விஷ்ணுபதி புண்ணிய காலம் 
ஆன்மிகம்

விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டின் மகிமை!

ஆர்.ஜெயலட்சுமி

வ்வொரு வருடமும் மூன்று புண்ணிய காலங்கள் வருவதுண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு உகந்த காலங்களாக இவை அறியப்படுகின்றன. முப்பெரும் தெய்வங்களான இவர்களுக்கு தலா நான்கு மாதங்கள் வீதம் வழிபாட்டு மாதங்களாக அனுசரிக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதப் பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம் எனப்படுகிறது. இன்று ஆவணி மாதப் பிறப்பு. இது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இதேபோல், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப் பிறப்பு பிரம்மாவுக்கு உரியவை. இவை விஷு புண்ய காலம் எனப்படுகிறது. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிவை சிவனுக்குரியவை. இவை ஷடசீதி புண்ணிய காலம் ஆகும். ஷடாங்கன் என்றால் சிவபெருமானை குறிப்பதாகும்.

இன்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் உங்களின் பிரச்னைகளை, வேண்டுதல்களை மனம் உருகி மகாவிஷ்ணுவிடம் சொல்லுங்கள், உங்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது. பொதுவாக, திதிகளில் சிறந்ததாக ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் செய்யும் பூஜைகளும் அனுஷ்டிக்கும் விரதங்கள் அனைத்தும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவார்கள். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனை தர வல்லது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும் பூரணமாகவும் தொடங்கும் அரிதான நாளாக இன்று அமைந்துள்ளது.

விஷ்ணுபதி புண்ணிய காலம் அன்று குளித்துவிட்டு அருகே உள்ள தொன்மையான பெருமாள் கோயிலுக்குச் சென்று மகாவிஷ்ணுவையும் தாயார் மகாலட்சுமியையும் மனதார வழிபட்டு மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம் போன்ற மணம் மிகுந்த மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும். அதேபோல் இன்று செய்யும் கொடிமர பூஜைக்கும் மிகுந்த பலன் உண்டு.

விஷ்ணுபதி புண்ணிய காலம் திருமாலின் அவதார புராணங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இரணியனை சம்ஹாரம் செய்து தனது பக்தனான பிரகலாதனை காப்பாற்றிய நரசிம்மரின் கோபம் தணியாமல் தனது உக்கிரமான வடிவிலேயே இருந்த நேரம், தேவர்களும் முனிவர்களும் பயந்து மகாலட்சுமி தேவியிடம் வேண்டினர். மகாலட்சுமியும் பெருமாளை சாந்தப்படுத்த ஒப்புக்கொண்டு பயபக்தியுடன் நரசிம்மத்திடம் நெருங்கினாள். மகாலட்சுமி நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில் வைத்து கருணை வடிவமான, லட்சுமி நரசிம்மராக மாறினார் மகாவிஷ்ணு. இது நடைபெற்ற காலம் விஷ்ணுபதி புண்ணிய காலமென கருதப்படுகிறது.

சிவன் கோயில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு உள்ளது. மகாவிஷ்ணு காக்கும் தெய்வம் ஆகும். மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் துயரங்களில் இருந்து அவர்களை காப்பதற்காகவே பல அவதாரங்களை எடுத்தவர் மகாவிஷ்ணு. அப்படி நம்முடைய துயரங்களைப் போக்கி நம்மைக் காப்பதற்காக மகாவிஷ்ணுவை பூமிக்கு அழைக்கும் விரதமே இந்த விஷ்ணுபதி புண்ணிய கால விரதம் ஆகும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT