Poland Travel 
பயணம்

போலந்து பயணம் 2: 'தானியம்' என்று நினைத்து, தோடுகள், மூக்குத்திகளை கொத்தி விடும் பறவைகள்!

ரெ. ஆத்மநாதன்

க்ரகோவிலிருந்து கடோவிஸ் ஒரு மணி நேரக் கார் பயணத் தூரந்தான். ஐரோப்பாவில் கோடை காலந்தான் என்றாலும், இரவு நேரத் தூக்கத்திற்கு உகந்த சூழலே எங்கும் நிலவுகிறது! நம்மூர் போல அதீத வெப்பம் எங்குமேயில்லை.

சடோர் (Zator) என்ற இடத்திலுள்ள ‘எனர்ஜி லாண்டியா’ (Energy Landia) என்ற தீம் பார்க் சென்றோம். உண்மையில் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் விதமாகத்தான் இதனை அமைத்துள்ளார்கள். சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ரைடுகளை அமைத்து, நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள். நம்மூர் குடை ராட்டிணம் பல மாற்றங்களைப் பெற்று, பல வித ரைடுகளாக (Rides) மாறியுள்ளதைக் காண முடிந்தது. ரைடுகளை 'சவாரி' என்றும் அழைக்கலாம்.

மனிதர்களை மூன்றாகப் பிரித்துப் பார்த்தோமானால், அமைதியை விரும்பும் சாந்த சொரூபிகள்; மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று கொள்ளலாம். (நான் குறிப்பிடும் தீவிரவாதிகளைப் பயங்கரவாதிகளாகப் பொருள் கொள்ளாதீர்கள். நல்லவற்றையே சாதிக்கத் தீவிரமாக உள்ளவர்களைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறேன்) இந்த மூவகை மனிதர்களையும் ஈர்க்கும் விதமாகத்தான் ரைடுகளை அமைத்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரைடுகளிலும் மூவகை உண்டு. நிலம் சார்ந்தவை; நீருடன் தொடர்புடையவை; ஆகாயத்தில் வலம் வருபவை என்று.

பலவகை ராட்டினங்கள், சுற்றி வரும் கார்கள், சிறுவர் மற்றும் பெரியவர்களும் பயணம் செய்யக் கூடிய ரயில்கள் இவையெல்லாம் நிலம் சார்ந்தவை.

Poland Travel

ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளில் மிதந்து செல்லும் படகுகள், மேலேயிருந்து நீரைச் சிதறடித்தபடி கீழிறங்கும் கம்பார்ட்மெண்டுகள் போன்றவை நீருடன் தொடர்புடையவை. அதிவேகத்தில் பறக்கும் ரோலர் கோஸ்டர்கள் போன்றவை ஆகாயத்தில் வலம் வருபவை என்று கொள்ளலாம்.

சாந்தம் நிறைந்த அமைதியானவர்களை உற்சாகப்படுத்த நிலம் சார்ந்த, அதிக வேகமும் அலட்டலும் இல்லாத சவாரிகள் உதவுகின்றன. மிதவாதிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த சற்றே வேகமும், ஓரளவு உயரமும் செல்லக் கூடிய சவாரிகளைக் குறிப்பிடலாம். தீவிரவாதிகளின் வேட்கைக்குத் தீனி போடும் விதமாக ரோலர் கோஸ்டர் போன்றவைகள் அதி வேகத்திலும், தொங்கிக் கொண்டும், தலைகீழாகவும் ஓடுகின்றன.

இந்த ரோலர் கோஸ்டர்களில் ஒரு வகை நம் வாழ்க்கைத் தத்துவத்தையும் போதிப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், மேலே செல்கையில் மெதுவாகச் சென்று, கீழிறங்குகையில் அதிவேகமாகச் செயல்படுகிறது. மனித வாழ்க்கையும் இப்படித்தானே! உயர்வை அடையப் பல காலம் உழைக்க வேண்டியுள்ளது.

வீழ்ச்சிக்கோ… சிறு நேரந்தானே!

எனர்ஜி லேண்டியாவில் சாதமும் கிடைக்கிறது. உலகின் எல்லா இடங்களிலும் பெரும் பங்கு வகிப்பவை சிக்கன், பாப் கார்ன், மற்றும் பஞ்சு மிட்டாய்! (Cotton Candy). இவை இல்லாத நாடுகளே இருக்காது போலும்.

ஒரு நாள் முழுவதும் சுற்றினாலும், எல்லாச் சவாரிகளிலும் செல்ல நேரம் போதாது. அவரவர் தங்கள் விருப்பப்படி ரைடுகளைத் தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சி அடைகிறார்கள். எல்லா இடங்களிலும் நமது ஜியண்ட் வீல் (Giant Wheel) உண்டு.

