தீபம்

ஆண்டவன் பார்வையில் அனைவரும் ஒன்றே!

ஆர்.சுந்தரராஜன்

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது. தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது. “நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன். அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன். என்னைத் தடுக்காதே” என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

“நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடத் தகுதியில்லை. ஆனால், என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார்” என கர்வமாக ஆதிசேஷன் கூறியது. ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார்.

திரேதா யுகத்தில் ராமனாக விஷ்ணுவும், லட்சுமணனாக ஆதிசேஷனும் அவதரித்தனர். கைகேயி தசரதரிடம் கேட்ட வரத்தின்படி, ராமபிரான் சீதை, லட்சுமணனுடன் வனவாசம் செய்யப் புறப்பட்டார். கங்கைக் கரைக்கு வந்தார். ‘இரு கரையையும் தொட்டு புரண்டு ஓடும் நதியை எவ்வாறு தாண்டுவது’ என யோசித்தார்.

அப்போது குகன் தனது படகுடன் அங்கு வந்தான். அவன் ஒரு நிபந்தனையின் பேரில் அவர்களை அக்கரையில் கொண்டு சேர்க்க ஒப்புக் கொண்டான். “ஐயனே! நான் ஒரு சாதாரண படகோட்டி. இதை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். உங்கள் பொற்பாதம் பட்டு கல்லும் பெண்ணாக ஆனது. அதனால், உங்கள் கால்பட்டு எனது ஓடமும் பெண்ணாகிவிட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? ஆகையால், உங்கள் காலை நன்றாக அலம்புகிறேன். பிறகு நீங்கள் படகில் ஏறலாம். எனக்கு உங்கள் பாதம் கழுவ அனுமதி அளிக்க வேண்டும்” என குகன் பிரார்த்திக்க, ஸ்ரீராமரும் அதற்கு சம்மதித்தார். குகன் மிக சந்தோஷமாக ஸ்ரீராமர் பாதத்தை அலம்பினார். முற்பிறவியில் தனது பாதம் தொட்டு சேவிக்க எம்பி எம்பி குதித்த முதலையே இந்தப் பிறவியில் குகனாக பிறந்திருந்தார்.

அப்போது, ஆதிசேஷனாக அவதரித்திருந்த லட்சுமணனை யதேச்சையாகப் பார்த்தார் ராமர். அந்தத் தருணத்தில் ஸ்ரீராமர் அவர்கள் இருவருக்கும் பூர்வ ஜன்ம ஞாபகத்தை ஏற்படுத்தினார். உடனே லட்சுமணனுக்கு சினம் ஏற்பட்டது. ‘என் முன் இந்த அற்ப முதலை ஐயனின் காலைத் தொட்டு அலம்புவதா?’ என்று அகங்காரத்துடன் குகனைப் பார்த்தார். ஆனால் குகன், ‘இப்போது உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?’ என்பது போல் சிரித்துக்கொண்டே இன்னும் அதிக நீர் விட்டு ஐயனின் பாதத்தை ஆசை தீர அலம்பினார். ஸ்ரீராமர் சட்டென்று அவர்களின் பூர்வ ஜன்ம நினைவை மறைத்துவிட, இருவரும் சாதாரணமாக மாறினர். பக்தனின் மனப்பூர்வமான ஆசையை, அது விலங்கானாலும் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அப்பாவாக போவதை ஈஸ்வரியிடம் கூறிய கோபி... அடுத்து என்ன நடக்கும்... அனல் பறக்கும் பாக்கியலட்சுமி புரோமோ!

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அரசு ஏற்பாடு!

நீங்க சுதந்திரமா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை நிறுத்தினாலே போதும்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அவசியம்!

SCROLL FOR NEXT