கார்த்திகை சோமவாரம் என்பது சிவபெருமானுக்கு மிக விசேஷமானது. காஞ்சிபுரத்தில் கிட்டத்தட்ட 190 சிவாலயங்கள் உள்ளன. சிவலிங்கங்கள் பல வகைப்படும். தானே உருவான சுயம்பு லிங்கம், தேவர்கள் பூஜித்த தைவீக லிங்கம், நதியில் கிடைக்கும் பாண லிங்கம், ரிஷிகள் பூஜித்த ஆர்ஷ லிங்கம், மனிதர்கள் உருவாக்கிய மானுஷ லிங்கம், அசுரர்கள் பூஜித்த அசுர லிங்கம். இவை அனைத்ததையுமே காஞ்சியில் காணலாம். தவிர ஒரே லிங்கத்தில் 1000 லிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் மற்றும் 108 கொண்ட ஷத லிங்கமும் சில கோவில்களில் இருக்கின்றன. இறைவன் அருளால் இந்த கார்த்திகை மாதம் முதல்நாளே காஞ்சிபுரம் சென்று பல ஆலய தரிசனம் கிடைக்கப் பெற்றேன். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
ஒரு வித்தியாசமான கோவில் கைலாச நாதர் கோவில். இங்குள்ளது ஷோடஷ லிங்கம் அதாவது 16 பட்டைகள் கொண்டு பளபளவென்று வீற்றிருக்கிறார். வெளிப்பிரகாரம் முழுவதும் சிறுசிறு மண்டபங்கள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த தோற்றம். அச்சிறு மண்டபத் தூண்கள் அனைத்திலுமே முன்னிரு கால்களைத் தூக்கி பின்னிரு கால்களில் நின்றோ அமர்ந்தோவுள்ள சிங்கங்களின் சிற்பங்கள் மிகவும் பிரமிப்பைத் தருகின்றது.
கோவில் கற்பக்கிரகத்தை வலம் வருவது எல்லோராலும் முடியாத ஒரு வித்தியாசமான வழி. இறைவனுக்கு வலப்புறம் சந்நிதியை ஒட்டி ஒரு சிறிய துவாரம் உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றறையடி நீளம், அகலம், உயரத்தில் பாறையில் செதுக்கியது. இரண்டு படி ஏறி அதனுள் ஊர்ந்து சென்று மிகக் கீழே உள்ள படியில் இறங்கிய பின் ஒருவர் நடந்து வலம் வரக்கூடிய பாதை. மீண்டும் வெளியே வரும் இடத்தில் ட போன்ற அமைப்புக்குள் நுழைந்து வளைந்து வெளியே வரலாம். அது முடியாதவர்கள் படி ஏறி வரலாம். வெளியே வருவதை விட உள்ளே நுழைவது சுலபமல்ல. உடல்வாகு, வளையக்கூடிய தன்மையைப் பொருத்தது. இந்த பிரதக்ஷிணத்தை புனர்ஜனனி என்கிறார்கள். மீண்டும் பிறவி எடுத்ததுபோல் என்று பொருள். இதைச் செய்தால் மறு பிறவியில்லை என்றும் நம்பப்படுகிறது.
பல்லவர்களால் சாண்ட் ஸ்டோன் என்னும் மணற்கற்களால் கட்டப்பட்ட கோபுரமும் மண்டபமும் மிகவும் அழுத்தத்தைத் தாங்கக்கூடியவை அல்ல என்பதால் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளன. அதனால் மத்திய அரசின் தொல்துறை இலாக்கா இதன் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.