Tirupati Garuda Seva Utsavam 
ஆன்மிகம்

நினைத்ததை நிறைவேற்றித் தரும் திருப்பதி கருட சேவை உத்ஸவம்!

ஆர்.ஜெயலட்சுமி

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வது சிறப்பானதாகும். பெருமாள் கோயில்களில் கருடனை வழிபட்ட பிறகு தாயாரை வழிபட்டு அதற்குப் பிறகு கடைசியாகத்தான் பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். கருடனை வழிபட்டு நம்முடைய வேண்டுதல்களை சொல்லும்போது பெருமாளிடம் அது விரைவாக சென்று சேரும் என்பது நம்பிக்கை. பெருமாளின் முழுமையான அருளை பெற்றவர் கருடன். அவர் மீது பெருமாள் பவனி வருவது மிகவும்  உயர்வான உத்ஸவமாகக் கருதப்படுகிறது. திருப்பதியில் நடைபெறம் கருட சேவை மிகச் சிறப்பானதாகும்.

திருப்பதியில் உத்ஸவர் மலையப்பசாமி எத்தனையோ வாகனங்களில் எழுந்தருளி காட்சி தந்தாலும் அவற்றில் கருட வாகன சேவைக்கு தனிச் சிறப்பு உண்டு. பெருமாளின் கருட சேவை உத்ஸவம் துவங்கியதே திருமலை திருப்பதியில்தான் என வேங்கடேஸ்வர புராணம் சொல்கிறது. திருப்பதியில் இருந்துதான் மற்ற வைணவ கோயில்களில் பெருமாளுக்கு கருட சேவை உத்ஸவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

கருட சேவையின்போது ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட பொருட்கள் திருப்பதி வந்து சேர்ந்தாகி விட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மூலவர் வடபத்ரசாயி எனும் பெரிய பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யப்படும் இந்த வழிபாட்டின்போது ஆண்டாள் சூடிய மாலையையே பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

காசிப முனிவரின்  இரண்டு மனைவிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் கருடனின் தாய் மற்றவளுக்கு அடிமையாகிறாள். மகாவிஷ்ணுவை நோக்கி கருடன் கடும் தவம் மேற்கொண்டதன் விளைவாக பெருமாளின் கருணை கிடைக்கப்பெற்று மகாவிஷ்ணுவை எப்போதும் சுமக்கும் பாக்கியத்தை பெற்றார் கருடன். அதோடு, தனது தாயையும் அடிமை வாழ்க்கையில் இருந்து மீட்டார். மகாவிஷ்ணுவின் சிறப்புக்குரிய வாகனமாக இருப்பதால் கருடன் மீது பெருமாள் எழுந்தருளும் காட்சி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.

திருமலை திருப்பதியில் கருட வாகன சேவையை தரிசனம் செய்பவர்களை தீய சக்திகள் ஏதும் நெருங்காமல் கருடன் காப்பாற்றுவார். கருடனை  பூஜை செய்து வழிபடுபவர்களை எந்த தீமையும் நெருங்காது.

கலியுக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருமலையில் கருடன் திருமலையப்பனை சுமந்து வரும் காட்சியை தரிசனம் செய்வதால் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இந்த வருடம் திருமலை திருப்பதியில் கருட சேவை உத்ஸவம் நாளை (8.10.2024) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

பண்டிகை நாட்களில் முகம் ஜொலிக்க சில டிப்ஸ்!

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

முதுகு வலி குணமாக வீட்டிலேயே செய்யக்கூடிய 8 வைத்தியங்கள்!

மது அருந்துதல் Vs. புற்றுநோய்: ஒரு விரிவான விளக்கம்!

SCROLL FOR NEXT