கன்னி தெய்வ வழிபாடு ... 
தீபம்

கன்னி தெய்வ வழிபாடு என்பது என்ன? விளக்குகிறார் மன்னார்குடி ஆன்மிகச் சுடர் அன்னபூரணி செந்தில்குமார்!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

“ஒரு பெண் குழந்தை பிறந்து அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகாமலேயே இயற்கை எய்திவிட்டால், அந்தப் பெண்ணை ‘கன்னி தெய்வம்’ ஆக வழிபடுகின்ற பண்பாடும் வழக்கமும் நம் கிராமங்களில் இப்போதும் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், நம் நாட்டில் பெண்களைத் தெய்வமாக வணங்குவதும் வழிபடுவதும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

ரிக் வேதத்திலும், மார்க்கண்டேய புராணத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும் கன்னி தெய்வங்களின் வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. நம்மிடையே கன்னி தெய்வ வழிபாடு பின்பற்றுவதற்கும் போற்றப்படுவதற்கும் பலப்பல காரணங்கள் அமைந்துள்ளன.

அன்னபூரணி செந்தில்குமார்...

மானுட உலகில் இன்பத்தைக் கருவாக்கி, உயிருக்குள் உயிர் சுமந்து மனிதகுலத்தைப் பல்கிப் பெருகிட துணையிருப்பவள் பெண். இதன் காரணமாகவே ஆதி மனிதன் காலந்தொட்டு, பெண் எனப்படுபவள் மகா சக்தியாகவே போற்றப்படுகிறாள். அந்தப் பழங்கால மரபுதான் இன்றைக்கும் நம்மிடையே நிலவி வருகிறது. கன்னி தெய்வ வழிபாடு என்பது நம் சமூக வாழ்வில் சற்றே வித்தியாசமானது.

இந்த உலகில் பிறந்த பெண் ஆனவள் பருவம் எய்துவதற்கு முன்னரோ அல்லது பருவம் எய்திய பின்னர் அவளது வாழ்வில் கடைசி வரை திருமணம் ஆகாமல் இயற்கை எய்திவிட்டால், அந்தக் கன்னிப் பெண்தான் கன்னி தெய்வமாகப் போற்றப்படுகின்றாள். இல்லற சுகம் எதுவுமே அனுபவித்திடாமல் வாழ்வின் இறுதி நிலை அடைந்தவர்கள் அந்தக் கன்னி தெய்வங்கள்.

சுமங்கலிப் பெண்கள் இதுபோன்ற கன்னி தெய்வங்களை வணங்கி வழிபட்டால், அவர்களது மாங்கல்ய பலன் கூடும். திருமணம் நடைபெற வேண்டிய கன்னிப் பெண்கள், கன்னி தெய்வங்களை வழிபட்டு வர, அவர்களுக்கு மிக விரைவில் திருமண யோகம் கைகூடி வரும். இதன் காரணமாகவும் நம் கிராமங்களிலும் நகரங்களிலும் கன்னி தெய்வ வழிபாடுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

கன்னி தெய்வ வழிபாடு நிறைவேற்றிட ஆடி மாதம் மற்றும் தை மாதங்கள் மிகவும் உகந்தன. வார நாட்களில் குறிப்பாக செவ்வாய்க்கிழமைதான் கன்னி தெய்வ வழிபாட்டுக்கு உரிய நாள் ஆகும். தங்களது குல தெய்வ வழிபாட்டுக்குக் கிளம்பிச் செல்பவர்கள்கூட, அவர்களது வீட்டில் கன்னி தெய்வ வழிபாடு நிறைவேற்றி விட்டுத்தான் குல தெய்வக் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். பொதுவாக வீட்டில் கன்னி தெய்வ வழிபாட்டின்போது, அவர்களின் முன்னோர்களுக்கும் சேர்த்து வணங்கி வழிபடுவார்கள். இறை வழிபாட்டுக்கு இணையாக கன்னி தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்கும் கன்னி தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாகிறது. குடும்ப ஒற்றுமைதான் கன்னிக்கு ரொம்பவும் பிடிக்கும்.  

வீட்டின் தென் மேற்கு மூலை கன்னி மூலை எனப் படுகிறது. படுக்கையறை அந்தக் கன்னி மூலையில் பெரும்பாலும் அமைக்கப்படுகிறது.

கன்னி தெய்வ வழிபாடு...

கன்னி தெய்வங்களுக்கு அவர்களின் அந்த வயதுக்கு ஏற்ற புதுத் துணியினை, ஒரு பனையோலைப் பெட்டியில் வைத்து வணங்குவது வழக்கம். அந்த ஆண்டு வழிபாடு நிறைவான பின் அந்தப் பனையோலைப் பெட்டியைப் பாதுகாப்பாக எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதனை அடுத்த ஆண்டில் நிகழ்த்தப்படும் கன்னி தெய்வ கும்பிடுக்கு மீண்டும் எடுத்து வைத்துப் பயன் படுத்துவார்கள். அந்திக் கருக்கலில் கன்னி தெய்வ வழிபாடு தொடங்கப்படும். கன்னி தெய்வங்களை மறக்காமல் வழிபடும் குடும்பங்கள் செழித்தோங்கும் என்பது ஐதிகம்.”

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT