நோகலிகை நீர்வீழ்ச்சி
நோகலிகை நீர்வீழ்ச்சி 
பயணம்

அழகிய நீர்வீழ்ச்சிக்குப் பின் இருக்கும் சோகக்கதை… தெரிஞ்சிக்கலாம் வாங்க!

நான்சி மலர்

ண்களுக்கு குளிர்ச்சியான அழகான நீர்வீழ்ச்சியை பார்த்தால் ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது? இந்த கோடைக்கு அப்படியொரு நீர்வீழ்ச்சிக்கு செல்வதுதான் வெயிலிலிருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும். இன்று நாம் அப்படியொரு ரம்யமான அழகை கொண்ட நீர்வீழ்ச்சியை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க விருக்கிறோம். அதன் கூடவே அந்த நீர்வீழ்ச்சிக்கு பின் இருக்கும் சோகமான கதையை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

இந்தியாவில் உள்ள மேகாலயா சிரபுஞ்சியில் அமைந்துள்ளது நோகலிகை நீர்வீழ்ச்சி. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சியில் இதுவும் ஒன்றாகும். இதன் உயரம் 1115 அடியாகும். மற்றும் இதன் அகலம் 75 அடியாகும். இந்த நோகலிகை நீர்வீழ்ச்சி தான் இந்தியாவின் 5 ஆவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். குளிர்க்காலத்தில் இந்த அருவி வறண்டு காணப்படும். வழக்கத்திற்கு மாறாக இந்த அருவியிலிருந்து விழும் நீரானது பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி விழும் இடத்தில் பச்சை நிறத்தில் குளம் போல நீர் தேங்கியிருப்பது தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மரகதக்கல் போன்று காட்சியளிக்கிறது.

இந்த அருவியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். ஜூன் முதல் நவம்பர் வரை இவ்விடத்திற்கு வருகை தருவதற்கு சிறந்த மாதமாகும். இந்திய மக்கள் மட்டுமின்றி உலகில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் தங்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு இந்த இடத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்நீர்வீழ்ச்சியை தொலைவிலிருந்து பார்க்கும் போது, பச்சை மரங்களிலிருந்து வெள்ளை நூல் விழுவது போல உள்ளது. இயற்கையை விரும்புவோருக்கும், வனவிலங்கு ஆர்வலருக்கும் இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். இந்த அருவியைக் காண முடியாமல் சில சமயங்களில் பனிமூட்டம் மறைத்துவிடும். எனவே குறிப்பிட்ட சில மாதங்களில் சென்று இவ்விடத்தின் அழகை ரசித்துவிட்டு வருவது சிறந்தது.

நீர்வீழ்ச்சி...

இவ்வளவு அழகைக்கொண்ட இந்த நீர்வீழ்ச்சிக்கு பின் ஒரு சோகமான கதையும் உள்ளது. கலிகை என்னும் பெண்ணுடைய கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கலிகைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையிருந்தது, அந்த குழந்தையை பார்த்து கலிகையின் இரண்டாவது கணவனுக்கு பொறாமை ஏற்பட்டது. இதனால் ஒருநாள் கலிகை வேலைக்கு சென்றிருந்த பொழுது இரண்டாவது கணவன் அந்த குழந்தையை கொன்று அதில் உணவு சமைத்து வைக்கிறான். இதை அறிந்துக்கொண்ட கலிகை ஓடிச்சென்று நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறார். காலிகைக்கு நேர்ந்த சோகத்தின் கடுமையான நினைவூட்டலாக அவள் குதித்த நீர்வீழ்ச்சிக்கு நோகலிகை நீர்வீழ்ச்சி என்று பெயரிடப்பட்டது.

மேகாலயா மற்றும் சிரபுஞ்சி குளிர்ச்சியான தட்பவெட்பத்தை கொண்ட இடம் என்பதால் கோடை வெயிலை சமாளிக்க நிறைய சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தை தேடி வருகை தருகிறார்கள். அதிலும் இந்த அருவியின் அழகை ரசிக்கவே பலர் இங்கு வருகிறார்கள். நிச்சயமாக வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று காணக்கூடிய இடத்தில் இந்த நோகலிகை நீர்வீழ்ச்சியும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

SCROLL FOR NEXT