இரயில் பயணம்
இரயில் பயணம்  
பயணம்

பயணப் பாடம்!

வாசுதேவன்

ந்த நபரின் இரண்டு ரயில் பயணங்களின் அனுபவங்கள். இரண்டும் ஒரே ரயிலில். ஆனால் வேறு வேறு தினங்களில். ஒரு முறை செல்லும்பொழுது. மறு முறை திரும்பும்பொழுது. அப்பொழுது, அவர் வசித்து வந்தது. மும்பையில். அலுவலக விஷயமாக வாரம் ஒரு முறை குஜராத்தின் வாபி பகுதிக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் சென்று, அன்றே திரும்புவது வழக்கம். பொதுவாக வாரத்தின் புதன் கிழமை சென்று வருவார். இல்லாவிட்டால் வியாழன் அன்று பயணம் மேற்கொள்வார். அவர் அலுவலகத்தில் முன்னதாவே முன்பதிவு (அட்வான்ஸ் ரிசர்வேஷன்) செய்து விடுவார்கள் அவர் போய், வர. அவர் தனது ரயில் டிக்கெட்டை ஒரு முறைக்கு இரண்டு முறை சரி பார்த்து விட்டுத்தான், பெற்றுக்கொள்வார், தனது அலுவலகத்தில் இருந்து.

அதே மாதிரி பயணத்திற்கு முதல் நாள் இரவே ஒரு முறை மறக்காமல் சரி பார்த்து வைத்துக்கொள்வார். அலுவலக காகிதங்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள், ஐ டி கார்டு, ஆதார், பான்கார்டு, பணம் இவற்றுடன்.

குறிப்பிட்ட நாள், மும்பை சென்ட்ரலில் ரயில் ஏறி தனது ரிசர்வ்ட் சீட்டில் அமர்ந்துக்கொண்டார். ரயில் கிளம்பி சிறிது நேரத்தில் போறிவிலி ஸ்டேஷனில் சென்று நின்றது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வாபிக்கு செல்லும். போறிவிலி ஸ்டேஷனில் பெட்டிகள் நிரம்பி விட்டன. ரயிலும் நகர தொடங்கியது. அப்பொழுது இவர் அருகில் வந்த ஒருவர்,

"மிஸ்ட்ர், இது என்னுடைய ரிசர்வ்ட் சீட், நீங்கள் எழுந்து எனக்கு இடம் விடுங்கள்", என்றார்.

இந்த நபருக்கோ குழப்பம், "இது எனக்காக ரிசர்வ் செய்யப்பட்டது..!" என்று கூறி, அவருடைய அனுமதியுடன் அவர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தார். டென்சன் பறந்துபோனது… போகும் இடம், ரிசர்வ் செய்ய பட்ட சீட் எண், அந்தக் குறிப்பிட்ட பயணியின் பெயர் எல்லாம் அவர் காண்பித்த டிக்கெட்டில் சரிவர பதிவாகியிருந்தது, பயணம் செய்ய வேண்டிய தேதியை தவிர. அவர் அந்த டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தபடி பயணம் மேற்கொள்ள வேண்டிய நாள் அடுத்த வாரம், இன்று அல்ல.

இரயில் பயணம்

அந்த ஆசாமி, மறதியில் அடுத்த வாரம் பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டுடன் இன்றே ரயில் ஏறி விட்டார்.

அவருக்கு விளக்கப்பட்டதும், வருத்தம் தெரிவித்து விட்டு TTR ஐ தேட சென்றார் , ஏதாவது விடிவு கிட்டுமா என்று.

சதாப்தி எக்ஸ்பிரஸ் வெகு வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. இவர் ஏசி காற்றை அனுபவித்துக் கொண்டு, அன்றைய பயணத்தை தொடர்ந்தார்.

அந்த நபர் அவதிப்பட்டுக் கொண்டு, பண விரயமான வருத்தத்தோடு பயணம் செய்துக்கொண்டிருந்தார்.

வேறு ஒரு தினம். மும்பை நோக்கி செல்லும் ரயில் வாபி ஸ்டேஷனில் வந்து நின்றது.

நமக்கு பழக்கப்பட்ட நபர், தன்னுடைய ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் ஏறி தனது சீட் நோக்கி சென்றார். திடுக்கிட்டார். இவரது ரிசர்வ்ட் சீட்டில் ஒரு பெண் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, எதிரில் இருக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர் சென்று என் சீட்டு என்றதும், பக்கத்தில் காலியாகி இருக்கும் சீட்டில் உட்கார்ந்துகொள்ளுங்கள், குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது, என்று கூறி விட்டு, எதிரில் இருந்த பெண்ணுடன் தன் அரட்டையைத் தொடர்ந்தார்.

இவரும், அந்த காலியான சீட் அந்தப் பெண்ணுடையது என்று நினைத்து உட்கார்ந்தார். அவர் எதிரில் ஒருவர் வந்து நின்று, "இது என் ரிசர்வ்ட் சீட்..!" என்று சொல்ல, இவர் அந்த பெண்ணைப் பார்த்தார். அரட்டையில் முழுகியிருந்த அந்த பெண் கஷுவலாக, ‘இதோ இப்போ வாபி வந்துவிடும், நான் இறங்கி விடுவேன், நீங்கள் உங்கள் சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம்,’ என்றாள்.

அதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், ‘இப்பதானே ரயில் வாபியிலிருந்து கிளம்புகிறது,’ என்று கூறுவதற்குள் ரயில் ஸ்டேஷனில் இருந்து சிறிது தூரம் கடந்து வேகம் எடுக்கத் தொடங்கியது. தங்களை மறந்து ஊர்க்கதை பேசிக்கொண்டு வந்ததில், அவர்கள் இருவரும் இறங்க வேண்டிய வாபி ஸ்டேஷனில் இறங்க முடியவில்லை. அடுத்து நெடு நேரம் கழித்துத்தான் இறங்க முடியும்.

பதற்றம், பரபரப்பு, கோபம், இயலாமை, டென்ஷன் எல்லாம் போட்டிப் போட்டுக்கொண்டு, இருவரையும் படுத்தி எடுத்தன. பரிதவித்தனர். எல்லா சீட்டுக்களிலும் பயணிகள் அமர்ந்து பயணம்.செய்துகொண்டு இருந்தனர்.

இரு நிகழ்வுகளும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் படிப்பினையாக இல்லாமல், எல்லோருக்கும் பொருந்தும்படியிருந்தன.

பயணம் செய்யும்பொழுது மறதி இல்லாமல், கவன குறைவு இல்லாமல் பயணிப்பது முக்கியம் ஆகின்றது. ஆனாவசியமான அவதிகளைத் தவிர்க்கலாம் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகளும் எடுத்துக்காட்டு.

பி.கு:- இதுபோன்ற அனுபவங்கள் நம் வாழ்விலும் ஏற்பட்டிருக்கலாம். இக்கட்டுரை எனக்குத் தெரிந்த நண்பருக்கு ஏற்பட்ட உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT