முனிவர் ஒருவர் காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். நீண்ட தொலைவு நடந்து வந்ததால் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. காடு என்பதால் எங்கும் தண்ணீர் கிடைக்காமல் நீரைத் தேடி அலைந்தார். அந்தச் சமயத்தில் தொலைவில் ஒரு பெண் குடத்துடன் அக்காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தாள். அப்பெண்ணைக் கண்டதும் முனிவருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ‘எப்படியும் அப்பெண் நம்மைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்போது அவளிடம் தண்ணீர் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அருகில் வந்த பெண்ணிடம், “அம்மா எனக்கு மிகுந்த தாகமாக உள்ளது. சிறிது நீர் கிடைக்குமா?” என்று கேட்டார். “தண்ணீர்தானே முனிவரே, தாராளமாகத் தருகிறேன். ஆனால், நீங்கள் யார்? என்று என்னிடம் கூறவில்லையே” என்று முனிவரிடம் வினாவினாள்.
முனிவரும் அப்பெண்ணைப் பார்த்து, ‘இவள் சாதாரணமானவள். இவளுக்கு நாம் யார் என்று சொன்னால் புரியாது’ என்று எண்ணி, “நான் ஒரு பயணி. அதாவது வழிப்போக்கன்” என்று அப்பெண்ணிடம் கூறினார். உடனே அந்தப் பெண் சிரித்துக் கொண்டு, “இவ்வுலகில் இரண்டே இரண்டு பயணிதான். அதுவும் சூரியன், சந்திரன் மட்டுமே. இவர்கள்தான் இரவும் பகலும் பயணம் செய்கிறார்கள்” என்றாள்.
முனிவர் சற்றே சிந்தித்து விட்டு, ”சரி… அப்போது என்னை ஒரு விருந்தினர் என்று வைத்துக்கொள்” என்றார். அதற்கு அந்தப் பெண், “விருந்தினர் என்றால் இளமையும் செல்வமும் மட்டும்தான்” என்று. இதைக் கேட்ட முனிவருக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டது.
அந்த எரிச்சலுடன் உரத்த குரலில், “நான் ஒரு பொறுமைசாலி “என்றார். அதற்கும் அந்தப் பெண் கூறினால், “அதுவும் இரண்டே பேர்தான். ஒன்று பூமி, யார் மிதித்தாலும், யார் தோண்டினாலும் அவர்களைத் தண்டிக்காமல் தன் மீது தாங்கிக் கொள்கிறது. மற்றொன்று மரம் தன்னைக் கல் கொண்டு அடித்தவர்க்கும் கனியைத் தருகிறது” என்றாள்.
இதைக் கேட்டவுடன் முனிவருக்கு இன்னும் கோபம் அதிகமானது. உடனே, “நான் ஒரு பிடிவாதக்காரன்” என்று கத்தினார்.
உடனே அப்பெண், ”ஏன் முனிவரே கத்துகிறீர்கள். மெதுவாகப் பேசுங்கள். முடிக்கும் நகத்திற்கும் இருக்கும் பிடிவாதத்தை விட மனிதனுக்கு அந்த அளவு பிடிவாத குணம் இல்லை. இவை இரண்டுமே வெட்ட வெட்ட விடாப்பிடியாக வளர்ந்துகொண்டே இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
இதைக் கேட்ட முனிவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தாகம் வேறு அதிகமாக இருந்ததால் அப்பெண்ணின் காலில் முனிவர் விழுந்து விட்டார். உடனே அந்தப் பெண், “மகனே எழுந்திரு” என்றாள். அந்தக் குரலைக் கேட்டு எழுந்தவர் திகைப்புடன் அப்பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண் அம்முனிவருக்கு சாட்சாத் அன்னை பராசக்தியாகவே காட்சி கொடுத்தாள். முனிவர் கண்ணீர் மல்க அன்னையை வணங்கி நின்றார்.
இந்நிகழ்விலிருந்து புரிந்துகொள்வது ஒன்று மட்டுமே. யாரையும் நாம் தரக்குறைவாக எண்ணக்கூடாது. சாதாரண பெண் என்று நினைத்து முனிவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல், வாழ்க்கையில் நாம் எப்பேர்ப்பட்ட உயரத்தை அடைந்தாலும் யாரையும் தனக்குக் கீழே என்று நினைக்காமல் சரிசமமாக எண்ணி மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே.