கர்ணனிடம் தானம் பெறும் ஸ்ரீகிருஷ்ணர் 
ஆன்மிகம்

கர்ணன் ஏன் இடது கையால் தானம் அளித்தான்?

ம.வசந்தி

கொடையளிப்பதில் இவனைத் தவிர வேறு யாரையுமே எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பவன் கர்ணன். கடையேழு வள்ளல்களையும் தாண்டி, 'தான தர்மம்' என்ற சொல்லுக்கு தனி ஒருவனாய் இலக்கணமாய் உயர்ந்து நின்றவதான் கர்ணன். அவன் தானம் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை.

அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க்களத்தில் கிடந்தபோது, அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதனைக் கண்ட கண்ணன், ‘நீ செய்த தர்மத்தின் பலன் யாவையும் தந்துதவுக’ என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.

இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருந்தான். இடது கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அந்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனிடம் கேட்டார். "கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்றுதான் பெயர். ஆனால், கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?" என்றான்.

சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். "நீவீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில்தான் இடது கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும்போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.என்றான் கர்ணன்.

இப்படித்தான் கர்ணன் தானம் செய்து தன்னிகரில்லாமல் அனைவர் மனதையும் கவர்ந்திருக்கிறான் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்தான்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT