Anmiga katturai 
தீபம்

துளசி செடியாக மாறிய பிருந்தா - இதன் பின்னணிதான் என்ன?

மும்பை மீனலதா

ந்து மதத்தில் ஒரு தெய்வமாக போற்றப்படும் துளசிக்கு,  ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்த 11 அல்லது 12 ஆவது நாளில் விவாஹம் நடைபெறுகிறது. இவ்வருடம் 12/11/செவ்வாயன்று வருகிறது.

இதன் பின்னணிதான் என்ன..?

துளசி விவாஹத்தைப் பற்றிய புராணக்கதையும், அதன் சடங்குகளும் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்து வேதத்தின்படி, துளசி செடியானது "பிருந்தா" (பிருந்தா; துளசியின் இணைச்சொல்) என்ற பெண்ணாவாள். அவள் சலந்தர் என்ற அசுர மன்னனை மணந்தாள். தவிர,  விஷ்ணு மீதுள்ள பக்தியாலும், ஈடுபாட்டாலும் யாராலும் வெல்ல முடியாதவளாக ஆனாள். தேவர்களாலும் சலந்தரை தோற்கடிக்க முடியவில்லை. 

எனவே, அவர்கள் மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவிடம் இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சலந்தர் போருக்குப் புறப்படும்போது பிருந்தா அவனது வெற்றிக்கு வேண்டிக்கொண்டாள். 

அச்சமயம்,  விஷ்ணு சலந்தர்போல மாறுவேடமிட்டு அவளை நாடினார். வந்திருப்பது சலந்தர் என எண்ணி விஷ்ணுவின் பாதங்களைத் தொட்டாள். அவளது உறுதி குழைந்து போனதால், சலந்தர் தனது சக்தியை இழந்து சிவனால் கொல்லப்பட்டான். மேலும், அவனது தலை பிருந்தாவின் அரண்மனையில் விழுந்தது. இதைப் பார்த்த அவள், தன்னுடன் இருப்பது தன் கணவன் அல்ல, விஷ்ணு என்பதை உணர்ந்தாள்.

கோபடைந்த பிருந்தா விஷ்ணுவை சாலிகிராமமாக மாறவும், அவரது மனைவி லட்சுமியைப் பிரிந்து செல்லவும் சபித்தாள். இதனாலதான் தனது இராமாவதாரத்தில், அசுர மன்னன் இராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவி சீதையிடமிருந்து பிரிக்கப்பட்டாரெனக் கூறப்படுகிறது. 

பிருந்தா பின்னர் கடலில் மூழ்கி இறந்தாள். மேலும் தேவர்கள் அவளது ஆன்மாவை ஒரு தாவரத்திற்கு மாற்றினர். அதுவே பின்னர் துளசி என்று அழைக்கப்பட்டது.

அடுத்த பிறவியில் பிருந்தாவை மணக்க விஷ்ணுவின் ஆசீர்வாதத்தின்படி, விஷ்ணு - சாளகிராமம் வடிவில் - பிரபோதினி ஏகாதசி அன்று- துளசியை மணந்தார். இந்த நிகழ்வின் நினைவாக, துளசி விவாஹம் நடத்தப்படுகிறது.

துளசி கல்யாண விபரங்கள்:

இந்துப் பண்டிகையாகிய துளசி கல்யாணத்தில்,  சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக்கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது.

துளசி விவாகமானது இந்து மதத்தில் பருவமழையின் முடிவையும் திருமண பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

விஷ்ணு/கிருஷ்ணருடன் நடக்கும் துளசியின் திருமணம் பாரம்பரிய இந்து திருமணத்தை ஒத்திருக்கிறது. திருமண விழாவானது,  வீடுகளிலும் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. திருமண நாளில் சடங்கு தொடங்கும் மாலை வரை விரதம் அனுசரிக்கப்படுகிறது.

வீடுகளில் செய்யப்படும் விதம்:

வீட்டின் முற்றத்தைச் சுற்றி ஒரு மண்டபம் கட்டப்பட்டு,  அங்கு துளசி செடி முற்றத்தின் மையத்தில் துளசி பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் செங்கல் பூச்சுடன் நடப்படுகிறது. பிருந்தாவின் ஆன்மா இரவில் தாவரத்தில் தங்கி இருப்பதாகவும், காலையில் வெளியேறுவதாகவும் நம்பப்படுகிறது. மணமகள் துளசிக்கு புடவை, காதணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. பொட்டு, மூக்குத்தியுடன் கூடிய மனித காகித முகம் துளசியுடன் இணைக்கப்படுகிறது. மணமகனாக ஒரு பித்தளை உருவம் அல்லது விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் படம் அல்லது சில நேரங்களில் பலராமன் அல்லது அடிக்கடி சாளகிராமம் கல் இருக்கும். திருமணத்திற்கு முன் விஷ்ணு, துளசி இருவரும் பூக்களாலும், மாலைகளாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டு,  விழா சமயம்,  பருத்தி நூல் மாலை மூலம்  இணைக்கப்படுகின்றனர்.

உபரி தகவல்கள்:

இந்தியாவின் சௌஞ்சாவில் உள்ள பிரபு தாமில், துளசி விவாஹத்தை முழு கிராமமும் சேர்ந்து கொண்டாடுகிறது. 

கார்த்திகை ஏகாதசி முதல் திரயோதசி வரை,  மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ராமசரிதமானஸ் / ராமாயண சரித்திரம் போன்ற  வேத கோஷங்களுடன் கிராமவாசிகளால் திருவிழா தொடங்கப்படுகிறது.   

இரண்டாவது நாள் சோபா யாத்திரையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்புப் பிரசாதமான பொங்கல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. 

மூன்றாவது நாள் "திலகோத்சவம்" என்றும் விஷ்ணு மற்றும் தேவி பிருந்தாவின் "விவாகோத்சவம்" என்று கொண்டாடப்படுகிறது. கிராம மக்கள் 'சப்பன் போக்' எனப்படும் 56 வகையான பிரசாதங்களை தயாரித்து அனைவருக்கும் விநியோகிக்கின்றனர். அதன்படி அனைத்து சாதியினரும் இந்தக் கல்யாணத்தில் பங்கேற்கின்றனர். இந்த பண்டிகையை கொண்டாட பீகாரிலிருந்து துறவிகள், மகான்கள் உட்பட பல பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.

திருமணச் செலவுகளை பொதுவாக மகள் இல்லாத தம்பதியினர் ஏற்கிறார்கள். அவர்கள் இந்தத் திருமணத்தில் துளசியின் பெற்றோராக இருந்து செயல்படுகிறார்கள். மகள் துளசியை கிருஷ்ணருக்கு கன்யாதானம் கொடுப்பது தம்பதியருக்கு புண்ணியமாகக் கருதப்படுகிறது. 

துளசி விவாஹத்திற்கு அளிக்கப்படும் காணிக்கைகள் சடங்குக்குப் பிறகு  பிராமண பூசாரி அல்லது பெண் துறவிகளுக்குத் தானமாக வழங்கப்படுகின்றன.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT