பயணிகள் கட்டணமே இல்லாமல் இந்த ரயிலில் ஏறி அழகான காட்சிகளைக் கண்டு கழித்து இறங்கலாம். இந்த ரயிலில் மட்டும்தான் இலவசமாக சுற்றுலா வாசிகள் சென்று மகிழலாம். அது எந்த ரயில் என்று பார்ப்போமா?
நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் முதலில் தேர்வு செய்வது ரயில்தான். ஆனால் ரயிலில் செல்ல வேண்டுமென்றால், முன்பே புக் செய்ய வேண்டும். அதுவும் ஆன்லைனில் புக் செய்யலாம் அல்லது நேரடியாக ரயில் நிலையம் சென்று புக் செய்யலாம். இறுதி நேரத்தில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்கு டிக்கெட் வாங்குவது மிகவும் சிரமமாகிவிடும். ஒருவேளை ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்க வேண்டும்.
இப்படி ரயில் பயணத்திற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், இந்தியாவில் ஒரு ரயிலுக்கு மட்டும் எந்த கஷ்டமும் இல்லை. டிக்கெட் வாங்க தேவையில்லை, புக் செய்ய தேவையில்லை, டிக்கெட் செக்கர் இல்லை. நாம் அந்த இடத்திற்கு சென்றால் மட்டும் போதும்.
இலவசமாக பயணிக்கலாம். அதுவும் ஒரு நாள் ஒரு வாரம் இல்லை. ஆண்டு முழுவதும் இலவசமாக பயணிக்கலாம். ஆம்! ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியின் குறுக்கே பக்ரா – நங்கள் இடங்களை இணைக்கும் விதமாக ஒரு ரயில் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பாதையில் செல்லும் ரயிலில் தான் நாம் எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக செல்லலாம். 13 கிமீ நீளம் உள்ள இந்த ரயில் முதலில் பக்ரா நங்கள் அணையை கட்டுவதற்காக உபகரணங்கள், இயந்திரங்கள் எடுத்துச் செல்லவும் தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும் பயன்படுத்துப்பட்டது. இந்த ரயில் பாதை மலைகளை வெட்டி அமைக்கப்பட்டதாகும்.
அதனால் முதலில் இலவச ரயில் சேவையாக அமைக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்களின் குடும்பம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், ஒருமுறை பயணிப்பதற்கு 10 லிட்டர் செலவிடப்பட்டதால் நஷ்டமானது. இதனால் 2011ம் ஆண்டு இந்த சேவை மூடப்பட்டது.
ஆனால், பக்ரா அணியை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால், இதனை மீண்டும் இலவசமாக இயக்க முடிவு செய்தனர். 1953ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட நீராவி இஞ்சின் தான் இன்றுவரை இந்த ரயிலை இழுத்துச் செல்கிறது. மொத்தம் ஐந்து பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் இருக்கைகள் எல்லாம் காலனித்துவ கால மரங்களால்தான் ஆனது.
ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் கட்டாயம் இந்தப் பயணத்தை மிஸ் செய்துவிடாதீர்கள். இந்த ரயிலில் செல்லும் தூரம் எல்லாம் அழகழகான காட்சிகளைப் பார்க்கலாம்.