நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசிப்பது என்பது அலாதியானது. அதுவும் கோடை காலங்களில் நீர்வீழ்ச்சிகளுக்குச் சென்று அவற்றைப் பார்த்து ரசிப்பதும் அதன் கீழ் நின்று குளித்து மகிழ்வதும் அற்புதமான ஒரு விஷயம். இந்தியாவில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் குற்றாலம் மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. அதேபோல கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) இந்தியாவில் உள்ள உயரமான பத்து அருவிகளில் ஒன்றாகும்.
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். சிவசமுத்திரம் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு தீவு. இந்தத் தீவினை அடையக் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு குறுகிய கல்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். சிவனசமுத்திரம் என கர்நாடகாவில் அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி விழும் இடத்தில் இரண்டாகப் பிரிந்து ககனசுக்கி (Gaganachukki), பாராசுக்கி (Bharachukki) என இரண்டு அருவிகளாகப் பிரிந்து பாய்ந்து ஓடுகின்றன. இந்த இரண்டு அருவிகளும் முன்னூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்றாய் சேருகின்றன. இந்த அருவிகளைச் சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மலைச்சிகரங்கள், பச்சைப் பசேலெனும் மரம் செடி கொடிகள், நுரைத்து ஓடிடும் வெள்ளம் முதலானவை காண்போரை வியக்க வைக்கின்றன.
ககனசுக்கி மாண்டியா மாவட்டத்தில் மலவல்லி என்ற வட்டத்தில் அமைந்துள்ளது. பாராசுக்கி சாமராஜாநகர் மாவட்டத்தில் கொள்ளேகல் வட்டத்தில் அமைந்துள்ளது. ககனசுக்கிக்குத் தென்கிழக்குத் திசையில் பாராசுக்கி அருவி அமைந்துள்ளது. ககனசுக்கி, பாராசுக்கி நீர்வீழ்ச்சிகள் சுமார் பத்து கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. ஆசியாவின் முதல் நீர்-மின்நிலையமானது (Hydro Electric Power station) சிவசமுத்திரத்தில் 1902 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதும் கூடுதல் தகவல். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கோலாரின் தங்கச் சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது. இங்கிருந்து 1906 இல் பெங்களூருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
ககனசுக்கி பாராசுக்கியை விட மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். ககனசுக்கி நீர்வீழ்ச்சியைப் பார்வையிட ஒரு வியூபாயிண்ட் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி சுமார் 300 அடி உயரத்திலிருந்து ஹோவென்ற சப்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை ஆச்சரியத்துடன் நாம் ரசித்துப் பார்த்து மகிழலாம். இப்பகுதியில் ஏராளமான ஸ்டார்ப்ரூட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சுவைத்தபடியே நாம் நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்.ஸ்டார்ப்ரூட்கள்
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி பெங்களூரில் இருந்து சுமார் 120 கிமீ தொலைவில் மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மைசூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோடை விடுமுறையில் நீங்கள் கர்நாடகாவிற்குச் சென்று சிவசமுத்திர நீர்வீழ்ச்சியைக் கண்டு இரசித்துத் திரும்பலாம்.