பயணம்

சுற்றுலா செல்கிறீர்களா? இதோ உங்களுக்கான டிராவல் டிப்ஸ்!

மங்கையர் மலர்

சுற்றுலா செல்வதற்கு முன்னால் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றைப் பின்பற்றினால் உங்கள் சுற்றுலா நிச்சயம் மிக மகிழச்சிகரமான மறக்க முடியாத சுற்றுலாவாக அமையும்.

*சுற்றுலா செல்வது என்று முடிவு செய்த உடன் அதற்கான டிக்கெட் முன்பதிவு, ஏற்பாடுகளில் இறங்குங்கள். பொதுவாக நான்கு மாதங்களுக்கு முன்னரே நீங்கள் செல்ல விரும்பும் இடத்தையும் தேதியையும் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தையும் ஒரு ஜெராக்ஸ் எடுத்து உங்கள் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் டிக்கெட்டுகள் எதிர்பாராதவிதமாக தொலைந்து போனால் டூப்ளிகேட் டிக்கெட் வாங்க வசதியாக இருக்கும்.

*எந்த இடத்துக்குச் சுற்றுலா செல்லுகிறீர்களோ, அந்த இடத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இன்டர்நெட்டுக்குச் சென்று திரட்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யாமல் சென்ற இடத்தில் சில இடங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டு வந்து பின்னர் அதைப் பற்றி அறிந்து வருந்துபவர்கள் ஏராளம். நீங்கள் அந்தப் பட்டியலில் சேராதீர்கள்.  சுற்றுலா செல்லும் முன்னால் நீங்கள் செல்ல இருக்கும் இடங்களின் வார விடுமுறை தினங்களையும் அவை திறந்திருக்கும் நேரங்களையும் இன்டர்நெட் மூலம் பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் விடுமுறை தினத்தில் அத்தகைய இடங்களுக்கு சென்று ஏமாறுவதைத் தவிர்க்கலாம்.

* உங்களுக்கு மிகவும் நெருக்கமான, பணத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத, நேர்மையான விட்டுக் கொடுக்கும் உள்ளம் கொண்ட ஒரு நண்பர் குடும்பத்தை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். பயணம் இனிமையாகவும் கலகலப்பாகவும் இருக்கும். இரண்டு குடும்பங்கள் மட்டுமே செல்வதால் ஒரு நன்மை இருக்கிறது. ஒரு காரை வாடகைக்கு எடுத்துச் செலவை இரண்டாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். பணணும் மிச்சமாகும். நிறைய இடங்களையும் சொகுசாக, குறைந்த செலவில் பார்த்து மகிழலாம்.

* நம்மில் பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்றால், அங்கே போய் இட்லி, தோசை, சாப்பாடு என்று தேடி அலைவார்கள். வருடம் முழுவதும் நாம் இட்லி, தோசை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோமே! அங்கே பிரபலமாக உள்ள உணவைச் சாப்பிட்டு மகிழுங்கள். கூடுமானவரை அசைவ உணவைத் தவிர்க்கவும். சில ஓட்டல்களில் பழைய அசைவ உணவைச் சுட வைத்துக் கொடுத்துவிடுவார்கள். அப்புறம் உங்கள் நிலையும் பரிதாபமாகிவிடும். உங்களுடன் வந்தவர்களின் நிலையும் பரிதாபமாகிவிடும்.

* தங்க நகைகளை, வங்கி லாக்கரில் வைத்துவிட்டு மணிமாலை அணிந்து செல்லுங்கள். கவலையில்லாமல் எங்கும் சுற்றலாம். வட மாநிலங்களில் செயின்களை பறித்துக்கொண்டு ஓடுபவர்கள் ஏராளம். குறிப்பாக டில்லியில் செயின் பறிப்பு அடிக்கடி நடைபெறும்.

* காய்ச்சல், இருமல், வயிற்றுவலி, வாந்தி, பேதி, போன்றவற்றுக்கான மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனை பெற்று வாங்கிக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் செல்லும் சில இடங்களில் மாத்திரைகள் கிடைக்காத நிலை இருக்கலாம்.  பயணத்தின்போது மறக்காமல் சற்று பெரிய பாலிதீன் பைகளைக் கொண்டு செல்லுங்கள். வாந்தி வந்தால் இதைப் பயன்படுத்தி ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விடலாம். இதனால் யாருக்கும் எந்தச் சிரமும் ஏற்படாது. ஈரத் துணிகள், மிச்ச உணவு போன்றவற்றைப் போடவும் உதவும்.

* தினந்தோறும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவற்றை தனியே ஒரு சிறிய ஹேண்ட்பேகில் போட்டு மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். அப்படியே சுற்றுலா மகிழ்ச்சியில் மறந்து போய்விடாமல் வேளா வேளைக்கு மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். அப்போதுதான் சுற்றுலா இனிமையாகக் கழியும்.

* நல்ல தரமான பிஸ்கெட், வேர்க்கடலை, உலர் பழங்கள், நட்ஸ், வறுத்தபொரி போன்ற ஐயிட்டங்களைக் கையிருப்பாக வைத்திருக்கவும். எங்கேயாவது உணவு கிடைக்கவில்லை என்றால் சமாளித்துக்கொள்ளலாம்.

* கடுமையான வெயில் உள்ள இடங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள் உடன் குளுகோசை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். களைப்பு ஏற்படும்போது சிறிதளவு குளுகோசை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது கட்டாயம் கேன்வாஸ் அல்லது பூட்ஸ் அணிந்துகொண்டு செல்லுங்கள்.

* பேக்கேஜ் சுற்றுலாவில் செல்லும்போது அதை நடத்துபவரைப் பற்றி நன்கு விசாரித்து அறியுங்கள். குறைவான செலவில் அழைத்துச் செல்கிறாரே என்ற ஆசைப்பட்டு பின்னர் அவதிப்பட வேண்டாம். இதற்கு முன்னால் சுற்றுலா சென்ற யாரிடமாவது சுற்றுலா நடத்துபவரைப் பற்றி நன்கு விசாரித்து அறிந்து பின்னர் அந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுலா செல்லுங்கள்.

* குளிர்ப் பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால் இங்கிருந்தே ஸ்வெட்டர், கிளவுஸ், ஜெர்கின் போன்றவற்றை வாங்கிக்கொண்டு செல்லுங்கள். அங்கே போய் கடையைத் தேடி அவதிப்பட வேண்டாம்.

* சுற்றுலாவில் சந்திக்கும் திடீர் நண்பர்களிடம் உங்கள் குடும்பக் கதைகளை எக்காரணத்தைக் கொண்டும் சொல்லாதீர்கள். தேவையில்லாத எந்த ஒரு புதிய நபரிடமும் உங்கள் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைத் தர வேண்டாம்.

* படகில் செல்லும்போது ஜாக்கிரதையாகச் செல்லுங்கள். உங்கள் வீட்டுச் சுட்டிப் பிள்ளைகள் படகு சென்று கொண்டிருக்கும்போது எழுந்து நின்று விளையாடுவார்கள். அதேபோல படகு நகர்ந்து கொண்டிருக்கும்போது நீங்களும் எக்காரணத்தைக் கொண்டும் எழுந்திருக்காதீர்கள். பெரும்பாலும் படகு விபத்து நிகழ்வது இதனால்தான். படகில் பயணிக்கும்போது கட்டாயமாக லைப் ஜாக்கெட்டைக் கேட்டு வாங்கிககொள்ளுங்கள்.

* வட மாநிலங்களுக்குச் செல்லும்போது உங்களில் யாருக்காவது ஹிந்தி தெரிந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் சில முக்கியமான வார்த்தை களையாவது தெரிந்துகொண்டு செல்லுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

* வெளியூர் அல்லது வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும்போது டூயல் சிம் மொபைல்களை கொண்டு செல்லுங்கள். ஏனெனில் நீங்கள் செல்லும் இடங்களில் சில நிறுவனங்களின் மொபைல் டவர்கள் இல்லாமல் இருக்கலாம். அப்போது மற்றொரு சிம்மை பயன்படுத்திப் பேச வசதியாக இருக்கும்.

* உங்களுடைய முகவரி, அவசர காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் எண்கள், இரத்த வகை போன்றவற்றை ஒரு விசிட்டிங் கார்டை போல தயார் செய்து அதில் உங்கள் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை ஒட்டி எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத சமயத்தில் ஒருவேளை இது உங்களுக்கு உதவலாம். சூட்கேஸ், டிராலி பேக், ஏர் பேக் போன்றவற்றுக்குள் உங்கள் வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணை ஒட்டி வையுங்கள். ஒருவேளை பயணத்தின்போதோ எதிர்பாராத விதமாக இவை யாரிடமாவது மாறிப்போனால் அவர்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

* சுற்றுலா முடிந்து திரும்பியது உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்நம்பரை மாற்றிவிடுங்கள். ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் அவசியம் இதை செய்தாக வேண்டும். தற்போது ஏ.டி.எம்மில் அதிக அளவில் பணம் திருட்டு நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

* சுற்றுலாவின் எடுத்த புகைப்படங்களை ஒரு செட் பிரிண்ட் போட்டு ஆல்பமாக தயாரியுங்கள். அதன் கீழே தேதி, நேரம், இடம், அதன் சிறப்பு போன்றவற்றைக் குறித்து வையுங்க. ஒரு செட்டை கம்ப்யூடர்டரில் ஏற்றி, நண்பர்களுக்கு மெயி்ல் பண்ணலாம். ஃபேஸ்புக்கில் போட்டு மகிழலாம்.

ஸோ, ஹாப்பி ஹாலிடேஸ்.

முட்டி வலி இருப்பவர்கள் இதுபோன்ற காலணிகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 'ஃபெஸ்டம்பர் 24' விழா!

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

SCROLL FOR NEXT