Coconut and banana 
ஆன்மிகம்

கடவுளுக்கு வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?

மணிமேகலை பெரியசாமி

வீட்டின் பூஜை அறையோ , கோவிலோ  அங்கு கடவுளுக்கு வாழைப்பழம் மற்றும் தேங்காய் இடம்பெறாமல் அர்ச்சனை செய்வதையோ அல்லது படையல் படைப்பதையோ  நீங்கள் பார்த்திருப்பது அரிதான ஒன்றுதான்.

மற்ற பழங்கள் பல இருக்கும்போது, அது ஏன்  குறிப்பாக வாழைப்பழமும், தேங்காயும்  கடவுளை  வழிபடும்போது  படைக்கப்படுகிறது.? 

கடவுள், பக்தி, பிரசாதம், கோவில் என்று ஆன்மீகமாக நாம் பார்க்கும் அனைத்துக்குள்ளும் ஒரு அறிவியலை மறைத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கடவுள் படைத்த அனைத்து  படைப்புகளும் அவை, இந்த பூமியில் வாழ்வதற்கென்று ஏதாவது ஒரு காரணம் மற்றும் நோக்கம் இருக்குமல்லாவா? அதேபோல், அந்த கடவுளுக்கு படைக்கப்படும் படையலுக்குப் பின்னும் அறிவியல் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சில காரணங்கள் உள்ளன.  அந்த வகையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் கடவுள் வழிபாட்டில் முக்கியமாக இடம்பெறுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்னெ என்று இந்தப் பதிவில் காணலாம்.

பொதுவாக, ஒரு பழத்தை உண்டபின், அதன் கொட்டையை எறிந்தாலோ அல்லது முழுமையாக அந்தப் பழத்தை வீசினாலோ அது மீண்டும் முளைத்துவிடும்.

ஆனால், வாழைமரத்தில் இருந்து புதிதாக வாழைக்கன்று தோன்றுமே தவிர, வாழைப்பழத்தை மண்ணில் வீசினாலோ அல்லது சாப்பிட்டு  விட்டு தோலை எறிந்தாலோ அது மீண்டும் முளைக்காது.

அதுபோல்தான், தேங்காயும். அதை கடவுளுக்கு உடைத்து படைத்தபின், நாம் சாப்பிட்டுவிட்டு அதன் ஓட்டை மண்ணில் எரிந்ததாலோ அல்லது வீசினாலோ அது மறுபடியும் முளைக்காது. உரிக்காத முழுத் தேங்காயில் இருந்துதான் தென்னங்கன்று வரும்.

எனவே தான், இந்த வாழைப்பழமும் தேங்காயும்  பிறவி அடையாத முக்தி நிலையோடு ஒப்பிடப்பட்டு அவை கடவுளுக்கு படைக்கப்படுகின்றன.  அதாவது,  நாம் இவற்றை கடவுளுக்கு படைத்து, முக்தி வேண்டும் என்று வேண்டும்போது, நமக்கு முக்தி கிடைக்கும் என்ற ஆன்மீக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்கள் இவற்றை கடவுளுக்கு படைத்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற பழங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடியவை. சீசன் அல்லாத நேரங்களில் அதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் மலிவாக கிடைக்கக்கூடியவை.

மனிதர்களோ அல்லது பூமியில் உள்ள பிற  உயிரினங்களோ  மற்ற பழங்களை  சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையையோ அல்லது விதையையோ கீழே வீசும்போது அதிலிருந்து அவை மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இதை எச்சில் பட்டது எனக் கருதி கடவுள் வழிபாட்டில் அவற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால்,  வாழைப்பழமும் தேங்காயும் பிற உயிரினங்கள்  சாப்பிட்டு வீணாக்கியத்திலிருந்து முளைப்பதில்லை. எனவே தான், அவை கடவுளுக்குப்  படையலாக படைக்கப்படுகின்றன.

இவ்வாறு, ஒரு பழத்தின் முளைக்கும் தன்மையை முக்தி, தூய்மை, புனிதம் என்ற ஆன்மீக சிந்தனையோடும், காலநிலை, மக்களுக்கு எளிதாக, மலிவானதாக கிடைக்கக் கூடியவை  என்ற அறிவியலையும் மனதில் வைத்து வாழைப்பழத்தையும் தேங்காயையும் கடவுளுக்கு படைத்து வழிபடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் போல நம் முன்னோர்கள்...

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT