திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி அணைக்கு அருகே உள்ளது திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் திருக்கோயில். சிவபெருமானின் நண்பனாகவே இருந்தாலும், ‘தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு’ என்பதை உணர்த்தும் திருக்கோயில் இது.
இக்கோயில் 1000 வருடங்கள் பழைமையானது என்று சொல்லப்படுகிறது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்பாளை வழிபட்டால், கண் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்று நம்பப்படுகிறது. திருவொற்றியூரில் சிவபெருமானுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், நால்வருள் ஒருவரான சுந்தரருக்கு கண் பார்வை பறி போனது.
எனவே, இக்கோயிலுக்கு வந்த சுந்தரர், சிவபெருமானிடம் மீண்டும் தனது கண் பார்வையை வேண்டுகிறார். ஆனால், சிவபெருமானோ, சுந்தரரிடம் ஊன்றுகோலைக் கொடுக்கிறார். இதனால் கோபமடைந்த சுந்தரர், ஊன்றுகோலை தூக்கி வீச, அது நந்திகேஸ்வரரின் வலது காதில் பட்டு உடைந்துப் போகிறது.
இன்றைக்கும் இக்கோயில் மூலவரின் முன்பு உள்ள நந்திகேஸ்வரரின் வலது காது உடைந்து காணப்படுகிறது. பக்கத்திலேயே சுந்தரர் ஊன்று கோலோடு நின்றுக் கொண்டிருக்கும் சிலை இருக்கிறது. சுந்தரருக்கு ஊன்றுகோலை வழங்கியதால், சிவபெருமான் ஊன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இதற்குப் பிறகு சுந்தரர் காஞ்சிபுரம் சென்று சேர்வதற்கு இங்கிருக்கும் அம்பாள்தான் மின்னல் ஒளியாக அவருக்கு வழி காட்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோயில் 276 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இங்குள்ள சிவபெருமானை ஊன்றீஸ்வரர் என்றும் தாயாரை மின்னொளி அம்மன் என்றும் அழைக்கிறார்கள்.
இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு வடை மாலை சாத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண் பார்வை பிரச்னை, திருமணத்தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. மாசி மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருகார்த்திகை ஆகிய பண்டிகைகள் இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
1942ம் ஆண்டு பூண்டி அணை கட்டுவதற்காக இக்கோயில் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இக்கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.