வீரசிவாஜி 
ஆன்மிகம்

வீரசிவாஜியின் அகந்தையை அழித்த தேரை!

ஆர்.ஜெயலட்சுமி

ராட்டிய மன்னர் வீர சிவாஜி பெரிய கோட்டை ஒன்றைக் கட்டினார். அதற்கான பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதில் ஈடுபட்டிருந்தனர். கட்டடப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிவாஜியின் மனதில், ‘இவ்வளவு தொழிலாளர்களுக்கும் நான் அல்லவா உணவளிக்கிறேன்’ என்று அகந்தை எழுந்தது. இதை அருகில் இருந்த வீர சிவாஜியின் குரு ஸமர்த்த ராமதாஸர் புரிந்து கொண்டார்.

தனது சீடனுக்கு தகுந்த புத்தி புகட்ட எண்ணினார். வீர சிவாஜியை பற்றி  பெருமையாகப் பேச ஆரம்பித்தார். “சிவாஜி, நீ செய்யும் அறப்பணிகளுக்கு அளவே இல்லை. இதோ இங்கே பணி செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீதானே உணவளிக்கிறாய். உண்மையில் உனது பணி மகத்தானது” என்று வாயார புகழ்ந்தார்.

ஏற்கெனவே தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த வீர சிவாஜியின் அகந்தை குருநாதரின் பாராட்டுகளால் மேலும் அதிகரித்தது. ஒரு நாள் வீர சிவாஜியுடன் நடந்து கொண்டிருந்தார் ராமதாஸர். வழியில் ஒரு பாறை தென்பட்டது. உடனே ஸமர்த்த ராமதாஸர், “சிவாஜி இந்தப் பாறையை உடை” என்றார். மறுகணமே அதை உடைத்தெறிந்தார் சிவாஜி.

அப்போது அந்தப் பாறைக்குள் இருந்து தேரை ஒன்று குதித்து ஓடியது. அதன் கூடவே சிறு தண்ணீரும் அங்கு தெறித்தது. இதைக் கண்ட சிவாஜிக்கு வியப்பு. இதைக் கண்டு ஸமர்த்த ராமதாஸர் புன்னகைத்தார். அது மட்டுமின்றி அவர், “சிவாஜி இந்தப் பாறைக்குள் இருந்த தேரைக்கு உணவு அளித்தது யார்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட வீர சிவாஜிக்கு சவுக்கால் அடித்தது போல இருந்தது. குருநாதர் கேட்ட கேள்விக்கான உட்பொருளை சட்டென புரிந்து கொண்டார். தனது அகந்தையை நினைத்து, “குருவே என்னை மன்னியுங்கள். வீண் அகந்தைக்கு இடம் கொடுத்து விட்டேன். எல்லாம் இறைவனது செயல். நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று கூறி, தனது குரு ஸமர்த்த ராமதாசரின் கால்களில் விழுந்து வணங்கினார்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT