காசி யாத்திரை https://kasiyatra.in
ஆன்மிகம்

காசிக்குச் சென்றால் மோட்சம் கிடைக்குமா?

ச.தண்டபாணி

காசி யாத்திரை சென்றால் பாவங்கள் நீங்கும், புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிட்டும் என்பது இந்து சமயத்தின் ஒரு அடிப்படையான நம்பிக்கை. இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறையாவது காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

காசி, ராமேஸ்வரம் என்று புனித யாத்திரை சென்றால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றெல்லாம் வீட்டிலுள்ள வயதான பெரியவர்கள் பொதுவாகச் சொல்லுவார்கள். ஆனால், காசி என்ற வார்த்தையை பக்தியுடன் நாம் திரும்பத் திரும்ப உச்சரித்தாலே புண்ணியம் கிடைக்கும், பாவங்கள் எல்லாம் போகும், நாம் நரகத்தில் உழலத் தேவையில்லை என்றெல்லாம் காசி கண்டம் கூறுகிறது. அப்பேர்ப்பட்ட மகத்துவம் வாய்ந்த புண்ணியத் திருத்தலம் காசி.

இராமேஸ்வரத்தில் இராமநாத சுவாமியாகவும் காசியில் விஸ்வநாதராகவும் ஜோதி லிங்க வடிவில் காட்சியளிப்பவர் சிவபெருமான். அப்படிப்பட்ட இந்த புண்ணிய திருத்தலத்தில் ஒருவர் நியமத்துடன் மூன்று நாட்கள் தொடர்ந்து தங்கி இருந்தாலே அஸ்வமேத யாகம், ராஜசூய யாகம் போன்றவற்றை செய்தால் கிடைக்கக்கூடிய புண்ணியம் கிடைக்கும் என்று கந்த புராணம் கூறுகிறது. தீர்த்த யாத்திரையிலேயே மிகச்சிறந்த யாத்திரை காசி யாத்திரை. ஒருவர் உலகத்தில் உள்ள அனைத்து தர்மங்களையும் செய்தால் கிடைக்கக்கூடிய புண்ணியம் இந்த காசி யாத்திரையை மேற்கொண்டால் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இவ்வளவு ஏன், நம்முடைய இந்து திருமண வைபவங்களில் கூட காசி யாத்திரை என்ற சடங்கு ஒன்று உண்டு. திருமணத்திற்கு முதல் நாள் மாலையில் நிச்சயதார்த்த சடங்கு முடிந்தவுடன் மாப்பிள்ளையின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்வார்கள். பிரம்மச்சரியத்திலிருந்து அவர் இல்லத்தரசனாக மாறப்போகிறார் இல்லையா! அதை சுட்டிக்காட்டி கேலியும் கிண்டலும் செய்வார்கள். அதை பொறுத்துக்கொள்ள முடியாத மாப்பிள்ளை, திருமணத்தன்று அதிகாலை தனக்கு திருமணம் வேண்டாம் என்று சன்யாசி வேடம் பூண்டு காசி யாத்திரை மேற்கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பிவிடுவார்.

அப்பொழுது பெண்ணின் தகப்பனார் அவரைத் தடுத்து நிறுத்தி, ‘நீங்கள் காசிக்குச் செல்ல வேண்டாம். நான் என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். அவளோடு நீங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருந்து எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து பின் தம்பதி சமேதராக காசிக்குச் செல்லுங்கள்’ என்பதுபோல அமைந்ததுதான் இந்தக் காசி யாத்திரை சடங்கு. வேறு எந்தத் திருத்தலத்தின் பெயரை வைத்தும் இந்த சடங்கு அமையவில்லை, காசி யாத்திரை என்ற பெயரில்தான் இந்த சடங்கு அமைந்துள்ளது. ஏனென்றால், இந்து சமயத்தில் காசி யாத்திரை மேற்கொண்டால் புண்ணியம், முக்தி மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை.

