Athirapally tour 
பயணம்

அதிரப்பள்ளி சுற்றுலாவில் நடந்தது என்ன தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

சுற்றுலா பயணங்களில் மனதை மயக்கும் ரம்யமான பகுதி என்றால் அருவி, நீர்வீழ்ச்சி போன்றவற்றில் குளிப்பது, அவற்றைப் பார்ப்பது, ரசிப்பது, அதன் மூலிகை வாசனையை நுகர்வது என்று ஏராளமான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இரு அருவிகளில்,  ஒரு  மலைவாச ஸ்தல சுற்றுலாவை குழுவினர்கள் சேர்ந்து எப்படி உல்லாசமாக கழித்தோம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

நாங்கள் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி, வழாச்சல், போன்ற இடங்களுக்கு, ஒருமுறை குரூப்பாக சேர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா சென்றோம். 

அதிரப்பள்ளி, வழச்சால் போன்ற இடங்களை  சுற்றிப் பார்க்க செல்கிறோம் என்ற உற்சாகம்  மேலிட முத்தாய்ப்பான காரணம் என்னவென்றால் புன்னகை மன்னன் படம் அங்கு எடுக்கப்பட்டது என்று எல்லோராலும் சொல்லப்பட்டதுதான். அந்த இடம் எப்படி இருக்கிறது என்று போய் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் ஆளாளுக்கு ஒவ்வொரு  கதைகளாக பேசிக்கொண்டே சென்றோம். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி வழியாக அங்குள்ள வயல்வெளிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டே செல்வதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. 

வேனில் இருந்து இறங்கி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப் பார்க்க சென்ற பொழுது அதன் முனை மற்றும் அதன் உயரத்தை கீழே குனிந்து பார்த்துவிட்டு  சற்று மயங்கி  தரையிலே விழுந்து விட்டார் ஒருவர். இத்தனைக்கும் அவர் மிகவும் பயில்வான் போன்றவர்தான். என்றாலும் அதன் ஆழம் மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளின்  இயற்கை எழில் அனைத்தும் அவரை மிரள வைத்ததாகக் கூறினார். ரம்யமான பகுதிகள் கூட சிலரை இப்படி மதி மயக்கும் என்பதை அப்போதுதான் நேரில் கண்டு வியந்தோம். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி நன்றாக அவரும் எங்களுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

கேரளத்தில் உள்ள அருவிகளிலே மிகவும் உயரமானது. வருடத்திற்கு ஏழு மில்லியன் மக்கள் வந்து செல்லும் சிறப்பான சுற்றுலாத் தலம், தென்னகத்தின் நயாகரா என்று போற்றப்படும்  சிறப்புமிக்க அருவி என்றால் அது இந்த அதிரப்பள்ளி அருவி தான். சாலக்குடி சோலையார் காட்டுப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது.   செப்டம்பரில் இருந்து ஜனவரி வரை நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. அந்த அருவியின் அழகை கண்களில்   தேக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்த ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வழாச்சல் என்ற அருவியை பார்வையிட சென்றோம்.

அங்கு நீண்ட நேரம் செலவிட்டோம். அந்த அருவியில் பயமில்லாமல் பாறைகளின் மீது அமர்ந்து கால்களை நனைக்க முடிந்தது. பிறகு அந்த இடத்தை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் வெளியேறி அதன் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே வேனில் ஏறினோம். 

சுற்றுலா செல்லும் பொழுது கூட்டத்தோடு செல்வது கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. எதற்கும் பயம் இருக்காது கூட்டத்தினர் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவார்கள் என்ற துணிவு பிறக்கிறது. எல்லோருடனும் சேர்ந்து உரையாட கருத்துகளை பரிமாறிக் கொள்ள அற்புதமான சந்தர்ப்பம் என்றால்  அதற்கு சிறப்பானது சுற்றுலாப் பயணம்தான். மேலும் ஒவ்வொருவருடைய கைப்பக்குவத்தில் படைத்த உணவுகளை  பகுத்துண்டு பரிமாறி சாப்பிடுவதில் ஒரு அலாதி ஆனந்தம் எல்லோருக்கும் ஏற்படுவது அந்த இயற்கை அழகுடன் சேர்த்து ரசிக்க தக்க காட்சியாக இருக்கிறது.

மன அழுத்தம் எல்லாம் எங்கோ ஓடிச்சென்று ஒரு வருடத்திற்கு வேண்டிய சார்ஜ்களை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்வதற்கு ஏற்றதாக அமைந்தது அந்த சுற்றுலாப் பயணம். ஆதலால் மக்களே சமயம் கிடைக்கும் பொழுது இது போன்ற இடங்களை சுற்றிப் பார்த்து அதன் இயற்கை அழகை ரசிக்க மறக்காதீர்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT