ஆன்மிக பக்தர்கள் பலரும் இந்த காலகட்டத்தில் பாத யாத்திரை செல்வது வழக்கம். இப்படிப் பாத யாத்திரை செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில அவசியமான ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை அவசியம். டாக்டரின் ஆலோசனை கேட்டபின்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
நீண்ட நடை பயணம் மேற்கொள்பவருக்கு தசைப் பிடிப்பும், மூட்டுவலியும்தான் பிரச்னைகளைத் தரும். வயதானவர்கள், வீசிங், மூச்சிரைத்தல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், முதுகுவலி, தோள்பட்டை வலி என உடல் உபாதைகளை சந்திக்க தமது உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்குமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாற்பது வயதுடையவர்கள் தங்களின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மாத்திரைகளை தவறாது எடுத்துக்கொண்டு நடைபயணத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தசைப் பிடிப்பு மற்றும் தசை வலி பிரச்னைகள் உள்ளவர்கள் உடனடி தீர்வுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் அல்லது குளிர்ந்த நீரை வலி உள்ள இடத்தில் ஊற்றலாம். சிறிய இரத்தக் காயங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கூடாது. ஒரு மணி நேரம் நடந்தால் பத்து நிமிடம் கழித்து நடக்க வேண்டும்.
காலையில் நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், நடந்து முடிந்த பின்பும் மெதுவாக குதித்தல், தோள்பட்டையைச் சுற்றுதல், முழங்கை, முழங்காலை நீட்டி மடக்குதல் போன்ற சின்னச் சின்ன வார்ம் அப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் காலில் காயம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக நடக்க வேண்டும். தொடர்ச்சியாக நடக்கும்போது காலில் கொப்புளம் வராமல் இருக்க சாக்ஸ் அணிந்து கொண்டு நடக்கலாம். வெயிலில் நடக்காமல் மாலையில் அதிக தொலைவு நடக்க சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.
வீசிங் பிரச்னை, வாகனம் எதிரில் வருவது தெரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் இருப்பதால் இரவில் செல்வதைத் தவிர்த்து காலை, மாலை அதிக தொலைவு நடக்கலாம். வலி உள்ள இடங்களில் அழுத்தித் தேய்க்காமல் மிதமாக தேய்க்க வலி குணமாகும்.
சுளுக்கு விழுந்தால் சுய மருத்துவம் பார்க்காமல் அருகில் உள்ள டாக்டரைப் பார்த்து மருந்து, மாத்திரைகள் எழுதித் தருவதை போட சரியாகும். வழியில் திரவ உணவுகள், பழச்சாறுகள், இளநீர், மோர் என எடுத்துக்கொள்ள நா வறட்சி ஏற்படாது. டீ ஹைடிரேஷன் ஏற்படாமல் பாதுகாப்பாக சென்று வருவது அவசியம்.
பனி, குளிர், மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை போட்டுக்கொண்டு நடக்க வேண்டும். இவை தவிர, இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பாத யாத்திரையை பாதுகாப்பாக சென்று வர திட்டமிட உடலுக்கும், மனதுக்கும் சந்தோஷத்தைத் தரும்.