பெயரில்தான் மாற்றம். சிங்கப்பூரில் ப்ளையர் (Flyer) என்றும், இங்கு ஒண்டர் வீல் (Wonder Wheel) என்றும் அழைக்கப்படுகிறது. பார்க்கின் முழு அளவையும் உயரத்திலிருந்து ரசிக்க, ஆரவாரம் இல்லாத இது அனைவருக்கும் பயன்படுகிறது. அமெரிக்க, ஐக்கிய நாடுகளில் கோடையில் சூரியன் ஓ.டி (OT) பார்க்கிறார். இரவு ஒன்பதரை வரை OT.

நாம் காரைப் பார்க் செய்யும் இடத்திலிருந்து பார்க்கின் நுழைவு வாயில் வரை உள்ள குறுகிய தூரத்துக்குக் கூட, ரயில் போன்ற அமைப்புள்ள கார்களில் நம்மை அழைத்து வருகிறார்கள். ஆங்காங்கே சிறு சிறு மேடைகளில் இசைக் கச்சேரி, டான்ஸ் என்று, பார்வையாளர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு உற்சாகப்படுத்துகிறார்கள்.

ஒரு முழு நாளை இதில் கழித்தோம்…சாரி…களித்தோம்!

அடுத்த நாள் காலை ஒரு பறவைகள் கண்காட்சி (Birds Exhibition) சென்றோம். கிளிகள் கண்காட்சி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். நம்மூரின் ஒரு பெரிய மாடி வீடு போன்ற, உள் முற்றம் கொண்ட வீடுதான். அதில் கிளிகளின் பல வகைகளையும் பார்வைக்கு வைத்துள்ளார்கள். வாசலிலேயே அவற்றுக்கான தானிய வகை உணவுகளையும் விற்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் சிறிய மரக் கிண்ணங்களில் உள்ள அவற்றை வாங்கி அந்தக் கிளிகளுக்கு அளிக்கலாம். அவற்றை மனிதர்களுடன் பழகவும் பழக்கி வைத்துள்ளார்கள். எங்கள் தோள்களில் வந்தமர்ந்த ஒன்றிரண்டு, நீண்ட நேரம் அகலவேயில்லை. அவற்றின் கால்களுக்கடியில் நம் கைகளைக் கொண்டு சென்றால், கைகளில் ஏறித் தோளுக்கு வந்துவிடுகின்றன. நாம் நடந்தாலும் அவை கூடவே வருகின்றன.

Birds

பெண்கள் தோடுகள், மூக்குத்திகள் அணிந்து சென்றால் அவற்றைக் கழற்றச் சொல்கிறார்கள். அல்லது அவற்றைக் கறுப்புத் துணியால் கவர் செய்து விடுகிறார்கள். இல்லையெனில் தானியம் என்று நினைத்து அவற்றைக் கொத்தி விடுமாம்.

ஓர் அரை நாளை அவற்றுடன் விளையாடிக் கழித்த பிறகு ‘ஃபன்சியம்’ (Funzeum) சென்றோம். ஓர் பெரிய மாலின் ஒரு பகுதியில் இது இயங்குகிறது. உள்ளே சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய அரங்குகளைக் கற்பனை நயத்துடன் அமைத்துள்ளார்கள்!

எல்லா இடங்களையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளார்கள். நுணுக்கமான பல அரங்குகள் பெரியவர்களையும் கவரத் தவறுவதில்லை. உள்ளே நீண்ட நேரத்தைச் செலவிடும் விதத்தில் பலவும் உள்ளன.

Poland Travel

நீண்ட கலைடாஸ் கோப், மூன்று, நான்கு உண்டு. அவற்றின் உள்ளே என்னென்ன மாதிரி பளிங்குக் கற்களைப் போட வேண்டுமென்பதைத் தெரிவு செய்யக் குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். அது போலவே பல கண்ணாடியிலான எந்திரங்களில், ஓர் ஓரத்தில் பந்துகளைப் போட்டால் அவை காற்றின் வேகத்தால் பல நிலைகளைத்தாண்டி ஓடி வருவது குழந்தைகளுடன் பெரியவர்களையும் கவரும் விளையாட்டு.

அன்று முன்னிரவில் கடோவிசை விட்டு வார்சாவிற்குப் பயணமானோம். 294 கி.மீ., தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்க முடிந்தது. நல்ல சாலைகளும், விதிகளை மீறாத ஓட்டுனர்களுமே இதற்குக் காரணமென்று தோன்றுகிறது!

(தொடரும்)

- ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து                              

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT