Gnana Saraswathi 
ஆன்மிகம்

சரஸ்வதி ஏன் அந்தர்வாகினி ஆனாள்?

மாலதி சந்திரசேகரன்

காசிக்கு போகிறவர்கள் பொதுவாக கங்கை நீரை அங்கிருந்து எடுத்து வருவார்கள். ஆனால், அந்த கங்கை நீரானது காசியில் ஓடும் கங்கையிலிருந்து எடுக்கப்படுவதில்லை. அலகாபாத்தில் (ப்ரயாக்ராஜ்) கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடத்தில் எடுக்கப்படுகிறது. திரிவேணி சங்கமம் நீரே கங்கா ஜலம் என்று கூறப்படுகிறது. இதில் கங்கையும்  யமுனையும் கூடுவது கண்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சரஸ்வதி நதியானவள் எப்பொழுதுமே கண்ணுக்குப் புலப்பட மாட்டாள். அந்தர்வாகினியாகத்தான் இருப்பாள். ஏன் அப்படி?

சரஸ்வதியானவள், வேத காலத்தில் நதி தேவதையாக வணங்கப்பட்டு இருக்கிறாள். வேத நதியான அவளை,  ரிக் வேதமானது உலகைக் காக்கும் தாய்களில் சிறந்தவள், தேவியர்களுள் சிறந்தவள்,  நதிகளுள் சிறந்தவள் என்று போற்றுகிறது.

ஒரு சமயம் ததீசி முனிவரின் முதுகெலும்பை வஜ்ராயுதம் ஆக்கி, இந்திரன் விருத்திராசுரனைக் கொன்றார். இதை அறிந்த விருத்திராசுரனின் மகன் பிப்பலாதன் கடும் தவம் மேற்கொண்டு தனது தொடைகளில் இருந்து தவத்தீயை திரட்டினான். அத்தீயின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் இந்திரன் முதலான தேவர்கள் பிரம்மனிடம் சரண் புகுந்தார்கள். பிரம்மன் சரஸ்வதியை நோக்கி, “நீ ஒருவளே இந்த ஜுவாலையை தாங்கக்கூடியவள். நீ நதி ரூபம் எடுத்து இந்த ஜுவாலையை கடலில் சிறப்பித்து விடு” என்று கூறினார்.

அதற்கு ஒப்புக்கொண்ட சரஸ்வதி ஒரு நிபந்தனை விதித்தாள். “இந்த அக்னியைத் தாங்குவதே போதும். என் நீரில் நீராடுபவர்களின் பாவங்களையும் என்னால் தாங்க முடியாது. ஆகவே, நான் மானிடர்களின் கண்களுக்குத் தெரியாத நதியாக மறைந்தே செல்ல வேண்டும்” என்று கூறினாள். அதனால்தான் சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் அந்தர்வாகினியாகவே இருந்து வருகிறாள்.

Sri Saraswathi Devi

சரஸ்வதி நதியின் கரையில்தான் முனிபுங்கவர்கள் வேதங்களை ஓதி இருக்கிறார்கள். பிரம்மாவும், தேவர்களும் பல யாகங்களைச் செய்திருக்கிறார்கள். பாண்டவர்களும் கௌரவர்களும் போரிட்டு இருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்ததும்  சரஸ்வதி நதிக் கரையில்தான்.

நாம் கலைவாணியை எப்பொழுதும் வீணையுடன்தான் பார்த்திருக்கிறோம். அவள் கைகளில் வைத்திருக்கும் வீணைக்கு ‘கச்சபீ’ என்று பெயர். சரஸ்வதி தேவி சில இடங்களில் வீணை இல்லாமலும் காட்சி தருகிறாள். வீணை இல்லாமல், யோக நிலையில் உள்ள சரஸ்வதியை கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஞான சரஸ்வதியாகக் காட்சி கொடுக்கிறாள்.

கலை தெய்வத்தின் கோலாகலமான கோலங்களில் நர்த்தன கோலமும் உண்டு. வேதமே சிலம்பொலியாக  வீணையின் நாதமே கீதமாக நடனம் ஆடுகிறாள். பேலூர் நடன சரஸ்வதி ஒரு அபூர்வமான படைப்பாகும். இதில் வீணை வாசித்துக் கொண்டே ஆடுகிறாள். அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை வட நாடுகளில் காண்கிறோம். ராஜபுதன சிற்பங்களில் தோகை விரித்தாடும் அழகிய மயில் மேல் அமர்ந்து மயூரவாகன சரஸ்வதியாகக் காட்சி கொடுக்கிறாள்.

வரங்கள் அருளும் வாக்தேவியை பூஜிக்கும்பொழுது, மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் நிற  வஸ்திரத்தை சாத்தி, மஞ்சள் நிற நைவேத்தியங்களைப் படைத்து , குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை மற்றும் சரஸ்வதி ஸ்லோகங்களால் போற்றி வணங்க வேண்டும். சகலகலாவாணியான அவள், படிப்பையும், வாக்கு சாதுர்யத்தையும், கலைகளில் கீர்த்தியை மட்டுமே  அருளுவதில்லை, சகலவிதமான சம்பத்துகளையும் குறைவின்றி வாரி வழங்குகிறாள். அனைவரும் அவள் திருவடிகளைப் பணிந்து எல்லா சுபிக்ஷங்களையும் பெறுவோம்.

மழைக்காலத்தில் மசாலாக்கள் கெட்டுப் போகாமல் இருக்க எளிய டிப்ஸ்!

உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த 80:20 விதியை தெரிஞ்சிக்கோங்க!

News 5 – (10.10.2024) ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

RMKV பட்டுடுத்தி பாரம்பரியம் போற்றுவோம்!

அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா - இலங்கையை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT