What is the relationship between lord shiva and Vilvam leaf? https://www.hindutamil.in
ஆன்மிகம்

சிவபெருமானுக்கும் வில்வ இலைக்கும் உள்ள தொடர்பு என்ன?

நான்சி மலர்

பெரும்பாலும் அனைத்து சிவன் கோயில்களிலும் வில்வ மரம் இருப்பதைக் காணலாம். அதேபோல், சிவபெருமானுக்குரிய அர்ச்சனைக்கு வில்வ இலையையும் சேர்த்துத் தருவதுண்டு. சிவபெருமானுக்கும், வில்வத்திற்குமான அப்படி என்னதான் தொடர்பு? துளசி எப்படி பெருமாளுக்கு உகந்ததாக இருக்கிறதோ அதேபோல, வில்வம் சிவனுக்கு உகந்ததாக இருக்கிறது. வில்வ இலை சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவதற்கு சிவபெருமானின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தி வடிவமாய் பூமியில் தோன்றியது வில்வமாகும். நம் முன்னோர்கள் திருவாதிரை நட்சத்திரத்தைக் கொண்ட சிவனின் சூட்டை தணிக்க குளுமையான வில்வத்தை சாத்தி வழிபட்டனர்.

வில்வத்தில் இருக்கும் மூன்று இலைகளில் வலது பக்கம் இருப்பது விஷ்ணு என்றும், இடது பக்கம் இருப்பது பிரம்மன் என்றும், நடுவிலேயிருப்பது சிவபெருமான் என்றும் நம்பப்படுகிறது. வில்வ இலையில் உள்ள மூன்று இலைகளும் சிவபெருமானின் முக்கண்ணை பிரதிபலிப்பதாக இருக்கிறது. சிலர் இம்மூன்று இலைகளும் சிவனின் ஆயுதமான திரிசூலத்தை குறிக்கிறது என்று நம்புகின்றனர்.

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம் என்ற வகைகள் உண்டு. மூன்று இலை, ஐந்து இலை, ஏழு இலைகளை கொண்ட வில்வமும் இருக்கிறது. எனினும், நாம் பூஜைக்குப் பயன்படுத்துவது மூன்று இலைகளைக் கொண்ட வில்வமேயாகும்.

ஏற்கெனவே பூஜை செய்த பொருட்களை திரும்பப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், வில்வ இலையை மட்டும் உலர்ந்ததையும் மற்றும் ஏற்கெனவே பூஜைக்கு பயன்படுத்தியதையும் திரும்பவும் சிவனுக்கு பயன்படுத்தலாம். அவ்வளவு புனிதமாக வில்வம் கருதப்படுகிறது.

வில்வத்தை முக்கியமாகப் பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணம் இதற்கு அதிர்வலைகளை உள்வாங்கி வெகுநேரம் வைத்துக்கொள்ளக்கூடிய சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. பூஜை செய்த பிறகு வில்வத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பூஜையறையில் வைப்பதால் நன்மைகள் கிடைக்கும்.

வில்வ மரத்தை வீட்டில் வைப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ரிக் வேதத்தில் உள்ள ஸ்ரீ சூக்தத்தில் வில்வ இலைகளை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. வில்வ மரம் சதி தேவியின் மறுபிறவியாகக் கருதப்படுகிறது.

மகாசிவராத்திரியன்று வில்வத்தை சிவனுக்கு படைத்து வில்வாஷ்டக பாராயணம் செய்தால் ஏழேழு ஜன்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குமாம். ஒரு வில்வத்தை வைத்து பூஜை செய்வது லட்சம் ஸ்வர்ணபுஷ்பத்தில் பூஜை செய்ததற்கு சமம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், வில்வ இலையில் மகாலட்சுமி  வாசம் செய்கிறாள். மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் வில்வத்தை பறிக்கக்கூடாது என்று கூறுவார்கள்.

வில்வ பழத்தின் ஓட்டை காயவைத்து அதில் திருநீறு வைத்து பயன்படுத்துவது சிவகாடாட்சத்தை அளிக்கும். வீட்டிலே வில்வ மரத்தை வளர்ப்பது 108 சிவாலயங்களையும் தரிசித்த பலனைக் கொடுக்கிறது. மகாசிவராத்தியன்று சிவபெருமானுக்கு வில்வ இலை பூஜை செய்து நன்மைகள் பெறுவோம்.

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

SCROLL FOR NEXT