தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை - மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள கொள்ளுக்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாதர் திருக்கோயில். பழைமையும் பெருமையும் மிகுந்த சிவாலயங்கள் பல உண்டு. அதில் சில குக்கிராமங்களில் சிதிலமடைந்து உள்ளன. அப்படி ஒரு ஆலயத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக பணியாற்றியவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் வெளியூருக்குப் புறப்பட்டார். அப்படிச் சென்ற வாதவூரரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய திருத்தலம் திருப்பெருந்துறை. அந்த ஆலயம் ஆவுடையார் கோயில் என்றும், அத்தல இறைவன் ஆத்மநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் அது.
குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தளபதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்கக் கொடுத்த பணம் கோயில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது?’ என்று நினைத்து, இறைவனிடம் தன்னுடைய நிலையைச் சொல்லி இறைஞ்சினார்.
இதையடுத்து, இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோயில் போன்று, சிறிய ஆவுடையார் கோயில் அமைந்திருக்கிறது. திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் திருப்பெயரும் ஆத்மநாதர்தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார்.
ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையின் தென்புறம் விநாயகர், வட புறம் வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தின் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோயில் தெற்கு பிராகாரத்தில் தென்முகமாக யோக தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
வடக்கு பிராகாரத்தில் குருந்த மரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலின் எதிர்ப்புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறுகிறது.