கோயில்களுக்குச் செல்லும்போது அவசியம் நாம் அங்கிருக்கும் தீர்த்தக் குளங்களில் நீராடி இறைவனை தரிசிப்போம். தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடும் சிறப்பு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தீர்த்தம் என்றால் தூய்மையாக்குவது என பொருள். நமது உடலில் அகத்தையும் புறத்தையும் தீர்த்தங்கள் தூய்மையாக்குகின்றன. ஆன்மிகத் தலங்களில் உள்ள நதிகள், குளங்கள், சுனைகள், நீர்வீழ்ச்சிகள் போன்ற தீர்த்தங்களில் என்ன விசேஷம்? அவற்றில் நீராடினால் எப்படி புண்ணியம் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக இங்கு இரண்டு ஆன்மிக வரலாற்றுச் சம்பவங்களைப் பார்ப்போம்.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் குருகுல கல்வி பயின்ற காலத்தில் அவரது குரு சாந்திபினி முனிவர், ஸ்ரீகிருஷ்ணர் பலகையில் எழுதியிருந்த வாசகத்தை அழித்துவிட்டு வேறு ஒரு வாசகத்தை எழுதுமாறு கூறினார். ஸ்ரீ கிருஷ்ணரும் அப்பலகையில் அவர் எழுதிய வாசகத்தை அழிக்க முயன்றார். முடியவில்லை. அப்போது குரு, அருகில் உள்ள குளத்தில் உள்ள தீர்த்தத்தை எடுத்து தெளித்து அழித்து விடும்படி கூறினார். கிருஷ்ணரும் அப்படியே செய்தும் அந்த வாசகங்கள் அழியவில்லை. ஏனெனில், பகவான் எழுத்தை பகவானே அழிக்க முடியாது அல்லவா? உடனே சாந்திபினி முனிவரும் நீர் கொண்டு அதை அழிக்க முயன்று தோற்றார்.
உடனே கிருஷ்ணர் தனது நண்பனும் உண்மையான பக்தனுமான ஸ்ரீ குசேலர் என்கிற சுதாமாவை அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு அவர் தீர்த்தமாடிய தண்ணீரை எடுத்து பலகையின் மேல் எழுதிய வாசகத்தை அழிக்குமாறு யோசனை கூறினார். குசேலனும் அப்படியே செய்ய பலகையில் உள்ள வாசகங்கள் அழிந்தன. உண்மையான பக்தர்களின் மகிமையும் இதனால் விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் நடந்த அந்த குளம் உஜ்ஜைனியில் சான்றாக உள்ளது.
அடுத்த உதாரணம். மகான் ஸ்ரீ ராமானுஜர் மைசூருக்கு அருகில் மேல்கோட்டைக்கு அருகே 12 வருடங்கள் முகாமிட்டபோது பரம்பொருள், பரமாத்மா, பரத்துவம் பற்றிய விசிஸ்டாத்வைத வைணவ சித்தாந்தத்தை பரப்பி பலரையும் வைணவர்களாக மாற்றினார். அப்போது 12,000 சமணர்கள் ஸ்ரீ ராமானுஜருடன் பலமுறை வாதிட்டு இறுதிச்சுற்றுக்கு வந்தபோது வைணவர்கள் சமணர்களாக மாற வேண்டியது அல்லது சமணர்கள் வைணவர்களாக மாற வேண்டிய சூழ்நிலை. இந்நிலையில் இறுதிவாதத்திற்கு முதல் நாள் காலை ஸ்ரீ ராமானுஜர் தனது முதன்மை சீடரும் உண்மையான பக்தரும் ஆகிய முதலியாண்டானை அழைத்து விடியற்காலையில் அருகில் உள்ள குளங்களில் தீர்த்தமாடிவிட்டு அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வரும்படி கூறினார். அவரும் அப்படியே செய்ய அவருக்கு பின் மற்றவர்களும் அதாவது 12,000 சமணர்களும் அதே குளத்தில் நீராடிவிட்டு வாத மண்டபத்திற்கு வந்தபோது அங்கு ஸ்ரீ ராமானுஜர் கம்பீரமாக தனது சீடர்களுடன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். இராமானுஜரை கண்டவுடன் மொத்த சமணர்களும், "நாங்கள் வாதத்திற்கு வரவில்லை. பரமாத்மாவாகிய ஸ்ரீமன் நாராயணன்தான் பரம்பொருள் என்று நன்றாக புரிந்து கொண்டோம். எங்களை தடுத்த ஆட்கொண்டு தீட்சை அளித்து வைணவர்களாக ஏற்க வேண்டும்" எனக் கூறி ஸ்ரீ ராமானுஜரின் பாதங்களில் சரணடைந்தார்கள். மகான் ஸ்ரீ ராமானுஜரும் பெருந்தன்மையுடன் அவர்கள் அனைவரையும் வைணவர்களாக மாற்றி வைணவத்தை தழைக்கச் செய்தார். இது எப்படி சாத்தியமாயிற்று? உண்மையான சாதுவும், பக்தனுமாகிய அடியார் முதலில் அக்குளத்தில் நீராடியதால் அதற்குப் பின் ஏற்பட்ட மனமாற்றத்தின் மகிமை என்பது புரிகிறது அல்லவா?
இந்த நிகழ்வுகளில் இருந்து நமது நாட்டு புண்ணிய தீர்த்தங்களின் மகிமையை புரிந்து கொண்டு அனைவரும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் போது தீர்த்தமாடி உடல், உள்ளம் வலிமை பெற்று பகவானின் அருளை பெறுவோம்.