உலகம் முழுவதிலும் உள்ள இரண்டு வெள்ளை பாலை வனங்களில் ஒன்று பொலிவியாவில் அமைந்துள்ள சாலார் டி யுயுனி. மற்றொன்று இந்தியாவில் உள்ள ரான் ஆப் கட்ச். இந்தவெள்ளை பாலைவனம் பற்றிய சிறப்புகள் என்ன என்று பார்ப்போமா.
1. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கட்ச்
குஜராத்தில் அமைந்திருக்கும் கட்ச் பகுதி மயக்கும் வரலாறையும் துடிப்பான மரபுகளும் கொண்ட ஒரு ஆமையின் வடிவத்தை ஒத்த தீவாகவும்,இந்தியாவின் பழங்கால சமஸ்தானமாகவும் இருக்கிறது. இது ஆடம்பரமான தன்மையை கொண்ட வெள்ளை உப்பு, பாலைவனத்தின் பரந்த விரிவாக்கங்களை உள்ளடக்கிய இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அழகான பகுதியாகும்.
2. ரான் ஆஃப் கட்ச்சின் அழகான நில அமைப்பு
கிரேட் ரன் என்ற இடத்தில் மக்கள் வசிக்காத உப்பு சமவெளியாக இருந்தாலும் பிரதான நிலப்பரப்பு பெரும்பாலும் சமவெளிகள், மலைகள் மற்றும் வறண்ட ஆற்றுப் படுகைகளின் கலவையாகவும் ஒருபுறம் தார்பாலைவனமும் மறுபுறம் அரபிக் கடலும் சூழ்ந்த ரான் ஆப் கட்ச் கலைகள் மற்றும் பாரம்பரியங்களில் வண்ணங்களால் நிரம்பிய ஒரு மாபெரும் கேன்வாஸ் போல் நமக்கு தெரிகிறது.
3.பல திரைப்பட பாடல்களில் நாம் கண்டு ரசித்த கட்ச்
ஸா ரிக்க பாலுசா எனும் இந்தி பாடல், சிறகுகள் வந்ததே எனும் ஆர்யா, திரிஷா பாடல், மகதீரா படத்தில் வரும் சில காட்சிகள் உட்பட என பல திரைப்படங்களில் எங்கு திரும்பினாலும் வெள்ளை மணல் போர்வை போத்தியது போல் நம் கண்களுக்கு விருந்தளித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த பகுதி இந்த வெள்ளை பாலைவனம்தான்.
4. ஓவியம், காரத் நெசவு, மட்பாண்டங்கள்
கட்ச் எம்பிராய்டரி, பந்தனி, ரோகன் ஓவியம், காரத் நெசவு, மட்பாண்டங்கள், தோல் வேலை, மரவேலை மற்றும் டெரகோட்டா கண்ணாடி வேலை ஆகியவை கட்ச் பகுதியில் சிறப்பு வாய்ந்த கலை அம்சங்களாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் சந்தைகளை பார்க்க மறந்து விடாதீர்கள்.
5.வண்ணமயமாக காட்சியளிக்கும் ரான் திருவிழா
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் இங்கு நடைபெறும் ரான் திருவிழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், ஹீலியம் பலூனிங் கொண்ட பெரிய முகாம் குடியிருப்புகள் நிகழ்ச்சியின்போது வண்ணமயமாக காட்சியளிப்பதோடு பிளமிங்கோ சரணாலயம் காட்டு கழுதை சரணாலயம் ஆகியவற்றிற்கும் பிரபலமானது தான் இந்த ரான் ஆப் கட்ச்.
6. அழகும், பழமையும் கலந்த கலாச்சாரம்
கட்ச்சில் உள்ள மக்கள் தங்கள் கலைகள் நடனம் மற்றும் இசைக்காக அனைத்து உற்சாகங்களையும் ஒதுக்கி வைத்து எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர். மேலும் இங்கு சுவையான உள்ளூர் உணவுகள் அவர்களது கலாச்சாரத்தோடு சேர்ந்து உண்பது மிகவும் பிரபலமானது
7. ரான் ஆப் கட்ச்சுக்கு செல்லும் வழி
பூஜ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம்தான் கட்ச்க்கு அருகில் உள்ள நிலையங்கள் ஆகும். குஜராத்தில் இருந்தும் ராஜஸ்தானில் இருந்தும் கட்ச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமன்றி டாக்ஸிகளும் எளிதாக கிடைக்கின்றன. பூஜ் அருகே உள்ள மாண்ட்வி அழகிய கடற்கரையும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.
ஆகவே, சரியான நேரத்தில் திட்டமிட்டு சுகமான பயண அனுபவத்தை பெறுங்கள்.