Trekking places 
பயணம்

நண்பர்களுடன் சாகச பயணம் மேற்கொள்ள 6 சிறந்த மலையேற்ற இடங்கள்!

ராதா ரமேஷ்

பொதுவாக பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான். பயணங்களில் பலவகை உண்டு. சாகசப்  பயணம்,வரலாற்றுப் பயணம்,  கடல் பயணம், ஆன்மீகப்பயணம், மலையேற்ற பயணம் இப்படி பயணத்தில் பல வகைகள் உள்ளன. பல்வேறு மக்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் சாகச பயணத்தை விரும்புவர்களுக்கான  சிறந்த மலையேற்ற இடங்களை இப்பதிவில் காணலாம்.

பர்வதமலை:

Parvathamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது பர்வதமலை. மலைகளுக்கெல்லாம் அரசன் என்று அழைக்கப்படக்கூடிய பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இரண்டு வழிகளில் இதற்கான மலை ஏற்ற பாதை அமைந்துள்ளது. எந்த வழியில் சென்றாலும் இரண்டு வழிகளும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும். பௌர்ணமி நாட்களில் அதிகமான பக்தர்கள் இன்று மலையேற்றம் செய்வது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. மலையின் மேல் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோயிலின் சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் அனைவரும் நேரடியாக கருவறைக்குள்ளேயே சென்று சிவபெருமானை தன் கைகளால் தொட்டு வழிபடலாம். மேலும் மலை  ஏற்றத்தின் போது வழி எங்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகை காற்றை சுவாசிக்கும் போது  உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைவதோடு தீராத பல நோய்களும் தீர்ந்து போவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

தோரணமலை முருகன் கோயில்:

Thoranamalai Sri Murugan Temple

தென்காசி மாவட்டம் தோரணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோயில். முன்பொரு காலத்தில் அகத்தியரின் மருத்துவமனையாக இருந்ததாம் இந்த தோரணமலை. சுமார் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தோரண மலையை அடைய 1000 க்கும் மேற்பட்ட படிகளை கடந்து செல்ல வேண்டும். தோரண மலையின் மேலே குகைக்கோயில் அமைந்துள்ளது. இந்த குகை கோயிலில் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கொண்டரங்கி மலை:

Kondarangi Hill

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ளது கொண்டரங்கி மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3825 அடி உயரத்தில் உள்ள இந்த மலையை எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கூம்பு வடிவத்தில் இருப்பது போன்று இருக்கும். பாறைகளையே படிக்கட்டாக  அமைத்து இருப்பார்கள். இந்த மலையின் மீது ஏறுவது மிகவும் திரில்லிங்கான ஒரு அனுபவமாக இருக்கும். மலையின் மீது பழமை வாய்ந்த கெட்டி மல்லீஸ்வரர் கோவில் உள்ளது.

சதுரகிரி மலை:

Sathuragiri Hills

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சதுரகிரி மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,224 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கு இரண்டு வழியாக செல்லலாம். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே உள்ள வத்திராயிருப்பு வழியாகவும், தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு வழியாகவும் செல்லலாம். இங்கு பல்வேறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும், சித்தர்கள் இன்றும் கூட சிவனுக்கு வழிபாடு செய்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி தூரம் பயணத்தை கடந்தால் மலை மேல் உள்ள சுந்தர மகாலிங்கம் சிவனை தரிசனம் செய்யலாம் . ஆடி அமாவாசை,  சிவராத்திரி,பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இக்கோவிலுக்கு செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் :

Thalaimalai Sanjeevi Perumal Temple

கிழக்கு தொடர்ச்சி மலையில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது சஞ்சீவிராய பெருமாள் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். நாமக்கல் மற்றும் திருச்சியில் இருந்து சஞ்சீவிராய பெருமாள் கோவிலை அடைவதற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மலையேற்றத்தை முடித்து மலையின் உச்சிக்கு சென்றால் சஞ்சீவிராய பெருமாளை தரிசிக்கலாம். இந்த மலையேற்றம் சற்று கரடு முரடானதாகவே இருக்கும். மலை முழுவதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள்  நிறைந்து காணப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை:

Velliangiri hills

கோயமுத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5833 அடி உயரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலை மீது ஏறினால் மேக கூட்டம் பரப்பி வைத்ததைப் போல் மிக அருமையாக காட்சி தருகிறது. வெள்ளிங்கிரி மலையை அடைவதற்கு ஏழு சிகரங்களை கடந்து செல்ல வேண்டும்.

இந்த சிகரங்களை கடந்து செல்லும் வழியில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, அர்ஜுனன் வில் போன்ற பல்வேறு சிறிய கோயில்கள் உள்ளன. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மலையின் உச்சிக்கு சென்றால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்யலாம்.

சாகச பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்த மலையேற்ற பயணங்களை தாராளமாக பார்த்து திரில்லிங்கான அனுபவத்தை பெற்று மகிழலாம். அதுவும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து போனால் ஜாலியோ ஜாலிதான்!

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT