The sacred history of Sabarimala 
ஆன்மிகம்

சபரிமலையின் புண்ணிய வரலாறு!

ஆர்.ஜெயலட்சுமி

யப்பன் அருளாட்சி செய்யும் சபரிமலையோடு சேர்த்து அதை சுற்றிலும் பதினெட்டு மலைகள் இருக்கின்றன. அவற்றில் சபரிமலை பீடம்தான் உயர்ந்தது. ராமாயணக் காவியத்தோடு தொடர்புடைய மலை இது.

சபரி என்பவள் பூர்வ ஜன்மத்தில் ஒரு ராணியாக இருந்தாள். அப்போது அவள் தனது செல்வத்தினால் பெரியோர்களுக்கு தொண்டு செய்தாளே தவிர, உடலினால் சிறிதும் உழைப்பே செலுத்தவில்லை. ஒரு சமயம் அவள் பிரயாகை சென்றிருந்தாள். அங்கே பல மகான்களை தரிசித்தாள். மறுபிறப்பில் தனக்கு மகான்களுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பும் அவர்களின் தொடர்பும் கிடைக்க வேண்டும் என்று கூறி, உடலை நீத்தாள். மறுபிறப்பில் ஒரு மலை இனப் பெண்ணாகப் பிறந்தாள். இப்போது சபரி முழுமையான அன்பையே ஆதாரமாகக் கொண்ட பக்தியின் வடிவானவளாக இருந்தாள். சபரிக்கு திருமணம் நிச்சயமாயிற்று. அவர்கள் இன வழக்கப்படி அவள் தகப்பன் திருமண விருந்துக்காக இரண்டு ஆடுகளை கொண்டு வந்து வீட்டில் கட்டியிருந்ததைக் கண்டு பயந்து விட்டாள்.

‘எனது திருமணத்திற்காக இதுபோல் பிராணி இம்சை  கூடவே கூடாது’ என்று எண்ணிய அவள், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பம்பா சரோவர் என்ற ஏரியின் கரைக்கு வந்து மதங்க ரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் வசிக்கலானாள். பிறருடைய கண்களுக்குத் தென்படாமல் மகான்களுக்கு பணிவிடை செய்வாள். முனிவர்கள் ஆற்றுக்கு எந்த வழியாக நீராட போவார்களோ அந்த வழிகளை யாரும் பார்க்காமல் இரவில் எழுந்து சபரி சுத்தம் செய்வாள். ஒரு நாள் மதங்க ரிஷி அவளிடம் ‘நீ எந்த இனத்தைச் சேர்ந்தவள்?’ என்று கேட்டதற்கு, ‘நான் ஒரு வேடனின் புதல்வி’ என்ற உண்மையைக் கூறினாள். மதங்க ரிஷி இவள் கீழ்க்குலத்தில் பிறந்தவளாக இருந்தாலும் கீழ்த்தரமான செயல் ஒன்றும் செய்யவில்லையே என்று கருதி அவளை தமது ஆசிரமத்திலேயே வசிக்கும்படி கூறினார். தாழ்ந்த குல பெண்மணிக்கு மதங்கர் தம் ஆசிரமத்தில் இடம் கொடுத்ததற்கு மற்ற முனிவர்கள் அவரை பழித்தனர்.

சபரி தூய நடத்தை உள்ளவளாக இருந்தும், மற்றவர்கள் அவளை நிந்தனை செய்யத் தொடங்கினார்கள். மதங்க ரிஷி சபரிக்கு ‘ராம நாம’ மந்திரத்தை உபதேசித்திருந்தார். அவர் பிரம்மலோகம் போகத் தயாரானார். சபரி அதைப் பார்த்து அவரிடம், ‘தாங்கள் போய்விட்டால் என் கதி?’ என்றாள். ரிஷி, ‘ராம நாமத்தை ஜபி. ஒரு நாள் உன் வீட்டுக்கு ஸ்ரீ ராமன் கட்டாயம் வருவார். இப்போது அவர் அயோத்தியில் இருக்கிறார்’ என்றார். ஸ்ரீ ராமர் என்றைக்காவது ஒரு நாள் தனது வீட்டுக்கு வருவார் என்று முழுமையாக நம்பி இருந்த சபரி, தினமும் காட்டிலிருந்து ராமனுக்காக இலந்தை பழங்களைக் கொண்டு வந்து வைப்பாள். மாலை வரையில் எதிர்பார்ப்பாள். ராமன் வராதது கண்டு அவற்றைத் தானே உண்பாள். ‘நான் பாவியா? ஏன் ராமன் இன்னும் என் வீட்டிற்கு விஜயம் செய்யவில்லை’ என்று பல ஆண்டுகள் வரை ஏங்கித் தவித்து அவள் கிழவி ஆகிவிட்டாள். இருப்பினும் நம்பிக்கை இழக்கவில்லை.

என் குருநாதர் சொல்லியிருப்பதினால் ராமன் என்றாவது ஒரு நாள் கட்டாயம் வருவான் என்று நம்பி இருந்தாள். ராமனுக்காகக் கொண்டு வரும் இலந்தை பழங்களை ரிஷிகுமாரர்களுக்குக் கொடுப்பாள். கடைசியில் ஒரு நாள் ராமனும் லட்சுமணனும் சபரியின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார்கள். சபரி அப்போதும்
ஸ்ரீ ராம ஜபமே செய்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

ஸ்ரீராமனை பார்த்ததும் அவள் பரபரப்புடன் எழுந்து தக்க ஆசனம் அளித்து அமர வைத்தாள். நான் தாழ்ந்த வகுப்பினள் ஆயினும் உங்களையே சரணடைந்திருக்கிறேன். எனக்கு வேறு உறவு இல்லை. எல்லாவற்றிலும் சிறந்தது அன்பினால் ஏற்படும் உறவே என்றாள். ராமனுக்கு இரண்டு தொன்னைகளில் இலந்தை பழங்களை சபரி எடுத்து வந்து கொடுத்தாள். அதோடு, ஒவ்வொரு பழமாக கடித்து ருசி பார்த்தே அளித்தாள். ராமனுக்கு புளித்த பழம் எதுவும் அகப்படாமல் இருக்கவே இப்படி ருசி பார்த்து அளித்தாள். எச்சில்படுத்தி ராமனுக்குக் கொடுக்கிறோமே என்ற உணர்வே அன்பு மிகுதியால் அவளுக்கு ஏற்படவில்லை. பழங்களை ருசித்த ஸ்ரீராமன் அவளை மிகவும் பாராட்டினார்.

“உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா?” என்று சபரியிடம் கேட்டார்.

“இந்த பம்பா ஏரியின் தண்ணீர் கெட்டுப்போயிருப்பதை சீர்படுத்துங்கள்” என்றாள். காரணம், ஒரு நாள் ரிஷி ஒருவர் சபரியை காலால் எட்டி உதைத்து விட்டார். அன்று முதல் ஏரி நீர் கெட்டுவிட்டது. ஸ்ரீ ராமபிரான் சபரியிடம், “அந்த ஏரியில் இப்போது நீங்கள் சென்று நீராடுங்கள்” என்று சொல்ல, சபரியும் ஏரியில் நீராட, அந்த கணமே ஏரி நீர் பரிசுத்தம் ஆயிற்று. சபரியை ஸ்ரீராமன் கரையேற்றினார். சபரி ஸ்ரீராமரை பார்த்துக்கொண்டே யோக சமாதியில் அடங்கி விட்டாள். அந்த மூதாட்டியின் பெயரால் வழங்கப்படும் மலையே சபரிமலை. அந்த மலையில்தான் தற்போது சுவாமி ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.

குமாஸ்தன்: தவற விடக்கூடாத படமல்ல; பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்!

Mutual Fund vs. Stocks: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

"நாங்கள் பிள்ளை பெறும் இயந்திரமா?" மகளிரிடையே பலத்த எதிர்ப்பு! எங்கே?

கொடுக்காய்ப்புளியின் பல்வேறு பயன்கள்!

எடை குறையணுமா? இந்த ரெசிபிகளை டிரை பண்ணுங்க..!

SCROLL FOR NEXT