Slow Train 
பயணம்

உலகின் மெதுவான இரயில்: ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்! ஏன் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் நமக்கு பல காட்சிகளைத் தருகிறது. இதன் வரிசையில் இயற்கையின் அற்புதங்களை நமக்கு விருந்தளிக்கும் உலகின் மெதுவான இரயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியாது என்றால் வாங்க இப்போதே தெரிந்து கொள்வோம்!

தொலைதூரப் பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருப்பவை இரயில்கள் தான். ஏனெனில் இப்பயணத்தில் தான் கட்டணமும் குறைவு; உடல் சோர்வும் ஏற்படாது. மேலும், பயண நேரங்களில் ஜன்னல் வழியே பல வகையான இயற்கை காட்சிகளையும் கண்டுகளிக்கலாம். இத்தனை அம்சங்கள் உள்ள இரயில் பயணத்தை யார் தான் நிராகரிப்பார்கள். உலகளவில் பல நாடுகளில் இரயில் சேவையில் வேகத்தை அதிகப்படுத்த பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இருப்பினும், மெதுவாக செல்லும் இரயிலுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கின்றன. ஆம், மெதுவாக செல்லும் இரயில்கள் பல காட்சிகளை நம் கண் முன்னே நிலைநிறுத்துகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிளேசியர் இரயில் உலகின் மெதுவான இரயில் என்று கூறப்படுகிறது. இதற்கு பனிப்பாறை எக்ஸ்பிரஸ் இரயில் என்றும் இன்னொரு பெயர் உண்டு. பொதுவாக சுற்றுலா தளங்களுக்குச் செல்வதற்குத் தான் இரயில் பயணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த இரயிலில் செல்வதற்காகவே சுற்றுலாவைத் திட்டமிடுகின்றனர் பயணிகள். அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது இந்த இரயிலில் என்ற ஆர்வம் உங்களுக்கும் அதிகரிக்கிறது அல்லவா!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸில் இருந்து ஆண்டர்மாட் வழியாகச் செல்லும் கிளேசியர் இரயில், ஜெர்மாட் மற்றும் செயிண்ட் மோரிட்ஸ் ஆகிய இரண்டு பகுதிகளை இணைக்கின்றன. மொத்தம் 291 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த இரயில் 8 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இரயில் செல்லும் வழியெல்லாம் பள்ளத்தாக்குகள், பனிப்பாறைகள், அழகிய கிராமங்கள் மற்றும் நீண்ட நெடிய குகைகள் போன்ற இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே மெதுவான பயணத்தை நாம் நிச்சயமாக அனுபவிக்கலாம். பயணத்தில் எண்ணற்ற பாலங்களின் மேல் பறந்தும், சுரங்கங்களுக்குள் புகுந்தும் இரயில் செல்வதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கின்றன‌. இயற்கையின் அழகை ரசித்தபடியே பயணிக்க பெரிய அகலமான ஜன்னல்கள் இந்த இரயிலில் உள்ளன.

வெயில் காலம் மற்றும் குளிர் காலம் உள்பட ஆண்டு முழுவதும் இந்த இரயில் சேவை தொடர்ந்து கெண்டிருக்கிறது. முதல் தர வசதி கொண்ட இருக்கைகள், துரித சேவையுடன் உணவுகள் என அனைத்து வசதிகளும் இந்த இரயிலில் உள்ளன. இயற்கையின் அரிய காட்சிகளை நாள்தோறும் கண்டுகளிக்க இந்த இரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பொதுவாக பயணத்தின் போது வேடிக்கை பார்க்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இரயில் பயணத்தின் சிறப்பே பயணத்தில் வேடிக்கை பார்க்கவும், காற்றோட்டமாக இருக்கவும் பயன்படுகின்ற ஜன்னல்கள் தான். நீங்களும் இரயில் பயணத்தை விரும்புபவராக இருந்தால், நீங்கள் பயணித்த இரயிலில் கண்ட சிறப்பான காட்சிகளை கமெண்டில் சொல்லி விட்டுச் செல்லுங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT