பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய் பிரதோஷ தினம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். இந்த செவ்வாய் பிரதோஷ தினத்தின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும், பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் மனிதனுக்கு ருணம் மற்றும் ரோகத்தை நீக்கக்கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாய் பகவானால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மற்றும் பித்ரு தோஷமும் விலகும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் வறுமை அகலும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டும். பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
இன்று பிரதோஷ வழிபாடு மேற்கொள்ள அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட்டால் ஈசனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
இன்று பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு ஈசனையும் நந்தியம்பெருமானையும் வணங்கி ஈடு இணை இல்லா ஆனந்த்தில் மகிழ்வோம். இறைவன் திருவருள் கிடைக்கப் பிரார்த்திப்போம்.