மாலத்தீவை மக்கள் விரும்பும் காரணம் அவர்களின் விருந்தோம்பல் பண்புதான். மாலத்தீவு ரிசார்ட்களில் விருந்தினருக்கு தான் முதல் மரியாதை. அவர்களின் எதிரில் முதலாளி மற்றும் விருந்தினர் தென்பட்டால் முதலில் அவர்கள் 'விஷ்' செய்வது விருந்தினர்களை தான்.
தலைநகர் மாலேவிலிருந்து கடல் விமானம் அல்லது போட் மூலம்தான் ரிசார்ட்களுக்கு செல்ல முடியும். விமானம் அல்லது போட்டை விட்டு இறங்கியதும் தாரை தப்பட்டை முழங்க மாலையிட்டு மரியாதையோடு விருந்தினர்களை அழைத்து செல்வார்கள் ரிசார்ட் ஊழியர்கள். அப்போதே குடிக்க கையில் ஒரு இளநீரையும் கொடுப்பார்கள். விருந்தினர்களை ஊஞ்சல் அல்லது சோபாக்களில் அமர வைத்துவிட்டு, ரிசர்வேசன் மேஜேனர் அவர்களின் பார்ம்களை பூர்த்தி செய்வார். அட்வான்ஸ் பேமண்ட் வாங்கி விடுவார்கள். அதிலிருந்து தேனொழுக ஒழுக பேசுவார்கள் .
விருந்தினர்களிடம் கடுமை எல்லாம் காட்ட மாட்டார்கள். மாலை நேரத்தில் விருந்தினர்கள் பீச் வாலிபால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாட கண்ணில் படும் ஊழியர்களை அழைக்கலாம். அவர்கள் நம்முடன் விளையாடுவார்களே தவிர ஒரு போதும் வெல்ல மாட்டார்கள் அது அவர்களின் வேலை விதிகளில் ஒன்று!
முக்கியமாக பிரைவசி அங்கு அதிகம் . கடலை ஒட்டிய படகுத் துறை மற்றும் ஸ்டோரில் ஒரு சிசிடிவி கேமரா இருக்கும். வேறு எங்கும் கேமரா இருக்காது. உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். உங்கள் இஷ்டம் போல் இருக்கலாம். அனுமதியின்றி யாரும் போட்டோ, வீடியோ எடுக்க மாட்டார்கள். நிம்மதியாக ஹனிமூன் சென்று வர சிறந்த இடம்.
பளிங்கு போன்ற தெளிவான நீர். அலையற்ற கடல், பிரைவசி, மிகச்சுகாதாரமான உயர் ரக உணவு, சொகுசான அறைகள். காம்பவுண்ட் சுவருக்குள் திறந்த வெளி குளியல் அறைகள், டாய்லட்கள் இருக்கும். யாரும் பார்ப்பார்கள் என்ற பயம் தேவையில்லை. ஸ்கூபா டைவ், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என ஏராளம் உள்ளது. மீடியாக்கள் நுழைய முடியாத கோட்டைகள் என்பதால் செலிப்பிரிட்டிகளின் முதல் விருப்பமாக உள்ளது.
சென்னை அல்லது திருச்சியிலிருந்து மாலத்தீவு தலைநகர் செல்ல ஒரு நபருக்கு இருவழி ₹25,000 ஆகும். சீசனில் ஒரு வழியே ₹26,000 தாண்டி செல்லும். பயண நேரம் குறைவு தான். பட்ஜெட் என்று பார்த்தால் திருவனந்தபுரம் ஏர்போர்ட்தான் சிறந்தது. ஒரு நபருக்கு இருவழி ₹15,000 தான் ஆகும். ஒரு மணி நேரப்பயணம் தான்.
மாலே ஏர்போர்ட் சென்றதும் உங்கள் ரிசார்ட்டின் சார்பில் போட் தயாராக இருக்கும். தலை நகருக்கு அருகில் உள்ள ரிசார்ட்டாக இருந்தால் போட்டிற்கு கட்டணம் இருக்காது. ஆனால், தூரமான ரிசார்ட் என்றால் கடல்விமானத்தில் செல்லலாம். இது சிறப்பான அனுபவமாக இருக்கும். குட்டி பிளைட்டில் சீட் பெல்ட் போடாமல் ஆடலாம், பாடலாம், பைலட் கேபின் தெரியும் என்பதால், அவர்களின் பணியை வேடிக்கையும் பார்க்கலாம். தண்ணீரில் கிளம்பி தண்ணீரில் இறங்கும் விமானப் பயணம் புது அனுபவமாக இருக்கும்.
அடுத்ததாக ரிசார்ட் - தனி வில்லா செலவு. பட்ஜெட் ரிசார்ட்களில் செலவு குறைவு. மூன்று வேளையும் இலவச பபே மீல்ஸ் அன்லிமிடட் தான். உலகின் முதல் தர சீஸ், பட்டர், பாஸ்தா வகைகள், கேக்குகள் என அனைத்துமே இருக்கும். தினமும் ஏதாவது ஒரு நாட்டு உணவு வகைகள் இருக்கும். அதே வேளையில் பொதுவான சர்வதேச உணவு வகைகளும் இருக்கும். விருப்பப்படும் உணவையும் கேட்கலாம் அல்லது செய்முறைகளை சொன்னால் செப் செய்து தருவார். உங்களுக்கு இந்திய வகை வேண்டும் என்றாலும் செய்து தருவார்கள். அதற்கு பில் தனி. பெரிய சைஸ் டைகர் இறால், லாப்ஸ்டர் மட்டும் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடலாம். மற்றவை இலவசம். விதவிதமான இறைச்சி வகைகள், மீன் வகைகள், நூற்றுக்கணக்கான சீஸ் வகைகள், என அனைத்தும் கிடைக்கும். ஆனால் அனைத்தும் பிரிசரில் வைத்ததாக இருக்கும்.
பார் செலவுகள் தனி. அவ்வப்போது மாலத்தீவு கலாச்சார நடனமும் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறும். வாட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ்கள் குறைந்தது ஒரு மணி நேரம் ₹24,000 ஆகும். இதில் மணிக்கு ₹80,000 வரை வசூலிக்கும் பல கேம்களும் உண்டு. செலவு செய்ய விருப்பம் இல்லாவிட்டால் 'ஒரு நபர்' போட்டை எடுத்துக் கொண்டு இலவசமாக துடுப்பு போட்டு ஓட்டலாம். இலவசமாக வாட்டர் பைக்கில் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். போட்டோவை உங்கள் இணை எடுத்தால் ஒகே. ரிசார்ட் போட்டோகிராபரை அணுகினால் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் கேட்பார். 5 போட்டோக்கள் அதற்கு எடுத்து தருவார்.
இரு நபர்கள் மால்தீவில் சுற்றுலா செல்ல ஆகும் குறைந்தபட்ச செலவுகள்:
விமானம் - ₹50,000 இரு வழி
பட்ஜெட் ரிசார்ட் - ₹30,000 / நாள் (5 நாள்) = ₹1,50,000
(பிரிமியம் ரிசார்ட்களில் ₹2,00,000–3,00,000 ஒரு நாளிற்கு வசூலிக்கிறார்கள் வரிகள் தனி)
இதனுடன் ரிசார்டிற்கு செல்ல ஸ்பீடு போட் வேண்டும் என்றால் போக வர ₹20,000 வரை வசூலிப்பார்கள். தூரம் என்றால் கடல் விமானத்தில் பயணம் செய்ய இரு வழி ₹40,000 வரை ஆகும். சில ரிசார்ட்களில் ஸ்பீட் போட்டில் செல்ல இலவசம். ஷாப்பிங் செய்ய அந்த நாட்டில் சொல்லும் அளவிற்கு பொருட்கள் கிடையாது. ஷாப்பிங் செலவுகள் இல்லை.
குறைந்த பட்ஜெட் என்று மாலே சிட்டி, ஹுலுமாலே போன்ற நகரங்களில் உள்ள சாதாரண ஹோட்டல்களில் தங்குவது வீண். ரிசார்ட்கள் எங்கும் தனித்தீவாக பொது மக்கள் அனுமதிக்கப்படாத இடமாகவே இருக்கும். அங்கு செல்லுங்கள்.
ஹனிமூன், இன்பச்சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். ஊர் சுற்றவும், நிறைய ஷாப்பிங் செய்யவும் விரும்புவோர்கு ஏற்ற இடம் அல்ல. மன அமைதி, வெளியுலகிலிருந்து தள்ளி இருக்க நினைப்பவர்களுக்கு மட்டும் சிறப்பான இடம்.