என்றாலும், ஐயப்பன் மீது பாரத்தைப் போட்டு விட்டு பக்தர்கள் இந்த வழியைப் பயன்படுத்துகிறார்கள். மஹிஷியை வதம் செய்வதற்காக அவளைத் தேடிச் சென்றபொழுது இவ்வழியாகத்தான் ஐயப்பன் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இவ்வழியாகச் செல்லும்போது அழுதா நதிக்கரையில் ஓய்வெடுப்பது வழக்கம். இந்த அழுதா நதி எப்படி உருவானது என்ற புராணக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சபரிமலைக்கு பெருவழிப்பாதையில் வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தவறாமல் நீராடும் இடம்தான் அழுதா நதியாகும். ஐயப்பன், அரக்கியான மகிஷியுடன் போரிடுகிறார். போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு குன்றின் மீது ஏறி நின்றாள் மகிஷி. அப்போது ஐயப்பன் எய்த அம்பு மகிஷி மீது பட்டது. அரக்கியான மகிஷி அப்போதுதான் தன்னுடைய தவறை உணர்ந்தாள்.

தன்னை மன்னித்து விடும்படி ஐயப்பனிடம் வேண்டி மனம் விட்டு அழுதாள். அவ்வாறு மகிஷி அழுத கண்ணீர்தான் வழிந்தோடி பெருகி அழுதா நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னர் மகிஷியை சம்ஹாரம் செய்து விடுகிறார் ஐயப்பன். இருப்பினும், மஹிஷியின் பூத உடல் வளர்ந்துக் கொண்டே போனது. இதனால் சுவாமி ஐயப்பன் அவள் உடலின் மீது கல்லைப் போட்டு அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினார்.

இதை நினைவுக்கூறும் விதமாகத்தான் இன்றும் அழுதா நதியில் மூழ்கி நீராடும் கன்னி சாமிகள் அனைவரும் அங்கிருந்து ஒரு கல்லை எடுத்து வருவார்கள். அந்தக் கல்லை எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ‘கல்லிடும் குன்று’ என்னும் இடத்தில் இருக்கும் குன்றின் மீது கல்லை எறிந்துவிட்டுச் செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பம்பா நதியின் துணை நதிதான் அழுதா நதியாகும். இது கேரளாவில் இருக்கும் மிகப் பெரிய நதிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளாவில் வழிப்படக்கூடிய முக்கியமான கடவுளான ஐயப்ப சுவாமியின் புராணக் கதையுடன் தொடர்புடைய புண்ணிய நதியாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

SCROLL FOR NEXT