நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் என்னும் பெயரில் சிவபெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோயிலில் வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்தக் கோயில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.
வேதங்கள் சிவ பூஜை செய்ததால் பூலோகத்தில் சில காலம் மனித வடிவில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கலி யுகம் தொடங்கியது. இனி உலகில் நல்லதற்கு காலம் இருக்காது. வேதங்களை யாரும் மதிக்க மாட்டார்கள் எனும் முடிவுக்கு வந்தன. அதனால் தாங்கள் வழிபட்ட சிவன் கோயிலின் பிரதான வாசலை அடைத்துவிட்டு வானுலகம் புறப்பட்டன. இத்தலமே வேதாரண்யம் எனும் சிவ தலமாக திகழ்கிறது. வேதங்கள் வழிபட்டதால் சுவாமிக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும் அம்மனுக்கு வேதநாயகி என்றும் பெயர் ஏற்பட்டது.பிரதான வாசலை அடைந்ததால் பிற்காலத்தில் கோயிலில் உள்ள திட்டி வாசல் என்னும் பக்கவாசல் வழியாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
ஒரு சமயம் இங்கு நாயன்மார்களான திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் வந்தபோது தேவார பாடல் பாடி பிரதான வாசல் கதவை திறக்கவும் அடைக்கவும் வழி செய்தனர். மற்ற கோயில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசிப்பது போல அமைந்துள்ளன. அதனால் இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
வேதாரண்யம் கோயிலுக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இத்தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் அம்மனின் குரல் இனிமையானதா? சரஸ்வதியின் வீணையின் நாதம் இனிமையானதா? என்று போட்டி நிலவியது. இதில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரலே இனிமையாக இருந்தது. அதனால் சரஸ்வதி தவக்கோலத்தில் இத்தலத்தில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சிவபெருமானின் திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வட திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தாங்கள் தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உடனே அகஸ்தியர் சிவபெருமானை பணிந்து வணங்கி, ‘ஈஸ்வரா, தங்கள் திருமண கோலத்தை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிடையாதா’ என்று மனவேதனையுடன் கேட்டார். இதை கேட்டு மனம் உருகிய சிவபெருமான், ‘தென் திசையில் தாங்கள் எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறீர்களோ அங்கு நான் தங்களுக்கு திருமண கோலத்தில் காட்சி தருவேன்’ என்று வாக்குறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்த போது வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி வன்னி மரத்தடியில் தவம் மேற்கொண்டார். அப்போது உலகம் சமநிலை அடைந்தது.
இதனால் மனமகிழ்ந்த அகஸ்தியர் இறைவனின் திருமண தரிசனம் கிடைக்க இந்த ஊருக்கு அருகில் உள்ள வேதாரண்யத்தில் உள்ள இறைவனை வேண்டினார். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் சிவபெருமான் அகஸ்தியருக்குக் காட்சி அளித்தார். பின்னர் அகஸ்தியருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து இனி தாங்கள் அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுவீர்கள் என அருள்புரிந்தார். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் வேதாரண்யம் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் பின்புறம் காளை வாகனத்தில் சிவ பார்வதி மணக்கோலத்தில் காட்சி தருகின்றனர். இவற்றை தரிசித்தால் திருமண யோகம் நிச்சயம் உண்டாகும். பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.