காஞ்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் செய்யார் அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இந்தத் தலத்தில் இறைவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமல் இருக்கவும் வாயிலை நோக்கி திரும்பிய நிலையில் உள்ளது நந்தி.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளியில் சிவபெருமான் ஆலகால விஷயம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியம்பெருமான் ஈசனுக்க எதிரில் இல்லாமல் தலைப் பக்கம் உள்ளார்.
கர்நாடக மாநிலம், நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டீஸ்வரர் கோயிலில் நந்தி பகவான் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனச்சுத்தி உள்ளவர்களாக மாற்றி முகர்ந்து நந்தி பகவான் அனுப்புவதாக ஐதீகம்.
குடந்தை நாகேஸ்வரம் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தை தேடி ஓடி வந்ததில் ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே, இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் கோயிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலை செடியின் பூக்களின் மணம் கவரவே கடலைக் காய்களை தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோயிலுக்கு வந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது இத்தல நந்தி.
நாகர்கோவிலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு என்ற இடத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் நந்தி தேவர் தமக்கே உரிய காளையின் முகமும் வடிவமும் இல்லாமல் உருண்டை வடிவ கல்லாக வித்தியாசமாக காட்சி தருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு திருத்தலத்தில் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சி தருகிறார்.
மதுரைக்கு அருகில் விராதனூர் என்னும் சிவத்தலத்தில் சிவபெருமான் ரிஷபாரூடர் வடிவத்தில் நான்கு வேதங்களையும் கால்களாகக் கொண்ட நந்தியின் மீது பார்வதியுடன் காட்சி தருகிறார்.
நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேஸ்வரர் கோயிலில் உள்ளது.
ஆந்திர மாநிலம், லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாகும்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன்பு தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவது பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் ஆலயத்தில் நான்கு மூலைகளிலும் நந்தி பகவான் காட்சி தருகிறார்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சன்னிதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி பகவான் காட்சி தருகிறார்.
மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி பகவான் கண்கவர் அழகான கோலத்துடன் காட்சி தருகிறார்.