தாயுமானவர் சுவாமி மட்டுவார் குழலம்மை 
ஆன்மிகம்

வாழையடி வாழையாக குலம் சிறக்க வாழைத்தார் நேர்த்திக்கடன்!

ரேவதி பாலு

திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற  உச்சிப்பிள்ளையார் கோயில். இந்த மலையேற்றத்தின் பாதி தொலைவில், அதாவது மலையடிவாரத்திலிருந்து 258 படிகள் ஏறினால் தாயுமானவர் சுவாமி கோயிலை அடையலாம். மலையடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகரை தொழுதுவிட்டு பின்பு படியேற ஆரம்பிக்க வேண்டும். 'தர்ப்ப ஆசன வேதியன்' என்னும் திருநாமம் கொண்ட இந்த ஈசனுக்கு, 'செவ்வந்தி நாதர்' என்னும் திருப்பெயரும் உண்டு.  அம்பாள் மட்டுவார் குழலம்மை. இந்த ஈசனுக்கு தாயுமானவர் என்னும் பெயர் வந்ததற்குக் காரணமாக ஒரு புராண கதை கூறப்படுகிறது.

தனகுத்தன் என்னும் ஒரு வணிகன் திருச்சிராப்பள்ளியில் வசித்தான். அவனும் அவன் மனைவியான ரத்னாவதியும் செவ்வந்திநாதரின் பக்தர்கள்.  கர்ப்பிணியான ரத்னாவதிக்கு உதவுவதற்காக அவள் தாய் கிளம்பி வந்து கொண்டிருந்தபோது வழியில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவளால் மகள் வீட்டிற்கு வர முடியவில்லை. தாயார் மனம் கலங்கி செவ்வந்திநாதரை தான் வரும் வரை தனது மகளைப் பாரத்துக்கொள்ள வேண்டி கொண்டாள்.  இதற்கிடையே மகளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி அவளும் செவ்வந்திநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

உடனே ஈசன், ரத்னாவதியின் தாய் உருவத்தில் அவள் வீட்டிற்கு சென்று அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட உதவினார். காவிரியில் ஒரு வாரம் வரை வெள்ளம் வடியவில்லை. அதன் பிறகுதான் ரத்னாவதியின் தாயாரால் மகள் வீட்டிற்கு வர முடிந்தது. அங்கே தன் வடிவில் இன்னொருவர் இருப்பதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்தாள். அப்போது சிவபெருமான் தாய், மகள் இருவருக்கும் தனது சுய வடிவில் காட்சி கொடுத்தருளினார். எல்லோருக்கும் அப்பனாக அருள்பாலிக்கும் சிவபெருமான், ரத்னாவதிக்கு தாயாகவும் இருந்து அருளியதால் இவர், 'தாயுமானவர்' என்னும் திருநாமம் பெற்றார். இந்த அற்புத லீலையால் சிவபெருமான் மண்ணுலகில் சகல ஜீவராசிகளுக்கும் தாயுமானவர் ஆனார்.

சிவபெருமான் இக்கோயிலில் தாயுமானவராக அருள்பாலிப்பதால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட இவரிடம் வேண்டுதல் வைக்கிறார்கள்.  பிரசவம் ஆனதும்  இங்கே வந்து தங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக ஒரு வாழைத்தாரை காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு அந்த வாழைத்தாரில் உள்ள பழங்களை அங்கே வரும் பக்தர்களுக்கு  பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

ஆனி மாத பௌர்ணமியன்று தாயுமானவர் திருக்கோயிலில் 'வாழைத்தார் சமர்ப்பிக்கும் உத்ஸவம்' நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் ஏராளமாக வந்து வாழைத்தார்களை ஈசனுக்கு காணிக்கையாக அளித்து தங்கள் குலம் வாழையடி வாழையாக தழைக்க அருளும்படி வேண்டிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT