மன்னவனூர்... 
பயணம்

தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து மன்னவனூர் போகலாம் வாருங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கொடைக்கானல் ஒரு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். காரணம் இங்கு அழகான மலையில் சாலைகளை மரங்கள் மறைத்து இருபுறமும் அடர் வனமாக காணப்படும் எழிலைக்காண கண் கோடி வேண்டும். கொடைக்கானல் போகும்போது இப்படி என்றால் மலை மேல் பூம்பாறை கிராமம், மன்னவனூர், குணா பாறை, பைன்மரக்காடு, கூக்கால் என ஏராளமான இடங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். 

தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் இடம் மன்னவனூர் கிராமம் தமிழ்நாடு போலவே இருக்காது. ஏதோ சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்டது போல் அருமையான சூழலில் காணப்படும். கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மன்னவனூர் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,880 மீட்டர் (6,168 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆட்டுப்பண்ணை உலகப் புகழ் பெற்றது. 

மன்னவனூர் ஏரி, அங்குள்ள சாகச பயணம், புல்வெளிகள், தட்பவெப்ப நிலை ஆகியவை நாம் வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். குளிர்ந்த வானிலை, ரம்யமான காட்சிகள் என்று நம் மனதை மென்மையாக வருடிச் செல்லும் அழகிய இடம் இது. மன்னவனூர் ஏரிக்கு மேல் சுமார் 250 மீட்டர் உயரத்தில் கம்பி வடத்தில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஜீப் லைன் சாகசம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

மன்னவனூரில் ஏராளமான சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலைச் சுற்றி பல அழகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளன. அதிலும் இந்த மன்னவனூர் ஒரு வசீகரமான குளிர்ந்த வானிலையைக் கொண்ட அழகான சுற்றுலாத் தலமாகும். இதன் இயற்கை அழகு, ஆண்டு முழுவதும் நிலவும் குளிர் காரணமாக "தமிழ்நாட்டில் சுவிட்சர்லாந்து" என்கின்ற பெருமை பெற்றுள்ளது.

கொடைக்கானலின் மேல், மலையில் அமைந்துள்ள ஒரு அழகிய விவசாய கிராமம் இது. இயற்கை அழகு கொஞ்சும் அற்புதமான காட்சிகளுக்கு பெயர் பெற்றது. பசுமையான புல்வெளிகள், உருளும் மலைகள், ஸ்படிகம் போன்ற மிகத் தெளிவான நீர் கொண்ட ஏரிகள், இதமான புத்துணர்ச்சி ஊட்டும் தட்பவெப்ப நிலை ஆகியவை நம்மை மகிழ்விக்கிறது. 

பசுமையான விவசாய வயல்களில் ...

பசுமையான விவசாய வயல்களில் கேரட், உருளைக்கிழங்கு மற்றும் வகை வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.  மன்னவனூரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் மன்னவனூர் ஏரி, பரந்த ஆட்டுப்பண்ணை, புல்வெளிகள், படகு சவாரி ஆகியவை ஆகும். இங்கு செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது.

அடர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட இந்த கிராமம் இயற்கை நடைப் பயணங்களுக்கும், பலவிதமான  பறவைகளை பார்வையிடவும், பருவ கால நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள் போன்றவற்றை காண விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கும் முக்கியமான இடம் என்றே கூறலாம்.

நகரத்தின் நெருக்கடியிலிருந்து சென்று அமைதியான சூழலை அனுபவிக்கவும், மலைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகளின் வழியாக ஓடும் நீரோடைகளைக் கண்டு களிக்கவும் இயற்கை சூழல் நிறைந்த சொர்க்கமாக திகழும் இந்த மன்னவனூருக்கு ஒரு விசிட் அடிப்போமா?

 எப்படி செல்வது?

கொடைக்கானலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு தினசரி உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவை குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் டாக்ஸிகள், கேப்கள் என நம் வசதிக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்ளலாம். இந்த கிராமத்தில் சில அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கு தங்கியும் சுற்றிப் பார்க்கலாம் அல்லது பகலில் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு திரும்பி விடலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

‘எப்படி இருக்கீங்க?’ - ‘ஏதோ இருக்கிறேன்!’ எதுவும் இயங்கினால் மட்டுமே உயிர்ப்பு!

SCROLL FOR NEXT