இந்த முக்தி, மோட்சம் என்றால் என்ன? இந்தப் பிறவியில் இருந்து அடுத்த பிறவி இல்லாமல் பரமாத்மாவாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுவதுதான் முக்தி. அதற்குத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

காசி யாத்திரை என்பது சமீப காலமாக ஏற்பட்டது அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே போக்குவரத்து வசதிகள் இல்லாத காலங்களுக்கு முன்னதாகவே மக்கள் காசி யாத்திரை மேற்கொண்டார்கள். தமிழகத்தின் தென் மாநிலங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும் கால்நடையாகவும் ஒரு வருட காலம் நடந்து காசிக்குச் சென்றடைவார்கள். இதைப் போலவே வடமாநிலங்களில் இருந்து இராமேஸ்வரத்திற்கு வருவார்கள். அந்தக் காலத்தில் இப்படி தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்பவர்களுக்காகவே அந்தந்த மாநிலங்களில் சத்திரம் சாவடிகளை அமைத்து இருந்தார்கள். காசி யாத்திரை செல்பவர்கள் ஆங்காங்கே இந்த சத்திரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு காசி யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த உலகத்திலேயே காசி மிகப் பழைமையான திருத்தலம். பல யுகம் யுகங்களாக காசி பழைமையானதாகப் பேசப்பட்டது வந்திருக்கிறது. புராண, இதிகாச காலங்களுக்கு முன்னதாகவே விஸ்வாமித்திரர், வசிஷ்டர், வியாசர், கபிலர் என்று பல மாமுனிவர்கள் காசிக்கு சென்றிருக்கிறார்கள். இதிகாச காலங்களில் இராமபிரான், கிருஷ்ண பரமாத்மா, கலியுகத்தில் ஆதிசங்கரர் மற்றும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த மகா பெரியவாள் பரமாச்சாரியார் போன்றோரும் காசிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஆகையினால் காசிக்கு செல்லாமல் காசியினுடைய மகிமையை புரிந்துகொள்ள முடியாது.

இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் செல்ல வேண்டும். காசி யாத்திரை செல்லும்பொழுது வேறு எந்த சிந்தனைக்கும் இடம் தரக்கூடாது. காசிக்கு செல்ல வேண்டுமானால் நீங்கள் மோட்சத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு காசிக்கு செல்ல வேண்டும். அதனால்தான் அதை மோட்ச க்ஷேத்திரம் என்று கூறுகிறார்கள். பிறப்பு - இறப்பு - பிறப்பு என்ற இந்த சுற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகத்தான் மோட்சத்தை நாடி செல்கிறோம்.

ஒருவர் காசியில் இறந்தால் அவருக்கு மறுபிறவி கிடையாது. அவர் நேராக முக்தி பெற்று மோட்சம் அடைந்து விடுவார் என்று சொல்லப்படுகிறது. அங்கே பிணங்கள் எல்லாம் தெய்வங்கள் ஆகிவிடுகின்றன. அங்கே சவம் சிவம் ஆகிவிடுகிறது. காசியில் ஒருவர் இறந்தால் அந்த ஆன்மாவின் காதில் சிவபெருமானே நேரடியாக இராம நாமத்தை ஓதி அந்த ஆன்மாவிற்கு முக்தி அளிக்கிறார். இங்கே வைணவமும் சைவமும் ஒன்றாக இணைந்து பேதமின்றி ஒரு ஆன்மாவுக்கு மோட்சம் அளிக்கிறது. ஆகையினால்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் காசிக்கு வந்து தங்களுடைய இறுதி நாளை அங்கே கழித்து தங்களுடைய இறப்பை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகையினால், காசிக்குச் செல்லாமல் நாம் சிவபெருமானை நேராகப் பார்க்க முடியாது. காசியின் மகிமையை புரிந்து கொள்ள முடியாது.  மோட்சம் என்றால் என்னவென்ற இச்சையை நம்மால் உணர முடியாது. இன்றைக்கும் சிவபெருமான் பிரத்யக்ஷமாக நடமாடுகின்ற தெய்வமாக அருளாசி வழங்கி வருகின்ற தலம்தான் காசி. காசி யாத்திரைக்கு எல்லோராலும் போய்விட முடியாது. அதற்கு பணம் காசு இருந்துவிட்டால் மட்டும் போதாது. பகவானுடைய அனுக்கிரகமும் கொடுப்பினையும் வேணும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT