Sri Veeraragava Swami 
தீபம்

5000 ஆண்டுகள் பழமையான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ வீரராகவ சுவாமி கோவில். இங்கு பெருமாள் வைத்திய வீரராகவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பெருமாள் இவர். தாயார் பெயர் கனகவல்லித் தாயார் (வசுமதி).

5000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம் இது.15 அடி நீளம் 5 அடி உயரத்தில் வீரராகப் பெருமாள் சயனகோலத்தில் காட்சி தருகிறார். மார்க்கண்டேய புராணத்தில் இந்த கோவில் பற்றிய குறிப்புகள் உண்டு. கோவிலின் விமானம் "விஜயகோடி விமானம்" எனப்படுகிறது.

திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 59வது திவ்ய தேசம் இது. இங்குள்ள மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இங்குள்ள கங்கைக்கு நிகரான ஹ்ருத்தபாப நாசினி தீர்த்தத்தில் நீராட நோய்கள் தீரும். அத்துடன் நம் எண்ணத்தால் உருவான பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நவநீத கிருஷ்ணர் சன்னிதியில் பக்தர்களுக்கு தேன் கலந்த தினை மாவு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூன்று அமாவாசை தினத்தில் வெல்லம் மற்றும் பால் கொண்டு இங்குள்ள தீர்த்த குளத்தில் கரைத்து பிரார்த்திப்பது சிறப்பு. அதேபோல் உப்பும் மிளகும் சமர்ப்பிக்கும் வழிபாடும் இங்கு உள்ளது. இப்படி பிரார்த்திப்பதால் நோய்கள் மற்றும் நம் துயரங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

வைத்திய வீரராகவர் எனப்படும் பிணி தீர்க்கும் வீரராகவரை மூன்று அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக் கொள்ள தீராத வியாதிகள் குறிப்பாக வயிற்று வலி, கை கால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் சன்னிதியும், சக்கரத்தாழ்வார் சன்னதியும் மிகவும் விசேஷம்.

நேர்த்திக்கடன்:

பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம்) வாங்கி பெருமாளுக்கு செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள். இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோவிலின் அலுவலகத்தில் கிடைக்கும். இந்த நேர்த்திக்கடன் இங்கு மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. உடம்பில் மரு, கட்டி ஆகியவை இருந்தால் அது மறைவதற்காக இத்தலத்து குளத்தில் பால் வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைத்து வேண்டிக் கொள்கிறார்கள். அத்துடன் கோவில் மண்டபத்தில் உப்பும் மிளகும் சமர்ப்பிக்கப்படுகிறது.

அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை பெருமாள் தேடிவந்து திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் இது திருமணத்தலமாகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள கோதண்ட ராமர் திருக்கரங்களில் வில், அம்பு ஏந்தியபடி வீரமிக்க எழில் தோற்றத்தில் அருள் புரிகிறார். பொதுவாக ஆலயங்களில் ராமனுக்கு இடப்புறத்தில் தான் சீதாதேவி காட்சி தருவார். ஆனால் இங்கு சுவாமிக்கு வலப்புறத்தில் அவர் காட்சி தருவதை "கல்யாண திருக்கோலம்" என்று சிறப்பித்து கூறுகிறார்கள். இங்கு வந்து வழிபட திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.

தல வரலாறு:

தவத்தில் சிறந்த சாலிஹோத்ர முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்பவரான இந்த முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது ("படுக்க எவ்வுள்") என முனிவரிடம் கேட்க  முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக கிடந்த கோலத்தில் சயனித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. 

எவ்வுள் என்று கேட்டதால் ஊர் பெயர் "எவ்வுள்ளூர்" என்றும், எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாளின் திருப்பெயருமானது என்று கூறப்படுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT