தென் அமெரிக்காவின் தெற்கு பக்கம் அமைந்துள்ள படகோனியா மலைகள், காடுகள், பனிப்பாறைகள் போன்றவற்றால் நிரம்பிய ஒரு அழகிய இடமாகும். பரந்த நிலத்தைக் கொண்ட இந்த இடம், பலரால் அனுபவித்து மகிழாத ஒரு இடமாகவே இருக்கிறது. மேலும் இங்கு தனியாக சென்று சுற்றிப்பார்ப்பவர்களுக்கு கூட ஒரு பாதுகாப்பான இடமாகும். அந்தவகையில் படகோனியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பார்ப்போம்.
பெரிட்டோ மோரெனோ பனிப்பாறை:
லாஸ் கிளாசியர்ஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த பனிப்பாறை கட்டாயம் நீங்கள் கண்டு மகிழ வேண்டிய ஒரு இடமாகும். இங்கு நீங்கள் பிரமிக்கவைக்கும் பனிக் கட்டிகளைப் பார்க்கலாம். அதேபோல் ஹைக்கிங் மூலம் சுற்றியுள்ள பகுதி அனைத்தையும் பார்க்கலாம். இந்த இடத்தை டிஸ்னி இளவரசி எல்சா கட்டிய இடமாகவே நீங்கள் கற்பனை செய்துக் கொள்வீர்கள்.
பாரிலோச்:
இந்த பாரிலோச் என்ற இடம் படகோனியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் சாக்லேட் பிரியர்களுக்கு ஏற்ற ஒரு இடமாகும். அதேபோல் இந்த இடம் அழகுமிக்க ஏரிகளுக்கும் மலைக் காட்சிகளுக்கும் பெயர் போனது.
பிட்ஸ் ராய்:
ஸ்ட்ரைக்கிங் மலை என்றழைக்கப்படும் இந்த மலை செர்ரோ ஃபிட்ஸ் ராய் என்றும் அழைக்கப்படும். இந்த மலைக்கு நீங்கள் எல் சால்டன் என்ற நகரில் தங்கிவிட்டுச் செல்லலாம். அதேபோல் அந்த இடத்திலிருக்கும் மக்களிடையே நீங்கள் மலையை பற்றி அறிந்துக்கொள்ளலாம். இது பார்ப்பதற்கு ஒரு பனி மலை போலவே காணப்படும்.
எல் கலாஃபேட்:
இந்த நகரம்தான் தெற்கு படகோனியாவின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இங்கு நீங்கள் படகு பயணம் மற்றும் பனி மலையேற்றம் ஆகியவற்றை செய்யலாம்.
டியர்ரா டெல் ஃபியூகா தேசிய பூங்கா:
இந்த பூங்கா அர்ஜென்டினாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் மலைகள், காடுகள், கடற்கரைகள் என அனைத்து இயற்கை வளங்களையும் ஒரே இடத்தில் காணலாம். மேலும் அதிசய வனவிலங்குகளைப் பார்க்கலாம்.
டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா:
இந்த இடம் கிரானட் சிகரங்கள், பழமைவாய்ந்த ஏரிகள் மற்றும் பல்வேறு வன விலங்குகள் நிறைந்த இடம். மலை ஏறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம். மேலும் இந்த மலையில் W மற்றும் O சர்க்யூட் பாதைகள் மலை ஏறுவதற்கு ஏற்ற பாதைகள் ஆகும்.