சுருட்டப்பள்ளி சிவபெருமான் 
ஆன்மிகம்

சனி மகா பிரதோஷத்துக்கு மட்டும் ஏன் அத்தனை விசேஷம்?

ரேவதி பாலு

மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என்று இரு முறை வரும் திரயோதசி திதியை நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்களை நீக்கி, புண்ணிய பலன்களைப் பெற்று தரும் என்பது ஐதீகம். பொதுவாக பிரதோஷமானது அது வரக்கூடிய கிழமைகளைப் பொறுத்து சிறப்பித்து சொல்லப்படுகிறது. திங்கட்கிழமையில் வந்தால் சோம வார பிரதோஷம், செவ்வாய்க்கிழமையில் வந்தால் அங்காரக பிரதோஷம், வியாழக்கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் என்றும் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்ர வார பிரதோஷம் என்றும் சிறப்பித்து சொல்லப்படுகிறது.  அந்த வகையில் சனிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால்  அது ஆயிரம் பிரதோஷ நாட்களில் தொடர்ந்து சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானையும் சிவனின் வாகனமாகிய நந்தி தேவரையும் பிரதோஷ வேளையில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்று தரும். பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தன்று 'ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதுடன் மாணிக்கவாசகர் அருளிச் செய்த சிவபுராணத்தையும் படிக்க வேண்டும். இதைத் தவிரவும் கோயிலிலோ அல்லது வீட்டிலோ பிரதோஷ நேரத்தில் ‘ஓம் ஹம் சிவாய நமஹ’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். சிவபெருமானுக்கு பிரதோஷ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்திதேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் யாவும் முடிவுக்கு வரும். பிரதோஷ நேரத்தில் சக்தியோடும், முருகனோடும் சோமாஸ்கந்தராக அருளும் சிவபெருமானை தரிசனம் செய்தால் குடும்ப உறவுகள் பலப்படும். இத்தினத்தில் நடராஜப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தான, தர்மங்கள் அளவற்ற நற்பலன்களைக் கொடுக்கும். முடிந்தவர்கள் காலையிலிருந்து விரதமாக இருந்து பிரதோஷ அபிஷேகத்தைக் கண்டு முடித்த பின்பு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

Prathosham

தமிழ்நாடு, ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப்பள்ளி என்னும் இடத்தில்தான் பிரதோஷ வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இங்கேயுள்ள சிவன் கோயிலில்,  சிவபெருமான் சக்தியின் மடியில் சயனித்த கோலத்தில் தரிசனம் தருகிறார். அவரைச் சுற்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே தரிசனம் செய்யும் அரிய காட்சியை காணலாம். பிரதோஷத்தன்று சுருட்டப்பள்ளி சென்று சிவனை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல திருவண்ணாமலையில் பிரதோஷ நேரத்தில் கிரிவலம் செய்வது அளவற்ற பலன்களைக் கொடுக்கும். பிரதோஷ தினத்தன்று பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, 'சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம்’ என்னும் பழமொழியே இருப்பதால், வருடத்தில் சனி பிரதோஷம் வரும் நாட்களில்  சிவ வழிபாடு செய்வது அளவற்ற புண்ய பலன்களை நமக்குப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆவணி தேய்பிறை திரயோதசி திதியில், இன்று வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று சிவ தரிசனம் செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும். கடன் சுமை அகலும். மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆகவே சனி மகாபிரதோஷ தினமாகிய இன்று நாமும் அருகிலுள்ள சிவ ஆலயத்திற்கு சென்று வழிபட்டு, வாழ்வில் எல்லா நலன்களையும், வளங்களையும் பெறுவோம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT