ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் கென்யா, தன்சானியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 19 நாடுகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில், பயன்படுத்தப்படும் வாடகை மிதிவண்டிகளை ‘பொடா பொடா’ என்கின்றனர்.
1960 - 1970 ஆம் ஆண்டுகளில் கென்யா - உகண்டா எல்லைப் பகுதியில் எல்லையைக் கடப்பதற்காக, வாடகை மிதிவண்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன. இதனால், வாடகை மிதிவண்டி ஓட்டுநர்கள், எல்லை விட்டு எல்லை என்று பொருள் தரும் ஆங்கிலச் சொல்லான Border-to-Border எனும் சொல்லைப் பயன்படுத்தினர். பிற்காலத்தில் இச்சொல் மருவி, பொடா பொடா என்று மாறிப்போய்விட்டது.
ஆசியாவில் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகள் (Rickshaw) மற்றும் தானியங்கி மூன்று சக்கர வாகனத்தைக் (Auto Rickshaw) காட்டிலும் மிகவும் விலை குறைந்தவை இந்த வண்டிகள். ஓட்டுவதற்கும் எளிதானவை என்பதால் பொருட்களையும் ஆட்களையும் கொண்டு செல்ல இவ்வகை வாடகை மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மிதிவண்டிகளின் இருக்கைகளும் பின்னிருக்கைகளும் நன்கு பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். விலை குறைவான இம்மிதிவண்டிகள் கென்யா, உகாண்டாவில் மட்டுமின்றி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் பயன்பாட்டிலிருக்கின்றன.
தற்போது, மிதிவண்டிகள் மட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் மின்சாரத்திலான இருசக்கர வாகனங்களும் பொடா பொடா பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இவ்வகையான வாகனங்களை உகாண்டாவின் பெரும்பாலான பகுதிகளில் மோட்டார் வண்டி எனப் பொருள் தரும் பிக்கி பிக்கி என்ற சுவாகிலி மொழிச்சொல்லால் அழைக்கின்றனர். நைசீரியாவில் இவ்வகை வாடகை வண்டிகளை ஒக்காடா அல்லது அச்சாபா என்று அழைக்கின்றனர்.
உகாண்டாவின் மிகப்பெரிய பொடா பொடா தொழிற்சங்கத்தின் 2018 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, உகாண்டாவில் மட்டும் தற்போது 1,000,000 ஆண்கள் தொழில்முறை பொடா பொடா ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பொடா பொடா ஓட்டுநர்களாகப் பெண்களும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பொடா பொடாக்கள் செயல்படும் பல இடங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், சாலைக்குத் தகுதியற்ற இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துதல், முன்னெச்சரிக்கைகள் இல்லாமை, போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்தல் போன்ற சில செயல்பாடுகளால் போக்குவரத்து விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. அதன் வழியாக, கடுமையான காயங்கள் மற்றும் சராசரிக்கும் அதிகமான இறப்பு விகிதங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும், தற்போது பல பகுதிகளில், "பாதுகாப்பான பொடாக்கள்" நிறுவப்பட்டுள்ளன. இவ்வகையான பொடா பொடாக்கள் பயணிகளுக்குத் தலைக்கவசம் அணிவித்து, நல்ல வாகனங்களைப் பயன்படுத்துவதுடன் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டிப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
பொடா பொடாவின் ஒழுங்குமுறை பதிவு இல்லாததால், சில இடங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் பொடா பொடா ஓட்டுநர்கள் மீது அதிகமான குற்றங்கள் சாட்டப்படுகின்றன. இந்தக் குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்கும் நோக்கத்துடன், பொடா பொடா தொழிலை முறைப்படுத்த உகாண்டா உள்ளிட்ட சில நாடுகள் முடிவு செய்திருக்கின்றன.