‘Keep fingers crossed’ என்று ஆங்கில சொலவடை ஒன்று உண்டு. ஏதேனும் குழப்பம், முடிவெடுக்க முடியாத பதட்டம், என்னாகுமோ, ஏதாகுமோ என்ற கற்பனை பயத்தால் ஏற்படும் படபடப்பு, முச்சிறைப்பு என்றெல்லாம் வருமானால் உடனே மார்புக் கூட்டில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறையும். இச்சமயத்தில் ‘கை விரல்களை பின்னிக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இரு‘ என்று அந்த சொலவடை விளக்குகிறது.
அப்படி விரல்கள் பின்னி இருக்கும்போது அதிகமான ஆக்ஸிஜனை நெஞ்சுக்கூடு பெறுகிறது, (லிங்க முத்ராவின் பலனும் இதுதான்) இதனால் சுவாசம் சீராகிறது, மனம் அமைதியடைகிறது, குழப்பம் விலகி தெளிவு பிறக்கிறது, பிரச்னைக்குத் தீர்வு காண முடிகிறது. ஆங்கில சொலவடையும் நம் பண்டைய இந்த லிங்க முத்ராவிலிருந்து உருவானதாக இருக்கலாம்.
இதையே நம் முன்னோர்கள், ‘ஏ, மனமே, சும்மா இரு,‘ என்று சொல்லி வைத்தார்கள். அதாவது மனசு சும்மா இருந்தால் குழப்பத்துக்கு சான்ஸே இல்லை என்பது அவர்களுடைய அனுபவம். அதைத்தான் இப்போது நாம் ‘தியானம்‘ என்று பயின்று மனதை அடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
மனது அடங்காது என்பது ஞானியருக்கும் தெரியும். அதேசமயம் மூச்சை அடக்கினால் மனது அடங்கும் என்ற ரகசியமும் அவர்களுக்குத் தெரியும். அதைப் பயில்பவர்கள் முக்காலமும் உணர்ந்த மகான்களாகத் திகழ்வார்கள் என்பது காஞ்சி பரமாசார்யார் போன்ற ஞானியர் மூலம் அறிய முடிகிறது.
இத்தனை ஆற்றல் வாய்ந்த பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை பகவான் கிருஷ்ணனே சிபாரிசு செய்திருக்கிறார்! ஆமாம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால், போர் புரிய மறுத்து மனக்குழப்பத்தில் ஆழ்ந்துவிட்ட அர்ஜுனனுக்குத் தான் உபதேசித்த கீதையில், பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தை அறிவித்திருக்கிறார்: -
‘‘அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ரணேபானம் ததாபரே
ப்ரணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா‘‘
(அத்தியாயம் 4, ஸ்லோகம் 29)
என்ன சொல்கிறார் கிருஷ்ணன்?
‘‘சில யோகிகள் தம் சுவாசத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தம் மூக்கினால் உள்ளிழுக்கும் காற்றையும், வெளியிடும் காற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உள்ளிழுக்கும் பிராண வாயு மற்றும் வெளியிடும் அபான (கரியமில) வாயு ஆகிய இரண்டின் போக்கை பிராணாயாமப் பயிற்சியால் கட்டுப்படுத்தி மனோதிட ஆற்றல் படைத்தவர்களாக விளங்குகிறார்கள்.’’
மனதுக்கும் இந்த வாயுவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைத்தான் கிருஷ்ணன் இங்கே சுட்டிக் காட்டுகிறார். எதற்காகவாவது, எதனாலாவது பயம் ஏற்பட்டால், மனம் பாதிப்படைகிறது, கூடவே, அதுவரை சீராக இருந்த சுவாசமும் தடுமாறுகிறது. இயல்பாக ஓசையற்றிருந்த அந்த மூச்சு இயக்கம், ‘புஸ், புஸ்ஸெ’ன்று தாறுமாறானதாகி விடுகிறது.
சுவாசத்தை நேர்ப்படுத்துவதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் புரிந்து கொள்ளப்படவேண்டிய உண்மை. பிராணாயாமப் பயிற்சியை மேற்கொள்ளும்போது ஆரம்பக் கட்டத்திலேயே மனசு ஒடுங்குவதை உணர முடியும். ஆமாம், உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியிடப்படும் காற்றிலேயே நம் முழு கவனமும் பதிந்திருக்கும். உள்ளிழுக்கும் காற்றை எத்தனை விநாடிகள் நுரையீரலுக்குள் சிறைப்பிடித்து வைத்திருக்க முடியும், வெளியிட்டபின் எத்தனை விநாடிகள் காற்றை உள்ளிழுத்துக்கொள்ளாமல் தாக்குப் பிடிக்க முடியும் என்று இந்தப் பயிற்சியின் பரிமாணம் விரிவடையும்.
இவ்வாறு காற்றை உள்ளிழுப்பதை ‘பூரகம்’ என்றும், வெளியிடுவதை ‘ரேசகம்’ என்றும் சொல்வார்கள். நீண்டநேரம் மூச்சுக்காற்றை உள்ளே இருத்தி வைத்துக்கொள்வதையும், வெளியேற்றிய பிறகு நீண்டநேரம் உள்ளிழுக்காததையும் ‘கும்பகம்’ என்பார்கள்.
நிதானமான சுவாசம் மனதை அமைதிப்படுத்துவதோடு, ரத்தக் கொதிப்பையும் உண்டாக்குவதில்லை, பிற எந்த உடற்கூறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது இக்காலத்திய அனுபவ உண்மை. இதனை கிருஷ்ணன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார், அர்ஜுனனுக்கு அறிவுறுத்தும் விதமாக.
இந்த மூச்சுப் பயிற்சியின் (பிராணாயாமம்) தொடர்ச்சிதான் தியானம். மூச்சை உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் மற்றும் அதேபோல வெளியே விடுவதற்கும், உள்ளிழுப்பதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் - இவற்றை ஆழ்நிலை தியானத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம். இப்படி சுவாசம் நிற்கும் விநாடிகளில் ‘பரம’ ஆனந்த நிலை ஏற்படுகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்நிலையை பலமுறை எட்டியவர் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாலைந்து நாட்களுக்குக்கூட அவர் அப்படியே உணர்வற்றுக் கிடப்பாராம். சுற்றி நிற்பவர்கள் திகைத்துப் போவார்கள். அவருடலில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகமும் வந்துவிடும். மெல்ல அவர் உடலை ஸ்பரிசிக்கும்போது அது சூடாக இருப்பதிலிருந்து அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நிம்மதியடைவார்களாம். வெகு நாட்கள் நீடிக்கும் அந்த பரமானந்த சமயங்களில் அவரை ‘எழுப்ப’ வேண்டியிருக்கும் என்பார்கள் அவரது சீடர்கள்.
உண்மைதான். சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் அந்த ஓரிரு விநாடிகளில் நம் சிந்தனையும் கட்டுப்படுகிறது. ஆமாம், அந்த நேரத்தில் நாம் முற்றிலும் ‘ப்ளாங்க்’ ஆகிவிடுகிறோம். ஆனால், அந்த நிலை நீடித்திருக்க முடியாது என்பதால், நுரையீரல் காற்றுக்காக ஏங்கித் திணறும் என்பதால், நம் இயல்பான சுவாசத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், அந்த சூன்யம், ப்ளாங்க்னஸ், ஒரு நல்ல அனுபவம். ஒரு பயிற்சியாக இதனை மேற்கொண்டோமானால் அந்தப் பயிற்சி விநாடிகளிலாவது நாம் சிந்தனை வசப்படாமல் இருக்க முடியும், அதன்மூலம் புலன்களின் மீதான மனதின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும்.