சுற்றுலா என்பது தற்போது அனைவராலும் விரும்பப்படும் ஒரு விஷயமாக உள்ளது. இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, வரலாற்றுச் சுற்றுலா, உள்நாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா என பலவகையான சுற்றுலாக்கள் உள்ளன. மகிழ்ச்சி, துன்பம், சோகம் முதலான விஷயங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இடம் பெறுகின்றன. தற்காலத்தில் டார்க் டூரிசம் (Dark tourism) என்பது உலகின் பல நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. டார்க் டூரிசத்தைப் பற்றி இப்பதிவில் நம் சற்றுத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக சுற்றுலா என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம். நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட்டு புதிய இடங்களுக்குச் சென்று திரும்பினால் மனம் லேசாகிப் போகிறது. ஆனால் டார்க் டூரிசம் என்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு சுற்றுலா அல்ல. இறப்பு, சோகம் மற்றும் கொடூரமான நிகழ்வுகள் நடைபெற்ற வரலாற்றுத் தொடர்புடைய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவது டார்க் டூரிசம் என்று அழைக்கப் படுகிறது. இதை பிளாக் டூரிசம் என்றும் அழைக்கிறார்கள். சக மனிதர்கள் சந்தித்த துன்பங்களையும் சோகங்களையும் அதன் நிகழ்விடத்திற்கேச் சென்று அறிந்த கொள்ள இத்தயை சுற்றுலாக்கள் உதவுகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள இத்தகைய பகுதிகளைப் பற்றி இனி அறிந்து கொள்ளுவோம்.
குஜராத் மாநிலத்தில் புஜ் நகரத்தில் 26.12.2001 அன்று காலை ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிந்த நிலநடுக்கத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பலர் தங்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து பெரும் வேதனைக்கு உள்ளாயினர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மெட்ராஸ் போர்க் கல்லறையில் (Madras War Cemetery) இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் கல்லறைகள் உள்ளன. இது இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் தியாக வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரு இடமாகும்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஜாலியன்வாலாபாக் என்ற திறந்த வெளியில் 13 ஏப்ரல் 1919 அன்று 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் டயர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 ரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இந்த கொடூர நிகழ்வு “ஜாலியன்வாலாபாக் படுகொலை” என்று அழைக்கப்படுகிறது. இந்த படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்தமானில் உள்ள செல்லுலர் சிறைச்சாலை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை கடுமையாக தண்டிக்க உருவாக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை ஆகும். இந்திய சுதந்திரத்திற்காக போராடும் வீரர்களை தனிமைச் சிறையில் அடைத்து வைத்து மிகக்கடுமையாக வேலை வாங்கி அவ்வாறு வேலை செய்ய இயலாதவர்களை தூக்கில் போட்டு தண்டித்த இடம். இந்த சிறைச்சாலை சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டு 1896 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1906 ஆம் ஆண்டில் அதாவது சுமார் பத்து ஆண்டுகளில் முற்று பெற்றது. மொத்தம் 690 அறைகள் அமைக்கப்பட்டன. ஜெயிலில் உள்ள ஒவ்வொரு அறையும் 13.5 அடி நீளமும் 7 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் ஏதும் இல்லை. மேற்புறத்தில் 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட இரும்புக் கம்பிகளால் ஆன வெண்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பூட்டும் படியாக தாழ்ப்பாள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற டார்க் டூரிசம் பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது இத்தகைய இடங்களுக்கும் சென்று நீங்கள் பார்வையிடலாம்.